திருப்பதி பிரதர்ஸ் சார்பாக வெளியிடப்பட்ட இனம் திரைப்படம் இன்று முதல் (31) திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும். இதனால் ஏற்படும் நட்டத்தைத் தாண்டியும் மனித உணர்வுகளையும் மக்களையும் நேசிப்பதிலேயே இந்த முடிவை எடுக்கிறேன் என்று லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து அகதியாக வந்த ஒரு பெண்ணின் கதையை ‘இனம்’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருப்பதாக சொன்னார் சந்தோஷ் சிவன். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கி வெளியிட்டது.
இத்திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் தொடர்பில் தமிழர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அவர்களின் கோரிக்கையால் சில காட்சிகளை நீங்குவதாகவும் அறிவித்தார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால், இத்திரைப்படத்தை தடை செய்ய எதிர்ப்புகள் தொடர்ந்து வருகிற நிலையில் திரைப்படத்தை நிறுத்திவிடுகிறேன் என்றும் அறிவித்திருக்கிறார் லிங்குசாமி.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லிங்குசாமி தெரிவித்திருப்பதாவது,
‘இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றியில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.
தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்குவது மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, இலாப நட்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன். அப்படி ஒரு சினிமா நேசனாகவே இனம் படத்தையும் வாங்கி வெளியிட்டேன்.
அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். ஆனால் அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சிலரின் மனதை புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன். அரசியல் ரீதியான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன.
இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காகவும் எதற்காகவும் அச்சப்படுகிறவன் இல்லை நான். ஆனால் இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப்பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.
எனவே தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க இனம் திரைப்படத்தை நான் நிறுத்துகிறேன்.இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும் மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதிலேயே இந்த முடிவை எடுக்கிறேன்’ என்று லிங்குசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/63919.html
Geen opmerkingen:
Een reactie posten