விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானின் உத்தரவிற்கு அமைய புலிகளுக்கு நிதி வழங்கியவர்கள் என புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு எதிரான வழக்கில் சான்று இருந்தால் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வாதிட்டார்.
புலிகளுக்கு நிதி வழங்கியவர்கள் என புறக்கோட்டைத் தமிழ் வர்த்தகர்கள் இருவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் 2010ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,
2006ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு உட்பட்ட காலத்தில் கொழும்பிலும் யாழ். நகரிலும் வர்த்தகம் நடாத்தி வந்த நான்கு வர்த்தகர்கள், கொழும்பிலிருந்து வியாபாரம் நடாத்திய மற்றைய வர்த்தகர்களிடம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக வரிப்பணமும் நிதியும் வசூலித்துள்ளனர் என பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் இந்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் மேலதிக புலன் விசாரணை அறிக்கையில்,
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானின் உத்தரவிற்கு அமைய வர்த்தகர்களிடம் வரிப்பணத்தையும் நிதியையும் வசூலித்த இந்த சந்தேக நபர்கள், கொழும்பிலிருந்து வடக்கே பொருட்களை கொண்டு செல்லும் மற்றும் வடக்கில் வியாபாரத் தொடர்புகளை பேணிய வர்த்தகர்களிடம் வசூலித்த பணத்தினையும் நிதி உதவியையும் யாழ்ப்பாணம் கொமேர்ஷல் வங்கி கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை ஹட்டன் நெசனல் வங்கிக் கிளைகள், புறக்கோட்டை செலான் வங்கிக் கிளை ஆகிய வங்கிகளில் 350 மில்லியன் ருபாய்களை சந்தேக நபர்கள் தங்களுடைய பெயரில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து,
விடுதலைப் இயக்கத்திற்கு தேவையேற்படும் வேளைகளில் வங்கியிலிருந்து மீளப்பெற்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் சந்தேக நபர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிருந்த பணம் புலிகளுக்காக வசூலிக்கப்பட்டது என எந்தச் சான்றும் முன்வைக்கப்படவில்லையென நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா,
மேலும் தனது வாதத்தில்,
பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசாரினால் இந்த நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து நான்கு வருடங்கள் கடந்து விட்டதுடன், சட்டமா அதிபர் திணைக்களகத்திற்கு பொலிசாரினால் வழக்குக் கோவை பாரப்படுத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரையில் இந்த வர்த்தகர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பதை சட்டமா அதிபர் தீர்மானிக்கவில்லையென நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து, நீதவான் நீதிமன்ற நீதிபதி நிரோ பெர்னாண்டோ சட்டமா அதிபர் திணைக்களத்தை தொடர்பு கொண்டு சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி இறுதித் தவணையளிப்பதாக நீதிமன்றில் ஆஜராகியிருந்த பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸ் பரிசோதகர் எம். அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை மே மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Geen opmerkingen:
Een reactie posten