தமிழர் விடுதலை கூட்டணியின் செயளாலர் நாயகம் ஆனந்தசங்கரி ஐயா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஊடகத்தில் பார்த்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
ஆனந்தசங்கரி இந்தியப் பிரதமருக்கு எழுதி அனுப்பிய கடிதம் தொடர்பாக கருத்து கூறுகையில் இதனைக் கூறினார். இது தொடர்பாக மேலும் கருத்துக் கூறுகையில்.
இலங்கையிலே இடம்பெற்ற இனப்படுகொலையானது இந்த அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு அரங்கேறிய ஒரு செயற்பாடாகும்.
யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் கழிந்தும் இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எந்தத் தீர்வும் கிடைத்தபாடில்லை. அதற்காக வேண்டி சர்வதேசத்தினை நாடியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆனந்தசங்கரி ஐயாவின் கடிதங்கள் வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதுபோல் இருக்கின்றது.
சர்வதேசத்தினை நாடி சர்வதேச விசாரணை ஒன்று கட்டாயம் நடைபெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களது விருப்பாகும். தமிழர்களை சிறிதளவேனும் கருத்தில் எடுக்காத ஐயாவின் கடிதம் எல்லோர் மனங்களையும் நோகடிக்கச் செய்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவினால் இரண்டு தடவைகள் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு பிற்பாடும் ஆனந்தசங்கரி வழமை போன்று சர்வதேச விசாரணை ஒன்று தேவையில்லை என்றும், மனித உரிமைகள் ஆணையாளர் மேன்மை தங்கிய நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் 8வது சரத்தினை திருத்துமாறும் ஐயா கூறியிருக்கின்றார்.
தன்னை த.தே.கூட்டமைப்பு ஒதுக்கியதாகக் கூறும் இவர் கூட்டமைப்பு எடுக்கும் முடிவிற்கு முரணான கருத்துக்களை தெரிவித்து எடுத்த எடுப்பில் கடிதங்களை எழுதும் ஐயாவை இனிமேலும் த.தே.கூட்டமைப்பிற்குள் வைத்திருப்பது பொருத்தமான செயற்பாடா என்பதனை தமிழ்மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
த.தே.கூட்டமைப்பு எந்த முடிவினை எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவதும் முரணாகப் பேசுவதும் இவரது செயற்பாடாகப் போய்விட்டது இவர் தலையிருக்க வால் ஆடினால் கூட்டமைப்பு அழியும் என்று கூறியிருந்தார். அப்படியானால் வால் இருக்க தலையாடியதனால்த்தான் த.வி.கூட்டணியை மக்கள் வடமாகாணசபை தேர்தலிலே நிராகரித்திருந்தார்களா?.
வடமாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பில் உள்ள 5 கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட்ட போதும் த.வி.கூட்டணி சார்பாக போட்டியிட்ட எவரும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை குறிப்பாக அதன் தலைவர் சங்கரியின் சொந்த மாவட்டமான கிளிநொச்சியிலே தோல்விகண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆயுதப் போராட்ட காலத்திலும் சங்கரி ஐயா எவ்வாறு நடந்து கொண்டார் என்பதனை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்கின்றான். கடிதம் எழுதி காலத்தை போக்கும் இவர், த.தே.கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டு இந்த அரசாங்கத்தினை காப்பாற்ற முயல்வது அவரது துரோக அரசியலா? தியாக அரசியலா? என்பதனை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
80 வயதினை கடந்து 50வருட அரசியல் சாணக்கியம் பெற்ற சங்கரி ஐயாவிற்கு அரசியல் அனுபவம் அற்ற என்னைப் போன்றவர்களை இவ்வாறு எழுத வைத்தமையையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன்.
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யக்கூடாது என்ற பழமொழி ஒன்று இருக்கின்றது. இதனை இவர் அறிந்திருப்பது கட்டாயமாகும். இன்று தமிழ் மக்களுக்காக புலம்பெயர் அமைப்புக்களும் சர்வதேசமும், த.தே.கூட்டமைப்பும் ஒன்றித்து அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் அதனை கெடுப்பதற்காக த.தே.அரசியலை பேசிக்கொண்டு இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிரல் செயற்படும் சங்கரி போன்றவர்களை த.தே.கூட்டமைப்பில் தொடர்ந்தும் வைத்திருப்பதால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்பதனை த.தே.கூட்டமைப்பின் ஒற்றுமையைப்பற்றி பேசும் ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் புரிந்து கொள்ளவேண்டும்.
5பேர் உறுதியுடன் ஒற்றுமையாக இருப்பதனைவிட ஒற்றுமை என்ற பெயரில் 50பேரை இணைத்து இவ்வாரான முரண்பாடான கருத்துக்களை கூறுவதால் தமிழ் மக்களுக்கான விடிவு என்பது எட்டாக்கணியாகவே அமைந்து விடும்.
இன்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் இந்த நாட்டிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு கட்டாயமாக சர்வதேச விசாரணை தேவை இதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் இந்த நாட்டிலே இடம்பெற்ற கொடூர யுத்தத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று ஏங்கித் தவிக்கும் இந்த காலகட்டத்தில் இவர் போன்றவர்களின் கடிதங்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkt7.html
Geen opmerkingen:
Een reactie posten