தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

தமிழர் நலனில் அக்கறை கொண்டு அரசு செயற்பட வேண்டும்! யாழ். ஆயர்

ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட திரும்பிச்செல்ல விடமாட்டோம்! அமைச்சர் ஐங்கரநேசன் (படங்கள் இணைப்பு)
வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும். ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது என உறுதியாகக் கூறுகிறேன் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இழைய வளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக்குட்டிகளை விநியோகிக்கும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் சகிலாபானு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமது விவசாயிகள் தங்களது பண்டைய பாரம்பரிய அறிவோடு நவீன தொழில்நுட்பங்களையும் உள்வாங்கினால் மாத்திரமே அதிஉச்சப் பயனைப் பெறமுடியும். அதன் அடிப்படையிலேயே இழையவளர்ப்பு என்ற புதிய உயிர்த்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக் குட்டிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கும் விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் தூய விஞ்ஞானத்துக்கான நிறுவனம் என்ற அமைப்பிடம் இருந்து வாங்கி விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம். இதற்காக விவசாயத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபா இப்போது செலவிடப்பட்டுள்ளது.

இந்த இழைய வளர்ப்பு வாழைக்குட்டிகளை நடுகை செய்வதற்கு இப்போதுதான் பொருத்தமான பருவம். இதனை சித்திரை, வைகாசியில் நாங்கள் விநியோகித்திருக்க முடியாது. பருவத்தே பயிர் செய் என்பது போன்றுதான் ஒவ்வோரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் என்று ஒரு காலம் இருக்கின்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுமானப் பணிகள் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதால் வழமையாக சிறுபோக அறுவடை முடிவடைந்த பின்னர் ஆவணி மாதத்திலேயே நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேலைகள் ஆரம்பமாகும். இந்த வருடம் வழமைக்கு மாறாகக் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது.

பெரும் கட்டுமான பணிகளுக்கு நீரைப் பயன்படுத்தினால் வரட்சியால் அவதிப்படும் மக்கள் மேலும் துயரப்படநேரும். இதனால் குறைந்தளவு நீர்த் தேவை உள்ள வேலைகள் மாத்திரமே இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமாத்திரம் அல்லாமல் சில அபிவிருத்தித்திட்டங்களில் ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பே அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடைமுறையும் உள்ளது. இவை எல்லாம் தெரிந்திருந்தும், வடமாகாணசபை அபிவிருத்தித்திட்டங்களில் அக்கறை காட்டாததாலேயே ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் உள்ளது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. பொதுமக்கள் இதன் பின்னால் உள்ள விசமத்தனத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா வேலைத்திட்டங்களும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணாகாதவாறு கார்த்திகை, மார்கழி மாதம் முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து ஐந்து விவசாயிகளுக்கு வெங்காயச் செய்கையை மேற்கொள்ளுவதற்கென தலா 50,000 ரூபாவும், ஐந்து விவசாயிகளுக்குக் காளான் வளர்ப்பை மேற்கொள்ளுவதற்குரிய காளான் வித்திகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, வைத்திய கலாநிதி சி. சிவமோகன், அ.ஜெயதிலகா, விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

02 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409647140&archive=&start_from=&ucat=1&
தமிழர் நலனில் அக்கறை கொண்டு அரசு செயற்பட வேண்டும்! யாழ். ஆயர்
வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் , வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரனையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இருவருக்கும் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற இலங்கை ஆயர் பேரவையின் கூட்டத்தொடரின் இறுதியில் இலங்கை ஆயர்கள் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தோம்.

அங்கு ஆயர்களாகிய நாம் தற்போதைய நாட்டின் நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம். குறிப்பாக பொதுபல சேனாவுடைய அத்துமீறிய செயற்பாடுகள், இராணுவத்தின் நில அபகரிப்புப் போன்ற விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

யாழ் ஆயர் என்ற முறையில் நான் குறிப்பாக இரு விடயங்கள் பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினேன். முதலாவதாக, போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் மாகாண சபை நிறுவப்பட்டு ஓராண்டுகள் கடந்தும் சில அபிவிருத்தி நடவடிக்கைகளை தவிர்ந்த வேறு எந்த வித அரசியல் தீர்வுகளும் தமிழர்களுக்கு முன்வைக்கவோ கொடுக்கப்படவோ இல்லை.

அத்துடன் இரண்டாவதாக, தமிழர் குடிநிலங்களும், அவர்களது வணக்கத் தலங்களும் இராணுவத்தின் நில அபகரிப்புக்கு உள்ளாவதும் மிக வேதனைக்குரியது என தெரிவித்தேன்.

மாகாண சபையினரோ முதலமைச்சரோ அரசுடன் இணைந்து செயற்பட முன்வருவதில்லை. கொடுக்கப்படுகிற அழைப்புக்களை ஏற்று எந்தக் கூட்டங்களுக்கும் சமூகம் கொடுப்பதில்லை, அவர்கள் அரசுடன் இணைந்து செயற்படாதவரை எம்மால் எதையும் செய்ய முடியாது.

மக்கள் குடியிருப்புக்கள் ஒருபோதும் அபகரிக்கப்பட மாட்டாது அந்த நிலப்பரப்பு தற்போது அளவிடப்பட்டு வருகின்றது. விரைவில் உரியவர்களுக்கு சொந்த நிலங்கள் வழங்கப்படும். மக்களின் வணக்கத் தல பிரதேசங்களும் விரைவில் மீளக் கையளிக்கப்படவுள்ளது என ஜனாதிபதியின் பதில் அமைந்திருந்தது.

அதனையடுத்து முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையினரை யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஜனாதிபதி உடனான சந்திப்பின் விடயங்களை தெரிவித்தேன்.

அதனையடுத்து முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார். பல முறை பல கூட்டங்களுக்குச் சென்று எந்தவித ஆக்கபூர்வமான விடயங்கள் எவையும் செயற்படுத்தப்படவில்லை.

தமிழர்களது அபிலாசைகள் எதையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணமும் அரசிடம் தென்படவில்லை. எனவேதான் நாம் அரசின் அழைப்பை நிராகரிப்பதற்குரிய காரணமாயிற்று என்றார்.

எனவே தமிழர்களின் எதிர்கால நலனையும் அபிலாசைகளையும் கருத்தில் கொண்டு அரசும் மாகாண சபையினரும் ஒருவருக்கு ஒருவர் பிழைகளைக் காண்பதைத் தவிர்த்து உடன் செயற்பட வேண்டிய அவசர தேவை இன்று உள்ளது.

எனவே இரு தரப்பினரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
02 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409647599&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten