01 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398930181&archive=&start_from=&ucat=1&
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் சதியா? (வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 01 மே 2014, 04:59.53 AM GMT +05:30 ] |
சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயிலில் 2 வெடி குண்டுகள் தொடர்ந்து வெடித்ததில் இளம் பெண் ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். |
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 9வது நடைமேடைக்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் சுவாதி என்ற 22வயது பெண் உயிரிழந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் காயமடைந்த 12 பேர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், வெடித்த இரு குண்டுகளும் குறைந்த சக்தி கொண்டவை என்றும் குண்டுவெடிப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
சிகிச்சை பெறுபவர்கள் நலம்:
குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சுகாதார செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பழ.கருப்பையா எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள். காயம் அடைந்தவர்களில் ஒருவருக்கு மட்டும் கழுத்தில் பலத்த காயம் உள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது என்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்:
இந்த குண்டுவெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் கைவரிசையா?
இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று தெரியாத நிலையில், பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாத கும்பல் இந்த குண்டுவெடிப்பை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
|
http://www.newindianews.com/view.php?20yOlJdbcS40624e2eMQ3022YmD3ddcfDmA30eM6AKae4U04A4cb3lOm23 |
Geen opmerkingen:
Een reactie posten