தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்தியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற வினா, கொழும்பு அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, புதுடில்லிக்கு மேற்கொண்ட பயணமும் சரி, அதன் போது இந்தியத் தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளும் சரி, அரசாங்கத்தை வெறுப்படைய வைத்துள்ளது என்பதே உண்மை.
தமது கையை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா நடத்தியுள்ள பேச்சுக்களை அரசாங்கத்தினால் ஜீரணிக்க முடியவில்லை. நரேந்திர மோடி அரசாங்கம், தமது பக்கமே நிற்கும் என்ற அரசாங்கத்தின் மிகையான எதிர்பார்ப்பே இந்த ஏமாற்றத்துக்கான காரணம்.
அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு இந்தியா கொடுத்துள்ள முக்கியத்துவமும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடும், இலங்கை அரசாங்கத்துக்கு விசனத்தை எற்படுத்தியிருக்கின்றன.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று, தமிழர் பிரச்சினைக்கு நியாயமான, கௌரவமான, அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட தரப்புகள் பேச்சுக்களின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என்பதையும் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசாங்கம் அடம்பிடித்து வருகின்ற நிலையில் தான், மோடியின் இந்த நிலைப்பாடும் வெளிப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கு, பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு, இந்தியாவையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தினால் பிடுங்கியெடுக்கப்பட்டு விட்டன.
காணி, பொலிஸ், நிதி அதிகாரங்கள் எதுவுமில்லை. இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் கூட, மத்திய அரசின் இடையூறுகள் உள்ளன.
வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகப் போகின்ற நிலையிலும், அதனால் சுயமாக இயங்க முடியாத நிலையே உள்ளது.
அனைத்துத் தரப்பினரதும் நம்பகத்துக்குரியவராக இருந்த போதும், உச்சநீதிமன்ற நீதியரசராகப் பதவி வகித்த போதும் வடக்கு மாகாண முதலமைச்சரால், மாகாணசபையை கொண்டு நடத்த முடியவில்லை.
மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தி ஆட்சியை பிடிக்க விட்ட அரசாங்கம், அந்த ஆட்சியைக் கொண்டு நடத்தும் அதிகாரத்தை, ஆளுநர் என்ற கடிவாளத்தைக் கொண்டு இழுத்துப் பறிக்கிறது.
அதுபோதாதென்று, அரச அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக் கொண்டு மாகாண சபையை இயங்க விடாமல் தடுத்து வருகிறது. வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்திருக்கிறார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
அதேவேளை, இதுபோன்ற முதலமைச்சர் நிதியம், ஊவா, தென், சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்கனவே செயற்படுகிறது. ஆக, வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்களைப் பறித்து அதனை முடக்குவது குறித்தே அரசாங்கம் எப்போதும் சிந்தித்து வருகிறது.
வடக்கு மாகாணத்துக்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று மாகாணசபை கோருகிறது. அதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த வாக்குறுதியையும் கூட நிறைவேற்றவில்லை.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் இந்தியாவே முக்கிய பங்காற்றியது. ஆனால், வடக்கு மாகாணசபை சுமுகமாகச் செயற்பட வைப்பதில் இந்தியா இதுவரை பங்காற்றவில்லை.
இதுகுறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் காட்டியிருக்கிறது. இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துப் பேசுவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது அரசாங்கத்துக்கு இன்னமும் சிக்கலை ஏற்படுத்தும்.
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது அழுத்தங்களைக் கொடுத்து. அவரைச் செயற்பட முடியாமல் தடுக்கும் போது, அலரி மாளிகையின் கதவுகளைத் தட்டுவார் என்றே அரசாங்கம் எதிர்பார்த்தது.
ஆனால், அலரி மாளிகையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு பெறுமதியில்லை என்பதை வடக்கு மாகாண முதலமைச்சர் உணர்ந்து கொண்டுள்ளதால், அவர் அலரி மாளிகையின் வாசலையே எட்டிப்பார்க்க முனையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், மாகாணசபையைக் கொண்டு நடத்துவதில் தனக்குள்ள பிரச்சினைகளை, இந்தியப் பிரதமரிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அது அரசாங்கத்துக்கே அவமானம்.
என்றாலும் அத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுத்தது அரசாங்கமேயாகும்.
என்றாலும் அத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுத்தது அரசாங்கமேயாகும்.
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது அரசாங்கமே.
இதற்கிடையே, நேரடிப் பேச்சுக்கள் குறித்து இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில புத்திசாதுரியமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
நேரடிப் பேச்சுக்களில் இந்தியா- கண்காணிப்பாளராகவேனும் பங்கேற்க வேண்டும் என்பது கூட்டமைப்பு முன்வைத்த முதலாவது கோரிக்கை.
அடுத்து, இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சிகளுக்காக இந்திய அரசாங்கம் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
அரசாங்கத்துடனான பேச்சுக்களில், இந்தியா எந்த வகையிலாவது பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சூழலை உருவாக்கும் போது, இந்தியாவுக்கான பொறுப்பு அதிகரிக்கும். அதாவது, பேச்சுக்களில் எந்தத் தரப்பு தவறிழைக்கிறது என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளும்.
அரசாங்கத்தின், முகத்திரையைக் கிழிப்பதற்கு, இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இது உதவியாக அமையும் என்று கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
மேலும், ஜி.பார்த்தசாரதி போல, சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமித்து, இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே இதுகுறித்து பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால், அப்போது, அந்த விவகாரத்தை புதுடில்லி கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.
இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த இந்த யோசனையை இந்தியா நிராகரித்து விட்டதாகவும், அதுபற்றி நரேந்திர மோடி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த இந்தக் கோரிக்கையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாகவும், அதைவிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி இந்த முயற்சியில் ஈடுபடுத்தலாம் என்று அவர் யோசனை கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, விசேட தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கலாம் என்ற கதை பரவிய போதே, அரசாங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
ஆனால், கொழும்பிலுள்ள தூதுவருக்கு இந்தியா கூடுதல் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங்கும் போது, அதனை இலங்கை அரசாங்கத்தினால் தடுக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது.
இது ஓர் இராஜதந்திர ரீதியான நடவடிக்கையாகவும் இருக்கும். அதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் அழுத்தமாகவும் அமையும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதேவேளை, தெரிவுக்குழுவில் தான் தீர்வு எதைப் பற்றியும் பேச முடியும் என்று அடம்பிடிக்கிறது அரசாங்கம். தெரிவுக்குழுவுக்கு செல்லாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள காரணங்களை இந்தியா அன்றும் ஏற்றது, இன்றும் ஏற்றுள்ளது.
இதுவும் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவால்தான்.
இலங்கை அரசாங்கம் பல விடயங்களில் முரண்டு பிடித்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே ஆக வேண்டுமென்ற ஒரு சூழலை இந்தியா உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.
இதனை அரசாங்கம் தட்டிக் கழிப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது.
எனவே தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினால், நேரடிப் பேச்சுக்களுக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த் அறிவித்துள்ளார்.
அதேவேளை, நேரடிப் பேச்சுக்கு கூட்டமைப்பு அழைப்பு விடவில்லை என்று அரசாங்கம் கூறுவது நகைப்புக்கிடமானது என்றும், எவ்வாறாயினும், அரசுடன் பேசத் தாம் தயார் என்றும் அறிவித்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
அரசாங்கத்துக்கு புற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், இந்தியாவினது அணுகுமுறைகளாலும், விரைவிலேயே கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசும் முடிவுக்கு அரசாங்கம் செல்லக் கூடும். ஆனால் அதில் அரசாங்கம் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று கூற முடியாது.
ஆனால் ஒப்புக்காக ஒரு பேச்சு மேசையை அரசாங்கம் உருவாக்கிக் கொள்ளலாம். அத்தகைய நிலை ஒன்றில் தான், இந்தியாவையும் பங்காளியாக்க கூட்டமைப்பு முயன்றிருக்கிறது. இது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்று தெரியவில்லை.
ஆனால், இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுடனேயே இலங்கை அரசாங்கம் விளையாட ஆரம்பித்து விட்ட பின்னர், இந்தியாவும் தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான சில எத்தனங்களை மேற்கொள்ள முனையலாம்.
அதுவும், மோடி போன்றதொரு உறுதியான தலைவரின் கீழ் உள்ள இந்தியாவுக்கு, அத்தகைய முயற்சி இன்னும் வலுச் சேர்க்கும்.
இந்தநிலையில் தான், இந்தியா எடுத்துள்ள நகர்வுகள் கொழும்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளன.
இந்தநிலையில் அடுத்த கட்டம் எவ்வாறு அமையும் என்பது எதிர்பார்ப்புமிக்க கேள்வியாக எழுந்து நிற்கிறது.
- சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlsy.html
Geen opmerkingen:
Een reactie posten