தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 maart 2014

நெற்றியில் சுடப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் பல எலும்புக்கூடுகள் !




தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்காலுக்கு தெற்காக உள்ள நந்திக்கடல் ஏரிக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார். பச்சை உரைப்பை ஒன்றில் கட்டியவாறு நெற்றிப் பகுதியில் குண்டு துளைத்த துவாரத்துடன் மண்டையோடு ஒன்று இருப்பதாக அப்பகுதி தொழிலாளியொருவர் தெரிவித்தமைக்கு அமைய செவ்வாய்க்கிழமை (04) அவ்விடத்திற்கு சென்று பார்த்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதன்போது, அப்பிரதேசங்களில் பெருமளவு மனித எச்சங்கள் காணப்பட்டமையினைக் கண்ணுற்றேன் என்றும், அத்துடன் இவ்வாறு காணப்படும் மனித எச்சங்கள் உரைப்பையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன், சில மண்டையோடுகளில் தூப்பாக்கியால் சுடப்பட்ட துவாரங்களும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அந்த பிரதேசத்தில் 30 அடி நீளமான நிலப்பகுதியில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட தடயங்கள் தென்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்றவேளை, இலங்கை இராணுவத்தினரே பச்சை நிறத்திலாலான உரைப் பைகளை பாவித்திருந்தார்கள். அவர்கள் மண் மூடைகளாக இந்த பச்சை நிற உரைப் பைகளையே பாவித்து வந்தார்கள். தேசிய தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட இடத்தில் கூட இவ்வகையான உரைப் பைகள் காணப்பட்டதை பலர் அவதானித்திருக்க முடியும். நெற்றியில் சூட்டுக் காயங்களோடு இவை காணப்படுவதால், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலிகளா இவர்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இலங்கை இராணுவம் இழைத்த கொடுமைகள் பலவற்றை நாம் வீடியோவாகப் பார்த்து இருக்கிறோம். இவை அனைத்தும் அதன் எச்சங்களா தற்போது ஆதாரமாக மாறி வருகிறது.

இவை தொடர்பான மேலதிகச் செய்திகள் விரைவில் வீடியோ வடிவில் வெளியாகும். அதனை அதிர்வு இணையம் விரைவில் பிரசுரிக்கவுள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.


Geen opmerkingen:

Een reactie posten