விறுவிறுப்பாக இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் முக்கியமான கட்டம் முடிவுக்கு வந்தது. உலக நாடுகள் பலவற்றின் பார்வைகளும் எதிர்பார்ப்புக்களும் ஜெனிவாவை நோக்கியே குவிந்து கிடந்தன.
இதயத்தின் நாடித்துடிப்பு வேகமாக அடித்து ஓய்ந்ததைப் போன்றுள்ளது ஐ.நா கூட்டத்தொடர்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரமான, மனிதாபிமானத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் அதன் பின்னராக கடத்தல்கள், காணாமல்போகச் செய்தல், அச்சுறுத்தல் போன்றவை தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென பலத்த கோரிக்கைகள் பல தரப்பாலும் ஐநாவில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் இணைந்து மனித உரிமைகள் கூட்டத் தொடரில் யோசனையொன்றினை முன்வைத்திருந்தன.
நேற்று முன்தினம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட இத்தீர்மானத்தினை, 47 ஐ.நா உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிராக 12 நாடுகளும், நடுநிலையாக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன.
கடந்த இரு ஆண்டுகளைப் போல் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இம்முறையும் அநேக நாடுகள் வாக்களிக்குமெனவும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டு செல்லமெனவும் தமிழர் தரப்புக்கள் எதிர்வு கூறியிருந்தன.
11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தில் முக்கியமாக, ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை நடத்த வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டியது, இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கால வரையறைக்குள் ஐ. ந. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை முடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விடயமாகும்.
கடந்த ஆண்டுகளைப் போன்று, இம்முறையும் அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களை ஏமாற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி, இலங்கைத் தமிழர்களுக்கு என்னதான் நடந்தாலும், தனது முடிவிலிருந்து மாறவே இல்லையென்பதை அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா எடுத்துக் காட்டிவிட்டது.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த சமயம் மௌனம் காத்து வந்த இந்தியா, நேற்று போட்டுடைத்து விட்டது.
இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் சர்வதேச விசாரணைகளை முற்றாக நிராகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்குள் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும், இலங்கையை தனது பிடியில் சிக்க வைக்கவும் அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஊடாக சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை பிரயோகிக்கித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் வேறொரு கோணத்தில் தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
என்னதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டாலும், ஒற்றைக் காலில் நின்று இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்வதில்லை. உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் மூக்கை நுழைப்பதாகவும், தற்போது நடைபெற்றுவரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் கூறி, மக்கள் மத்தியில் ஆதரவைத்திரட்டி வருகிறது இலங்கை அரசு.
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட இந்த மனித உரிமை ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் காணாமல் போன தனது மகனை மீட்க போராடி வந்த தாய் மற்றும் அவரது மகளை அரசாங்கம் கைது செய்து தடுப்பில் வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வீடு வீடாக சென்று தேடுதல்களை நடத்தி குடும்பங்களின் விபரங்களை சேகரித்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைத்த சந்தர்ப்பத்தில், இவ்வாறு அச்சமின்றி இலங்கை அரசாங்கம் செயற்பட காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மீண்டும் புலிகளுக்கு உயிரூட்டி, புலி என்ற போர்வையில் அரசாங்கத்தின் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், இலங்கைக்குள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்விசாரணை தவறும் பட்சத்தில், அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணை முன்வைக்கத்தான் போகிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால், ஓகஸ்ட் 31 ம் திகதியுடன், ஐ.நாமனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் நிறைவு பெறுகின்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சினை சர்வதேச அளவில் பேசுபொருளாக மட்டுமே இருக்குமா? என்ற கேள்வி அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளமை குறிப்பித்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyDRdLWir6.html
Geen opmerkingen:
Een reactie posten