ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று, இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மனு ஒன்றை இந்திய உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசாங்கம் இந்திய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக அரசாங்கம் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவுக்கு பதில் மனுவாக மத்திய அரசாங்கம் இன்று மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் வேண்டும் என்றும், தன்னிச்சையாக இவ்வாறான தீர்மானத்தை தமிழக அரசாங்கம் எடுப்பது தவறு என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசாங்கத்தின் பதில் மனுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் கோரியுள்ளது.
இந்த வழக்கு நாளை மறுதினம் மீண்டும் இந்திய உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWko5.html
Geen opmerkingen:
Een reactie posten