தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 maart 2014

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: தமிழர்களை விழிப்புடன் இருக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை!!!

எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் ஜெனீவா தீர்மானத்திற்கு சென்றுகொண்டிருக்கும் காலத்தில் தமிழ் மக்கள் விழிப்புடன், போராட்டத்தின் இலக்கை அடையும் வரை உறுதியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஜெனிவாத் தீர்மானத்திற்கு எதிராக கல்முனையில் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் நேற்று த.தே.கூட்டமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பொன்றை கல்முனையில் நடத்தியிருந்தது.
இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,
எதிர்வரும் 09ம் திகதி ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒரு பேரணியை நடாத்துவதற்கு அம்பாறையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் செய்திருக்கின்றார்.
தமிழ் மக்களை பிழையான வழியில் பிழையான தகவல்களைக் கொடுத்து அவர்களை அந்த பேரணிக்கு அழைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பல கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்தி நீங்கள் இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உண்மையில், ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது மட்டுமல்ல, அவருக்கு சிலை வைத்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பிழையான செய்திகளை கொடுத்து மக்களை ஏமாற்றாமல் மக்களுக்கு உண்மைக் கருத்துக்களை கூறி ஏன் மக்களை அழைக்கின்றோம். என்ற உண்மையைக் கூறி செயற்பட்டால் அந்த விடயங்களுக்கு எங்களுக்கு மாற்றுக் கருத்துக்களும் ஆட்சேபனைகளும் இல்லை.
எமது 64 வருட விடுதலைப் போராட்டம் அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக இடம்பெற்று இன்று சர்வதேச ரீதியாக ஓர் நிலையை எட்டியுள்ள நிலையில் ஜெனிவாவில் எமது நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதனை குழப்புவதற்காக பிழையான செய்திகள் கொடுக்கப்பட்டு, சர்வதேச ரீதயாக சென்றிருக்கும் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் எதிராக இருக்கின்றார்கள் தங்களுடன் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்த அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
இக் கூட்டத்தில், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன். பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்லரன் மாநகரசபை உறுப்பினர்களான அ.அமிர்தலிங்கம், ஜெயக்குமார், விஜயரெட்னம், கமலதாசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெனீவாத் தீர்மானங்கள் வலுவுள்ளதாக அமையும்: பொன்.செல்வராசா
இலங்கையில் குடும்ப சர்வாதிகார ஆட்சியே நிலவுகின்றது என்று உலக நாடுகள் யதார்த்த நிலையை உணர்ந்து சுயமாக விமர்சிக்கும் அளவிற்கு அரசியல் பண்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொன். செல்வராசா எம்.பி தெரிவித்துள்ளார். 
கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்தின் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோதே பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இவ்வாறு தெரிவித்தார்.
கே.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து பேசுகையில், 
சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அகில உலகமே அக்கறை கொண்டுள்ள இவ்வேளையில், அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற எமது தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்க்கு நியாயம் கிடைக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கின்ற அரசுக்குச் சார்பாக சர்வதேசத்திடம் பிரசாரம் செய்ய சென்றிருக்கின்றார்கள்.
அபிவிருத்தி என்ற கவர்ச்சியைக் காட்டி மக்களின் உணர்வை மழுங்கடிக்க இங்கேயும் கொக்கரிக்கின்றார்கள். இனத்திற்காக போராடினோம் என்ற முத்திரையுடன் அரசியல் செய்யும் இவர்கள் அரசின் அடிவருடிகளாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் இழப்புக்கள், துன்ப, துயரங்கள், பாதிப்புக்கள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் முழுமையாக மறந்தவர்களாக அரசின் கைப் பொம்மைகளாக, மக்களை மறந்து பதவிக்காக அரசுக்கு கைமாறு செய்பவர்களாகவே இவர்களின் செயற்பாடுகள் தொடர்கின்றன.
சர்வதேச அரங்கில் இன்று எமது பிரச்சினை மேலோங்கி வருகின்றதென்றால், அதற்கு வழிவகுத்தவர்கள் யார்?
கூட்டமைப்பு தெளிவாக உலக அரங்கில் தனது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றது. ஒன்று சர்வதேச விசாரணை. இதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக விரும்பகின்றது. இதற்கு மாற்றீடாக ஐ.நா சபையின் மேற்பார்வையுடன் உள்ளூரில் ஒழுங்கான விசாரணை. இதில் ஒன்று நிச்சயமாக நிறைவேறத்தான் போகின்றது.
ஆனால் இம்முறை தீர்மானங்கள் செயற்படுத்த வேண்டிய வலுவுள்ளதாகவே அமையப் போகின்றது. இந்த தீர்மானங்களின் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வும் ஆரம்பமாகத்தான் போகின்றது.
எதிர்வரும் 28ந் திகதி முக்கியமான ஒரு திருப்பம் தமிழ் மக்களுக்கு ஏற்படத்தான் போகின்றது என்ற நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இருக்கின்றது என்றார்.
http://news.lankasri.com/show-RUmsyDTbLVjq6.html

Geen opmerkingen:

Een reactie posten