சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டிற்கு மாறான தீர்மானம் ஒன்று ஐ.நா மனித உரிமை அவையில் நிறைவேறியுள்ளது. ஆனால் அந்த தீர்மானத்தை இலகுவில் அமுல்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பது மிகவும் கடினமாக பணியாகவே தொடர இடமுண்டு.
இதனைக் குழப்பும் முயற்சியில் இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் முழுமையாக ஈடுபடும். சீனாவும் மறைமுகமாக ஆயுத மற்றும் போரியல் உதவிகளை தேவைப்பட்டால் சிறீலங்காவிற்கு வழங்கும். எனவே விசாரணைகளை நடாத்துவது அல்லது அதற்கு இடையூறுகளை விளைவித்தால் தாண்டுவது கடினமாகவே இருக்கும்.
இருந்தாலும் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக காலம் எடுத்தாலும் ஈற்றில் தர்மம் வெற்றி பெறும். அப்போது சிங்களப் பிரபாகரனாக மகிந்தவும் முள்ளிவாய்க்காலாக ஹம்பாந்தோட்டையும் காட்சி அளிக்கலாம். ஆனால் இது நிறைவேற நீண்ட நெடிய தடைகளையும் தாமதங்களையும் சர்வ தேச சமூகமும் தமிழ் இனமும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதரவின்றி அன்று அமெரிக்காவால் பங்களாதேஷ் யுத்தத்தில பாகிஸ்தானை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இன்றோ, இது விடயத்தில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, மாலைதீவு போன்ற நாடுகளின் தமிழரிற்கு எதிரான நிலைப்பாடு பல சதிகளாகவும் துரோகங்களாகவும் வெளிப்படும்.
காஸ்மீரிற்கான சர்வசன வாக்கெடுப்பiயும் , காஷ்மீர் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் முடிவுகளையும் குழப்பியும் தாமதித்தும் வரும் இந்தியா, அதே கைங்கரியத்தை இங்கும் அமுலாக்கும்.
எனவே பிராந்தியத்தில் எந்த நாட்டினதும் ஆதரவற்ற நிலையில் பின்லாடனை தாக்கியது போல் தாக்கினாலன்றி முறைப்படியான நகர்வுகளினால் சர்வதேச சமூகத்தால் தீவில் அழிவைத் தவிர வேறு எதையும் இலகுவில் நடாத்தி விட முடியாது. அதனைச் சாதிக்க நீண்ட காலப் பொருளாதர மற்றும் ராஜதந்திர அழுத்தங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்ட பின்னரே அது சாத்தியமாகும்.
ஆனால் இதற்கு ஒரு மாற்றுவழியும் உண்டு. அது தான் இந்தியாவில் பாரதீய ஜனதாவின் அரசை வெற்றி பெற வைப்பதாகும். அந்த அரசு அமைப்புக் கூட தமிழக கட்சிகளின் ஆதரவில் தங்கியிருந்தால் அது தர்மம் துலங்குவதை வேகமாக்கும். இதனால் இந்தியாவின் தேசிய நிலைப்பாடு முழுமையாக மாறாவிடினும் நிலை மாறும். காங்கிரஸ் இந்தியா பாரதீய இந்தியாவாக மாறினால் இந்த விசாரணைகள் துரிதமடையும்.
பாரதீய இந்திய அரசு அமெரிக்காவுடன் ஒத்துழைத்தால் ஒரு வருடத்திலேயே விசாரணைகள் விரைவுபடுத்தப்படலாம். அதனால் தான் இதற்கு சாத்தியமும் உண்டென்ற பொருளில் மேற்கண்ட தலையங்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இது தமிழர் தரப்பிற்கு போதுமானதோ அல்லது திருப்தியானதோ அல்ல. ஆனால் இதை விட்டால் வேறு மார்க்கம் எதுவும் தமிழர் தரப்பிற்கோ உலக நாடுகிளிற்கோ இல்லை என்பதே யதார்த்தம் என்பதுடன் இந்த விசாரணை முடிவு மறைமுகமாக ஆனால் பலமாக தமிழரிற்கான ஒரு அரசியல்த் தீர்விற்கான சர்வதேச மனேவியற் காலநிலையை நிட்சயம் தோற்றுவிக்கும். எனவே இதனை குறைத்து மதிப்பிடாது புலம் பெயர்ந்த தமிழ் அரசியல் விவேவிகள் பேசியும் செயற்பட்டும் வர வேண்டும்.
இன்றளவிலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவையையும் அதன் முதிர்ந்ததும் ராஜதந்திரம் மிக்க இயலுமான நகர்வுகளையும் புலம் பெயர்ந்தவர்கள் சரிவரக் கணித்துக் கொள்ள வேண்டும்.
நம் முன்னோரும் பழைய தலைமைகளும் நமக்காக செயற்பட்டு சேமித்து வைத்திருக்கும் வரலாற்றுச் சாட்சியங்களை ஐ நா முன்பும் உலகத்தின் பார்வைக்கும் புலம் பெயர் தமிழர் சமூகம் காட்சிப்படுத்த வேண்டும்.
உதாரணமாக இது வரை கால அவகாசம் கேட்ட இரு நாடுகள், இன்று சிறீலங்காவிற்கு இறைமை இருப்பதாகவும் எனவே விசாரிக்க முடியாதென்றே ஓலமிட்டுள்ளன. இந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தவறான பரப்புரையை அமரர் திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் றயல் அற் பார் வழக்கின் வாதத்தின் அடிப்படையிலும், அந்த வழக்கின் முடிவின் வெற்றித் தன்மையையும், திரு திருச்செல்வம் அவர்களின் வாதத்தையும் மீளவும் உரத்து ஒலிக்க வேண்டும்.
இந்த இறைமைக் காரணத்தை சட்ட ரீதியாகவும் சிதறடிப்பதில் கோசமெழுப்பும் அமைப்புக்கள் இறங்க வேண்டும். தேர்தல் வாக்களிப்பையும் பெரும்பான்மையின் தீவிரத்தையும் சிறு பான்மைக்கு எதிரான ஜனநாயககத்தின் கொடுமை என்பதையும், ஜனநாயக துர்ப்பிரயோகத்தையும் உலகிற்கு முன் தெளிவாக முன்வைக்க வேண்டும்.
தீவின் தேர்தல் முடிவுகள் சர்வ சட்ட, தேச சட்ட முடிவுகளை தடுக்க இயலாதவாறு பார்க்க வேண்டிய வாய்ப்பும் கடமையும் புலம் பெயர்ந்தவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வெள்ளைக் கொடியோடு நின்று அவர்கள் கேட்டபடி ராஜதந்திர வழியில் நகர முன் வர வேண்டும். அதற்கு உரிய முறையில் தேவையான வடிவில் அமைப்புக்களின் பெயர்களையும் யாப்பு விதிகளையும் ராஜதந்திரத்திற்குட்படுத்த வேண்டும்.
தற்காலிகமாக ஆவது அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். தனது அமைதிப் படைகளின் தவறுகளை மறைக்க ஏதுவாக இந்தியா விசாரணைக்கான காலத்தை ராஜதந்திர பலம் வாயிலாக தீர்மானத்தில் மாற்றிவிட்டது.
எனவே இனியும் தனது முள்ளிவாய்க்கால் பங்களிப்பை மறைக்க இந்தியா எது வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது இந்தத் தீர்மானம் வட்டுக் கோட்டைத் தீர்மானமோ, புலிகளின் தனிஈழத் தாகமோ, அமரர் ஜீ.ஜீ இன் ஐம்பதிற்கு ஐம்பதோ சமஸ்டியோ அல்லாத போதும் இவைகளை நோக்கிய ஒரு பாதைத் திறப்பாக பயன்படலாம் என்பதை புரிந்து கொண்டு தேவையானவற்றை புலம் பெயரந்த அமைப்புக்களும் மக்களும் செய்தால், விசாரணையற்ற இனக் கலவரக் கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிப்புக்களும் தீவில் தொடர்வதைத் தடுக்கலாம்.
ஆக இந்தியாவை நோக்கிய ஒரு சர்வதேச அரசியலை இனியாவது புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பிக்க வேண்டும். அது எது என்பதை எதிர் வரும் இந்தியத் தேர்தலே நிர்ணயிக்கும். முள்ளிவாய்க்காலிற்கு சற்று முன்பு நடந்த அதே இந்தியத் தேர்தல் தான் மீண்டும் இந்தப் பிரோரணை அமுலாக்கத்தையும் தீர்மானிக்கப் போவதை நாங்கள் சரி வரப் புரிந்து கொள்வோமாக தேவை, விவேகம் கோசமும் கொடி பிடிப்புமல்ல.
மே 2009 இற்குப் பின்பு இன்றைய செய்தியைக் கேட்டுத் தான் இன அழிப்பிற்குள்ளான அனைத்து ஆன்மாக்களும் ஓரளவாவது ஆறுதலடைந்திருக்க இயலும். இதனைக் கனிய வைப்பதில் புலம் பெயரந்தவர்களின் விவேகமே பங்களிப்பாக இயலும்.
பூநகரான் குகதாசன்
kuha9@rogers.com
kuha9@rogers.com
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjv2.html
Geen opmerkingen:
Een reactie posten