தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 maart 2014

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய முச்சக்கர வண்டி சாரதி!

ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை 26ம் திகதி வரை நீடித்தது!
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 05:53.53 AM GMT ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன்,  7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 26ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த வாரம் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கோரியது.
அப்போது, அரசின் பதில், ஆவணங்களை விட குற்றவியல் தண்டனைச் சட்ட அம்சங்களே முக்கியம் என்றும், மரண தண்டனை குறித்து குற்றவியல் சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய முச்சக்கர வண்டி சாரதி!
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 05:47.58 AM GMT ]
14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து நேற்று புதன்கிழமை  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வழமையாக பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த மாணவி சந்தேக நபரின் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
சந்தேக நபர் மாணவியை பாடசாலைக்கு அழைத்துச் செல்லாது நுரைச்சோலை பிரதேசத்தில் உள்ள அவரது உறவினர் ஒருவரின வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை மாணவியின் சகோதரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இளம் கர்ப்பிணிப் பெண் கொலை: மாமனாருக்கு விளக்கமறியல்
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 11:57.19 AM GMT ]
இளம் கர்ப்பிணிப் பெண்ணொருவரைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரொருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொம்மாதுறைக் கிராம வாசியான சுதாசங்கர் ஜனனி (வயது 18) என்பவர் படுகொலை செய்யப்பட்டு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் - கித்துள் காட்டில் போடப்பட்டிருந்தார்.
இக்கொலை தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வந்த கரடியனாறு பொலிஸார், கொல்லப்பட்ட பெண்ணின் மாமன் முறையான ஏ.சின்னத்தம்பி என்பவரை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரிப் பகுதியில் வைத்து கடந்த 3ம் திகதி கைது செய்திருந்தனர்.
சந்தேகநபரை பொலிஸார், நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 12ம் திகதி வரை சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten