தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கை மீது அதிகரிக்கும் அழுத்தங்கள்!

கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.
ஆனால் அடுத்த 2013, 2014 ம் ஆண்டுகளில் நடைபெற்று முடிந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடுமாறு இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு ரோம் சாசனம் பற்றி எந்தவொரு நாடும் பேசவில்லை.
இலங்கை மீண்டும் நிராகரிப்பு
ஆனால் இப்பொழுது இலங்கை மீது ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. சர்வதேச நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கடந்த வாரம் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இந்தக் கோரிக்கை சில நாடுகளால் இலங்கை மீது கோரப்பட்ட போதும் இலங்கை மறுத்து வந்தது.
கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபுணர் குழுவின் அதிகாரியொருவர் ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடுமாறு கோரிக்கை விடுத்திருந்த போதும், இலங்கை அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. உள்நோக்கம் கொண்ட கோரிக்கை என்றும் இந்தக் கோரிக்கையானது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இலங்கை மீது அடுத்த ஆண்டு ஜெனீவாவில் இந்த அழுத்தம் மேலும் வலுவடையும் என்பதை எதிர்வு கூறுவோம். காரணம் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இலங்கை வீசா வழங்க மறுத்து வருவதனால் இலங்கை தற்போது சிரியா, வடகொரியா நாடுகளின் வரிசையில் வந்து நிற்கின்றது.சுண்டக்கா நாடு இவ்வளவு தூரம் அடம் பிடிப்பது என்பது இலங்கை அபாயகரமான பாதையில் பயணிக்கின்றது என்பது மட்டும் உண்மை.
ரோம் சாசனம் என்றால் என்ன
1998 ம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ரோம் சாசனத்தின் பிரகாரமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சர்வதேசக் குற்றங்கள், மற்றும் மனிதத்துவத்திற்கெதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட வேண்டும்.
இந்த சாசனத்தின் கீழ்தான் அரசியல்வாதிகள் மற்றும் உலகிலுள்ள சாதாரண மனிதர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். இந்தக் குற்றங்களுக்கு எதிராக யாரும் நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.
இப்படித்தான் ரோம் சாசனம் சொல்கின்றது. அதைத்தான் ரோம் சாசனம் என்று சொல்லப்படுகின்றது. ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாமல் இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது மரபு. சாசனம். இப்படித்தான் ரோம் சாசனம் சொல்கின்றது.
இந்த சாசனத்தின் கீழ்தான் சூடான் அதிபர் பஸீர் மீது நெதர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தால் வழக்குத் தொடர முடிந்தது. போர்க்குற்றவாளியாகக் காணப்பட்டார்.
கிழக்கில் முஸ்லிம்கள் மீதான கொலையாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பெயரால் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் மற்றும் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் புரிந்துள்ளவர்கள் மீது இந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம். குற்றவாளிகள் இனம் காணப்படலாம், தண்டிக்கப்படலாம். புலிகளின் பெயரால் அரங்கேறிய படுகொலைகள் தெரியவரலாம். அதை விட்டு செட்டிபாளையத்தில் மரணித்தவர்களை தோண்டுவோம், எடுப்போம் என்பதெல்லாம் அரசியல் பித்தலாட்டமும் அரசியல் பிளைப்பும் இல்லையா.
முஸ்லிம்கள் மீது படுகொலைகள் புரிந்தவர்கள் தற்போது நம்மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை ஐ.சீ.சீ யில் நிறுத்தலாம். செட்டிபாளையத்தில் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் முஸ்லிம்கள் மீதான நியாயமான தீர்வு இலங்கையில் கிடைக்குமா அது நடக்குமா. இதற்குச் சரியான தீர்வு அல்லது நீதி கிடைக்க வேண்டுமென்று யாராவது நினைத்தால் ஐ.சீ.சீ யைத்தான் நாட வேண்டும். அதை விட்டு தமிழர்களுக்கு ஏதாவது நீதி கிடைக்கவுள்ளது என்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் குறுக்கே நிற்காதீர்கள்.
ரணிலின் குள்ளத்தனமும் தந்திரமும்
புலிகளை அழித்தது, மக்களைக் கொன்று குவித்தது மஹிந்தர்தான் என்றுதான் பலரால் இன்று மஹிந்தர் பார்க்கப்படுகின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானாலும் இதே கொலைதான் நடந்திருக்கும.; இதே மனித உரிமை மீறல்கள்தான் நடந்திருக்கும். ஆனால் ரணில் இப்படியான கொலைகள் செய்திருந்தால் இலங்கையில் நடந்தேறியுள்ள இனப்படுகொலைகளை உலகம் இந்தளவு கேட்டிருக்காது.
காரணம் ரணில், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் செய்திருப்பார். மற்றும் தற்போது கிடைத்துள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.
புலிகளை அழிக்க வேண்டும், தமிழ் மக்களைக் கொல்ல வேண்டும். அதனால் தாமும் ஒருநாள் ஐ.சீ.சீ யில் நிறுத்தப்படுவோம், தாமும் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு தந்திரமான குள்ளநரிப் புத்தி கொண்ட எண்ணத்தினால்தான் ரணிலின் காலத்தில், ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ரணில் 2000ம் ஆண்டில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திட மறுத்து விட்டார்.
ரணிலை நாம் மகாத்மா காந்தி போல் பார்ப்பது தவறு. ஜே.வி.பியின் காலத்தில் 1987-1990ம் ஆண்டுகளில் சிங்கள இளைஞர்களை இந்த ரணில் கொன்று குவிக்கவில்லையா? சித்திரவதை செய்யவில்லையா? மனித உரிமைகளை மதிக்கின்றவர்களால் ரணிலும் ஒரு குறற்வாளியாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அது யாராக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது எந்த மதம் மொழியாக இருந்தாலும் நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே. அதற்காக ரணிலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக யாருக்கும் வாக்களிக்கத்தான் வேண்டும். எதிரியின் எதிரி நண்பன் என்று நோக்குவோம். இந்த ரணில் 2000ம் ஆண்டு மறுத்த கைச்சாத்திடலைத்தான் தற்போது சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றர்கள். இது வலுவடையும்.
ஜெனிவாவில் வலுவடைந்த அழுத்தம்
ஜெனீவாவில் கடந்த ஆண்டில் இடம்பெற்றுள்ள உலக நாடுகளின் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பான மீளாய்வு அமர்வின் போது இலங்கையை சில நாடுகள் இந்த விடயம் குறித்து வலியுறுத்தியுள்ளது. அந்த நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றசசாட்டுக்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கு கொழும்பு தயக்கம் காட்டி வருவதாகவும் அந்தப் பரிந்துரையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைதான் தற்போது சர்வதேச விசாரணை என்று வந்துள்ளது.
2009ம் ஆண்டிற்கும் 2001ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், தலைமையில் மேற்குலகினால் இந்த விடயம் குறித்து தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் காணப்பட்டன. அந்த அழுத்தம் தான் தற்போது இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபுணர்கள் குழுவின் அழுத்தங்களாக அதிகரித்து வருகின்றது.
சர்வதேச நீதிமன்றம் - நெதர்லாந்து
இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகக் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் போர்க் குற்றங்கள் மனிதப்படுகொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ரோம் சாசனத்தில் கைசாத்திடுமாறு இந்த நாடுகள் வலியுறுத்தியிருந்தன. சர்வதேச நடுநிலையான அமைப்பொன்றினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென அவை வலியுறுத்தின. இப்போது அந்த வலியுறுத்தல்களே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார்.
ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC-நெதர்லாந்த் ஹேக் நகரத்தில் உள்ளது)  நியாதிக்கத்தை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். சுவீடன், ஓஸ்ரியா, ஸ்லோவாக்கியா, எஸ்தோனியா, ஆகிய நாடுகளே ரோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென விசேடமாக பரிந்துரை செய்திருந்த நாடுகளாகும்.
வடக்கில் நடந்த கொலைகள்
வடக்கில் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் காணாமல் போதல், சித்திரவதை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தவறாக நடாத்தப்படுதல், மனித உரிமைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் போன்ற பிரச்சினை குறித்து பல நாடுகள் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஆனால் ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென்ற கோரிக்கையை இந்த நாடுகள் கூறியிருக்கவில்லை.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரேஸில், கனடா, டென்மார்க், ஜேர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூஸிலாந்து, போலந்து, பிலிப்பைன்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகள் ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டுமென பரிந்துரை செய்யவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டு ஜெனீவாவில் நடக்கவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது ரோம் சாசனத்தில் கையெழுத்திடுமாறு இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்கவுள்ளது. ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடுமாறு பிரித்தானியா அழுத்தத்தை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா போன்ற சில நாடுகளே தமிழ் பேசும் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய தேவையை சுட்டிக்காட்டியிருந்தது. ஏனைய நாடுகள் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் ஆட்சியிலுள்ள குறைபாடுகள் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளன.
ஆனால் இப்போது சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புதிய கொலைக்களக் காட்சிகளில் முதலாவது இடம்பிடித்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதுப் பாலகனின் கொலைதான் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுமே அறியாத பச்சிளம் பாலகனுக்கு பிஸ்கட் சாப்பிடக் கொடுத்து கொலை செய்த கொலைகாரக் கூட்டத்தை சிறிலங்கா என்ற நாட்டைத் தவிர வேறு எங்கும் காணமுடியுமா என்ற கேள்வி விரிந்து காணப்படுகின்றது.
இரண்டாவதாக புலிகளின் நிதர்சனம் தொலைக் காட்சியின் அறிவிப்பாளினி இசைப்பிரியா. இவர் ஒரு இருதய நோயாளி என்று சொல்லப்படுகின்றது. இசைப்பிரியா வல்லூறுகளின் தாக்குதல் பற்றிய காணொளியை சனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மீது நம்பகத் தன்மையில்லை
இப்படியாக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வலுப்பெற்று வருகின்றது. இலங்கை ஜெனீவாவில் சொல்வது வேறு இலங்கைக்குள் சொல்வதும், செய்வதும் வேறு. வடகிழக்கில் தொடர்ந்து படைகளும், படை முகாம்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை வடக்கில் இருந்து படைகளை வெளியேற்றி இந்தியாவுக்கு அனுப்பவா என்று ஜனாதிபதி கடந்த வருடம் இந்திய எம்பிக்கள் குழுவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
மற்றும் வடக்கில் இருந்து படைகள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படியானால் ஜெனீவாவில் இலங்கை பூனை மாதிரி பதுங்குவதும், ஜெனீவா மாநாடு முடிந்த பின்பு இலங்கைக்குள் புலி போன்று பாய்வதும் வாடிக்கையாகி இருந்து வருகின்றது.
இதனால்தான் மேற்குல நாடுகள் இலங்கையை நம்புவதாக இல்லை, இலங்கையின் நம்பகத்தன்மையை இலங்கை இழந்து நிற்கின்றது. இலங்கை நினைத்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தி இலங்கை நம்பகத்தன்மையை உருவாக்கலாம். ஆனால் இலங்கைதான் விடாக்கண்டன், கொடாக் கண்டன் என்றவாறு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நோக்கமும் கிடையாது.
இலங்கை கடந்த வருடங்களாக மனித உரிமை விடயத்திலும் காணாமல் போன மக்களின் விடயத்திலும் ஜெனீவாவில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் ஒரு வாக்குறுதியையாவது இன்னும் நிறைவேற்றவில்லையென்று சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது சீற்றம் இன்னும் கொண்டுள்ளது.
மனித உரிமை தொடர்பில் இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை உலக சமூகமானது ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும் இலங்கை அரசு தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வந்துள்ளது என்று காட்டமாக பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அம்னஸ்ரி இன்ரெநெஷனல் என்கின்ற உலக மன்னிப்புச் சபை இலங்கை மீது தொடர்ந்தும் கடிந்து வருகின்றது.
ஐ.நா விசாரணையில் முஸ்லிம்களின் பாதுகாப்புள்ளது
வடக்கில் அரங்கேறியது இனப்படுகொலை இன அழிப்பு. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இந்த மனிதப் படுகொலையை மனித நேயமுள்ள எந்த மனினும் ஏற்றுக் கொள்ள முடியாது. கொலையாளிகள் விசாரணை செய்யப்படவேண்டும் தண்டிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையிலும் தண்டனையிலும் முஸ்லிம்களின் பாதுகாப்புள்ளது.
தமிழர்கள் அழிக்கப்படும் போது அடுத்த அழிவு முஸ்லிம்கள்தான் என்பதை முஸ்லிம்கள் இப்போது புரிந்திருப்பார்கள். அல்லது இப்போது புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்கள் போராட்டத்தில்தான் முஸ்லிம்களின் விடுதலை தங்கியுள்ளது. தமிழர்கள் தோற்று விடக்கூடாது. தமிழர்கள் தோற்று விட்டால் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் ஆரம்பம்தான் அண்மைய தர்கா நகர், பேருவளை சம்பவங்கள்.
தமிழர்களை அழித்து விட்டோம் என்ற மமதையில்தான் இன்று முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று  வருகின்றது. முஸ்லிம்கள் தொடர்ந்து சிங்களக் கட்சிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூஜா தூக்கிக் கொண்டு முஸ்லிம் இன அழிப்புக்கு துணைபோகின்றார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
இரண்டாம் இனமான தமிழர்கள் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழாத வரை மூன்றாம் இனமான முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு பௌத்த ஆதிக்கம் விடாது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நியாயமான போராட்டத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழர்களுக்க விமோசனம் கிடைக்காத வரை முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் நிம்மதி இருக்காது. முஸ்லிம்களுக்கு நிம்மதி அமைதி வேண்டும். முஸ்லிம்கள் தமிழர்களை இனியும் ஒதுக்க முடியாது. முஸ்லிம்களுக்கு தமிழர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை முஸ்லிம்கள் மீதான அண்மையச் சம்பவங்கள் புடம் போட்டுக் காட்டுகின்றது.
பட்டுத் தேறியவர்களாக முஸ்லிம்கள்
நாங்கள் சிங்கள மக்களுடன் பிட்டும் தேங்காயுமாகவுள்ளோம் எங்களுக்குள் எதுவும் நடக்காது. அந்தளவு நெருக்கமாக சிங்கள மக்களுடன் உள்ளோம் என்றுதான் மேற்கு தெற்கு முஸ்லிம்கள் எப்போதும் சொல்லி வந்தார்கள்.
ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் அன்னியோன்னியமாக பக்கத்து வீட்டில் நெருக்கமாக வாழ்ந்து வந்த சிங்களக் குடும்பங்கள், முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்துள்ளார்கள். அப்படியானால் எந்தளவுக்கு சிங்கள மக்களுக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மியன்மார் போன்று இலங்கையிலும் ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும், அதன் மூலமாக தொடர்ந்து தனது ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் என்பது தற்போது ஒரு இடைவேளையே ஒழிய நிரந்தரமான நிறுத்தம் அல்ல. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
நடவடிக்கை தொடரும் என்று பொதுபல சேனாவே தெரிவித்துள்ளது.  அதனால் முஸ்லிம்கள் எப்போதும் ஒரு கலவரத்தை எதிர்பார்த்தே காலம் கடத்த வேண்டியுள்ளது.
-M.M.Nilamdeen-                                                                                      
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlsz.html

Geen opmerkingen:

Een reactie posten