மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திட வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் பிரித்தானியா இதனை வெளிப்படையாகவே வலியுறுத்தியிருந்தது.
இலங்கை மீதான இந்த அழுத்தங்கள் அதிகரித்து வருவதன் பின்னணிக்கு, போரின் போதும், போருக்குப் பின்னரும் தொடரும் பாலியல் வன்முறைகளே காரணம் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த வாரம், மோதல்கள் நிலவும் இடங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியான சாய்னாப் ஹவா பங்குராவினால் தயாரிக்கப்பட்ட, மோதல்களின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான கடந்த ஆண்டுக் கான அறிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர், அந்த அறிக்கையை ஐ.நா. பிரதிநிதி சாய்னாப் ஹவா நியூயோர்க்கில் வைத்து வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையில், தற்போது மோதல்கள் நடந்து வரும் நாடுகளில் இடம்பெற்று வரும் பாலியல் வன்முறைகள் குறித்தும், போருக்குப் பிந்திய சூழலில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 21 நாடுகள் இடம்பிடித்திருந்தன. அதில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையில், போரின் போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்தும், போருக்குப் பின்னர் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்தும், அதில் விபரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் பாரதூரத்தன்மை இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே மனித உரிமைகள் விவகாரத்தில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில், இதுவும் மற்றொரு நெருக்கடியாக முளைக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது, உலகில் ஒரு போரை நடத்துவதென்பது, மிகவும் சிரமமான விடயம். அது ஒரு தீவிரவாத அமைப்புக்கும் சரி, ஒரு அரசாங்கத்துக்கும் சரி பொருத்தமான விடயமே. இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், மனித உரிமைகள் என்பது பெரியதொரு விவகாரமாகவே இருந்ததில்லை.
கண்ணிவெடிகளை விதைப்பது குற்றமுமல்ல. போரில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது, சிறுவர்களைப் படையில் சேர்ப்பது எல்லாமே அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தன.
ஆனால், இப்போது அப்படியில்லை.மனித உரிமைகள் என்ற விவகாரம், இப்போது ஒரு பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. மனித உரிமைகளை மீறாமல் போர் நடத்தினால் தான், தப்பிக்க முடியும்.
கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒட்டாவா உடன்பாடு என்ற ஐ.நா. பிரகடனத்தை மதிக்க வேண்டும். இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது.
சிறார்களைப் படைகளில் ஈடுபடுத்தவோ, ஆட்சேர்க்கவோ முடியாது. இந்தவகையில் தான், இப்போது மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான ஓர் ஐ.நா. பிரகடனமும் செயற்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த உடன்பாட்டில் இதுவரை 123 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
ஆனால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள், கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதை தடுக்கும் உடன்பாட்டிலோ, பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் உடன்பாட்டிலோ இன்னமும் கையெழுத்திடவில்லை.
போரின் போதும், போருக்குப் பின்னரும் தொடரும் பாலியல் வன்முறைகள் தொடர்பான கடந்த ஆண்டுக்கான அறிக்கையில், இலங்கையும் இடம்பிடித்துள்ள நிலையில், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு அதிகரித்துள்ளன.
இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட மறுநாள், ஐ.நா பாதுகாப்புச் சபையில் ‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ என்ற தொனிப்பொருளில் ஒரு திறந்த விவாதம் இடம்பெற்றது.
அங்கு தான், இலங்கையின் பிரதி நிரந்தர விதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.
பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியான சாய்னாப் ஹவா பங்குராவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஐ.நா பொதுச்செயலரின் அறிக்கையில், போரில் பாலியல் வல்லுறவை இப்போதும் ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் 34 ஆயுதக்குழுக்கள், போராளிக்குழுக்கள் மற்றும் அரச படையினரின் விபரங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்தப் பட்டியலில் இலங்கை இராணுவம் இடம்பிடிக்காது தப்பிக் கொண்டதையிட்டு அரசாங்கம் நிம்மதி கொள்ளலாம்.
மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ, ஐவரிகோஸ்ட், மாலி, தென்சூடான், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையே இந்த 34 குழுக்கள் மற்றும் இராணுவங்களாகும்.
இந்தப் பட்டியலில் இலங்கை இராணுவம் இடம்பெற்றிருக்குமேயானால், அது, ஐ.நா அமைதிப்படைக்குப் படைகளை அனுப்பும் இலங்கை அரசின் நடவடிக்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனினும், ஏற்கனவே ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கைப் படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், அவை சரியாக விசாரிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்ற போது, சம்பந்தப்பட்ட படையினரை ஐ.நா தனது பணியில் இருந்து நீக்கி விடுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட நாடு அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கிறதா என்று கண்காணிப்பதில்லை.
எனவே, ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தினர் சிலர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய போதிலும், மேல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக் கொண்டனர்.
போரின் போது, இலங்கைப் படையினர், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதற்கு ஆதாரமான பல ஒளிப்படங்கள், வீடியோக்கள் முன்னர் வெளியாகியிருந்தன.
உயிருடனோ இறந்த பின்னரோ, பெண்களின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்துவது கூட ஒருவகையான பாலியல் குற்றம்தான். படைத்தரப்பினால் வெளியிடப்பட்ட பல ஒளிப்படங்களே அத்தகைய குற்றங்களுக்கு சாட்சி கூறத்தக்கவை.
அதிலும், இசைப்பிரியா தொடர்பாக சனல் 4 வெளியிட்ட ஒளிப்படங்களும் வீடியோவும், இறுதிப்போரின் இன்னொரு பக்கத்தை உலகிற்குக் காட்டியிருந்தது.
அதுமட்டுமன்றி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, தென்னாபிரிக்காவின் ஜஸ்மன் சூகா என்ற மனித உரிமைகள் சட்ட நிபுணர் தலைமையிலான குழுவினர் இலங்கையில் போரின் போதும், போருக்குப் பின்னரும் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதற்கு முன்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகமும், இதுபற்றிய அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையுமே அரசாங்கம் நிராகரித்து விட்டது.
இப்போது, இலங்கைக்கு தனியே ஐ.நாவில் இருந்து மட்டும் நெருக்கடி வரவில்லை. மோதல்களின் போது, பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான சர்வதேச உச்சிமாநாடு ஒன்றை அடுத்த மாதம் பிரித்தானியா நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.
பெரும்பாலும் அவர் அங்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஆனால், இலங்கை அரசு தமது பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வைக்குமா என்று பார்க்க வேண்டும்.
ஏனென்றால், இலங்கை இன்னமும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான பிரகடனத்தில் கையெழுத்திடாமல் இருக்கும் நிலையிலும், பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரிக்கும் குற்றச்சாட்டுகளும் இந்த மாநாட்டில் இலங்கைக்கு அழுத்தங்களாக இறங்கலாம்.
போரின் போதும் போருக்குப் பின்னரும் 17 படையினர் தான் வடக்கில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக, நியூயோர்க்கிலும் கொழும்பிலும் இருந்து இலங்கை அரசு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது.
ஆனால், அதனை சர்வதேச சமூகம் உண்மையென்று ஏற்றுக் கொண்டிருந்தால், கடைசியாக வெளியான 21 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
அரசாங்கம் இந்த விடயத்தில் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறினால், அதுவும் கூட சர்வதேச விசாரணைகளுக்குள் இலங்கையை மாட்டிவிடக் கூடும்.
– ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYlq7.html
Geen opmerkingen:
Een reactie posten