தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 mei 2014

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்: த.தே.ம.மு அழைப்பு!

பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் மீள் குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மீள் குடியமர அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்கள் தவிர்ந்த அனைத்து இடங்களிலும் மக்கள் முழுமையாக மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி கச்சேரி பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்துள்ள நூற்றுக் கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாது, உறவினர், நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த உண்மை நிலையை மூடிமறைத்து அரசானது தனது உள்ளூர் அதிகாரிகளை வற்புறுத்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களை சர்வதேச சமூத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது.
பொய்யான அறிக்கைகள் மூலம் இங்கு இனநல்லிணக்கம் ஏற்பட்டுவருதாக உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் உள்ளூர் அரச அதிகாரிகள் மூலம் மக்களது சொந்த விருப்பங்களுக்கு மாறாக வேறு இடங்களில் அவர்களைக் குடியமர்த்துவதற்கான முற்சிகளிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனாலும் தமது சொந்த வீடுகளும் நிலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றனர் எனவும் அதற்கு ஆவன செய்யுமாறும் மக்கள் எம்மிடம் கோரியுள்ளனர்.
எனவே இடம்பெயர்ந்து ஐந்து ஆண்டுகளாக அவல வாழ்வு வாழும் மக்களது வீடுகள் நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன், அந்த வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, அம்மக்கள் உடனடியாக மீள் குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி காலை மு.ப 11 மணிக்கு கிளிநொச்சி கச்சேரி முன்பாக நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmu7.html

Geen opmerkingen:

Een reactie posten