தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

தமிழர்கள் காணிகளில் புதிதாக முளைவிடும் இராணுவப் படை முகாம்கள்: கலையரசன்

தீர்மானத்தை 24 நாடுகள் எதிர்த்தன என்று அரசாங்கம் கூறுவது, செந்தில் -கவுண்டமணியின் வாழைப்பழக் கணக்கு போன்றது!- அரியம் எம்.பி.
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 02:56.06 PM GMT ]
ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தில் அரசாங்கம் வெற்றியடைந்து விட்டதாக காட்டுவதற்கு செந்திலும் கவுண்டமணியும் சினிமாவில் வாழைப்பழம் வாங்கிய கணக்கினைப் போன்று அதனைக் காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஆதரித்து 23 நாடுகளும், அதனை எதிர்த்து 12 நாடுகளும், ஏனைய 12 நாடுகளும், நடுநிலமை வகித்து வாக்களித்திருந்தன. இதுதான் அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பாகும்.
இதனை சினிமாவில் வரும் வாழைப்பழக் கணக்கினைப் போன்று இந்த அரசாங்கம் காட்ட முயல்வதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது என அரசதரப்பு ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக கருத்துக்கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
ஜெனிவாத் தீர்மானத்திலே அரசாங்கம் வெற்றியடைந்து விட்டதாக சிங்கள மக்களிடத்தே காட்டுவதற்கு செந்திலும் கவுண்டமணியும் சினிமாவில் வாழைப்பழம் வாங்கிய கணக்கினைப் போன்று நடைமுறையில் அதனைக் காட்டி சிங்கள மக்களை ஏமாற்ற நினைக்கின்றார்கள்.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 12 நாடுகளுடன் நடுநிலைமை வகித்த 12 நாடுகளையும் கூட்டி மொத்தம் 24 நாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவான நாடுகள் என காட்டி தப்பிக்க நினைப்பது விந்தையான செயலாக பார்க்க வேண்டி இருக்கின்றது.
அப்படியானல் தமிழர்;களைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் 23 உடன் நடுநிலைமை வகித்த 12 நாடுகளையும் சேர்த்தால் எத்தனை நாடுகள் வரும் என்பதனை உரியவர்கள் கணக்கிட்டுப் பார்த்தல் புரியும் தமிழர் தரப்பில் எத்தனை நாடுகள் ஆதரவளித்திருக்கின்றது என்பது.
நடுநிலைமை வகித்த நாடுகளை கணக்கில் எடுப்பதன் மூலம் சிங்கள மக்களை அறிவில்லாதவர்கள் என காட்ட நினைக்கின்றார்கள். இதனை அந்த இனத்தில் உள்ள புத்திஜீவிகள் உரியவர்களுக்கு எடுத்துக்கூறி உண்மையான கணக்கினை புரிய வைக்க வேண்டியது அவர்களினது கடமையாகும்.
ஊடகங்களை எடுத்து நோக்கும் போதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஊடகங்கள் தவறான கணக்கெடுப்பையே காட்டுகின்றார்கள். இச்செயற்பாடானது ஊடக தர்மத்தை மீறும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWit4.html
தமிழர்கள் காணிகளில் புதிதாக முளைவிடும் இராணுவப் படை முகாம்கள்: கலையரசன்
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 03:03.44 PM GMT ]
2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அம்பாறை மாவட்டத்திலே பல புதிய இராணுவ படை முகாம்கள் உருவாக்கப்படுவதும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் நிகழ்வும் தொடர்ந்து கொண்டு செல்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் இராணுவ முகாங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துக் கூறும்போதே இதனைத் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை வானொலி ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான 43 பேருக்கு சொந்தமான 50 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து தன்வசப்படுத்தி பாரிய கட்டிடங்களை அமைத்துள்ளார்கள்.
இந்தக்காணியானது தமிழ் மக்களுக்கு சொந்தமானதுடன், 30 வருடங்களுக்கும் மேலாக அவர்களுடைய பராமரிப்பிலே இருந்து வந்துள்ளதுடன், அதற்கு உரித்தான சகல ஆவணங்களும் அவர்களிடம் தற்போதும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மல்வத்தையை அண்டிய பகுதியில் (விவசாயப் பண்ணை இருந்த இடம்) பாரியளவிலான படைமுகாம் இருக்கும் போது மீண்டும் ஒரு படைமுகாம் இங்கு அமைக்கு வேண்டிய தேவை தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகவே காணப்படுகின்றது.
இதே போன்று நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நீர்ப்பாசனத்திற்கு சொந்தமான 10 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை தன்வசப்படுத்திய இராணுவத்தினர் தங்களது நிலைகளைப் பலப்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றனர்.
அத்தோடு 2012ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை, கல்முனை, காரைதீவு, திருக்கோயில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல இடங்களிலும் புதிய புதிய படைமுகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின்போது பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் விவசாயம் செய்து வந்த தொட்டாச்சுருங்கி வட்டையில் 183 ஏக்கரும், மலையடி வட்டடையில் 197 ஏக்கர் காணிகளும் புத்தங்கள பௌத்த பிக்கு ஒருவரினால் அங்குள்ள மக்களிடம் இருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டு அவர் சார்ந்த இனத்தினைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்தக்காணிக்குரிய அனுமதிப் பத்திரம் பி.எல்.ஆர் உட்பட அனைத்து ஆதாரங்களும் இந்த மக்களிடத்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு தமிழ் மக்கள் விவசாயம் செய்வதற்காக நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் பயங்கரவாத பிரச்சினையை காரணம் காட்டி அப்போது விவசாயம் செய்ய விடாமல் தடுத்து விட்டனர். ஆனால் தற்போது அமைதி நிலவுவதாக கூறும் இவர்கள் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் இருப்பதன் உள்நோக்கம்தான் என்ன? என்று புரியவில்லை.
இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது கிழக்கு மாகாணத்தில் இராணுவ நிலைகளை பலப்படுத்துவதும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படும் நடவடிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது.
ஏற்கனவே யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித்திலும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்யாத இந்த அரசு தமிழ் மக்களது நிலங்களை மாத்திரம் சூரையாடுவதில் குறியாக இருந்து செயற்படுகின்றது என்பது மாத்திரம் புலனாகின்றது எனவும் கூறினார்.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWit5.html

Geen opmerkingen:

Een reactie posten