தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

வடக்கின் அட்டூழியங்களை ஒழிக்க மறைகர சக்தி ஒன்று உருவாகலாம்!


[ valampurii.com ]
யாழ். அச்சுவேலி, கதிரிப்பாயில் நடந்த கொடூரச் சம்பவம் அனைவரையும் திகிலடையச் செய்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிச் சரிக்கும் அளவில் அசுரத்தனங்கள் எங்கள் மண்ணில் தாண்டவம் ஆடத்தொடங்கி விட்டது என்றே கூறவேண்டும்.
அதேநேரம் சாதாரண மனநிலையில் இருந்து கொண்டு தொடர்ச்சியாக மூவரை வெட்டிக் கொல்ல முடியுமா? என்ற ஆய்வுகளும் இங்கு அவசியமாகின்றன.
வன்மத்தை தீர்ப்பது என்பதில் கூட, சில இரக்கத்தனங்கள் இருக்கவே செய்யும். ஆனால் அச்சுவேலியில் நடந்த மூவர் கொலையில் ஈவு இரக்கம் என்ற எதனையும் கொலையாளியிடம் காண முடியவில்லை என்பது புலனாகின்றது.
அப்படியானால் போதை நிலையில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கக் கூடிய சாத்தியம் உண்டா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.
இதுதவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தைப் பார்க் கும் போது இது தவிர்க்க முடியாத சூழலில் நடந்ததல்ல.
மாறாக குறித்த குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் வெட்டிச் சரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இந்தக் கொலைகள் நடந்துள்ளன என்பதற்குள் ஒரு வலுமையான செய்தி உள்ளது.
அதாவது வட மாகாணத்தில் இத்தகைய சம்பவங்களைச் செய்கின்றவர்களுக்கான தண்டனைகள் போதியதாக இல்லை.
எதையும் செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலைமை உருவாகி விட்டது. பொலிஸ் பயம் என்பது அறவேயில்லை.
கை நீட்டி காசு வேண்டிய பொலிஸுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால், எல்லாம் சரியாகிப் போகும் என்பது கொலையாளிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இலஞ்சத்திற்கு அடிமையாகிப் போன பொலிஸாரால் கொலைகளையும் கொள்ளைகளையும் ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது.
குறிப்பிட்ட சில பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸாரும் நேர்மையாக நடந்து கொள்கின்றனராயினும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
சட்டத்தின் முன் நிறுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க பொலிஸார் முற்பட்டாலும் குற்றவாளியை பிணை எடுக்க எங்கிருந்தோ ஒரு சட்டத்தரணி வராமலா விடப்போகிறார்?
ஆக, மூன்று என்ன? முப்பது கொலை செய்தாலும் ஊர் எல்லாம் கூடி மூன்று நாள் கதைக்கும்; அவ்வளவுதான். அதன்பின் எல்லாம் சிவசம்போ என்பதாகிப் போகும்.
எனவே வடக்கில் இத்தகைய சம்பவங்கள் மேலும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு என்பதால் வடக்கின் எதிர்காலம் மிகப்பயங்கரமாகவே அமையும்.
எனவே அட்டூழியங்களுக்குக் கடும் தண்டனை கொடுத்து அதனை வேரறுக்க; மறைகர சக்தி ஒன்றை, நேர்மைத் திறமுடைய இளைஞர்கள் உருவாக்கும் சந்தர்ப்பம் தோன்றலாம்.
எங்கள் இருப்பைக் காப்பாற்ற இதுவே இப்போது அவசியமானதாகவும் உணரப்படலாம்.

Geen opmerkingen:

Een reactie posten