தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 juli 2015

இன்றைய சம்பந்தனை அன்றே அறிந்த புலிகளின் தலைவர்!

அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆங்காங்கே சில விமர்சனங்கள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் ரீதியான கடைசி நேர தெரிவாக கூட்டமைப்பே இருந்தது.
விடுதலைப் புலிகளுடைய ஆளுகையின் பலம் தமிழர் கரங்களில் இருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய சிந்தனையின் அடிப்படையில்,  சர்வதேச விவகாரங்களையும் எதிர்கால தமிழர்களின் அரசியல் தீர்வையும் ஏதோ ஒரு வகையில் முன்னகர்த்தக்கூடிய வல்லமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அவதானமாக இருந்தார்.


சம்பந்தன் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனையும் விடுதலைப் புலிகளின் தலைவர் நன்கறிவார். ஆனாலும் அடுத்தகட்ட அரசியல் நகர்வு தமிழர்களை தாங்கிச் செல்லக்கூடிய வலிமையும் ஆற்றலும் சம்பந்தனிடம் இருப்பதனை நாசுக்காக பல இடங்களில் கோடிட்டு காட்டியிருந்தார்.

உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நடைபெற்ற அனைத்து பிரதான சந்திப்புக்களிலும் இடப்புறம் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் வலப்புறம் சம்பந்தன் அவர்களையும் அமர்த்தி கூட்டமைப்புக்கு ஒரு நிலையான அடையாளத்தை ஏற்படுத்தும் அந்தஸ்தை வழங்கினார்.

 `சம்பந்தனது நிலைப்பாடுகள் என்னவென தெரியும் இருப்பினும் தம்பி பிரபாகரன் அவர்மீது அசையாத நம்பிக்கையான பார்வையினை வைத்துள்ளான். ஏனோ தெரியவில்லை`` என அன்ரன் பாலசிங்கம் சில இடங்களில் கூறியிருந்தாலும்.... தலைவர் அரசியல் ரீதியாக கூட்டமைப்பை நம்பியே இருந்தார்.

அந்தவகையில் கூட்டமைப்பை நம்பி, தமிழ் மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையை அவர் புடமிட்டிருந்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அண்மைய நாட்களில் ஏனைய கட்சிகளாலும் மேலும் சிலராலும் சுமத்தப்படுகின்ற விமர்சனங்களைக் கூட அன்று தலைவரால் ஊகித்திருக்க முடியும். ஏனெனில் தீர்க்கதரிசனத்தில் சாலச் சிறந்தவர் விடுதலைப் புலிகளின் தலைவரே.

மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் நித்தம் நித்தம் கூறுவது தமிழீழத்தின் இதயம் திருமலை என்று.

அதில் இன்னுமொரு முக்கிய விடயம் தமிழ்த் தேசியத்தின் தலைமை வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கிழக்கில் குறிப்பாக திருமலையை பிரதிநிதிப்படுத்துவதில் மிகவும் அக்கறை செலுத்தினார்.

- காரணம் - அது தமிழீழத்தின் தலைநகர்.

இப்படியாக பல்வேறுபட்ட கனவுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது செல்லக் குழந்தையாக நினைத்து வளர்த்த தலைவரின் சிந்தனையை இன்று விமர்சனத்துக்கு உள்ளாக்குவது அந்த தலைமையையே களங்கப்படுத்துவதாக அமைந்து விடாதா.....

இன்றைய யாவற்றையும் அன்றறிந்த தலைவர் இன்று விமர்சிக்கப்படுகின்ற அனைவரையும் தூரநோக்கோடு பார்த்திருப்பார் என்பதே யதார்த்தம்.

இப்படியான சூழ்நிலையில் தமிழ்மக்கள் ஆகஸ்ட் 17 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்த் தேசியத்தை உறுதிப்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் சிந்தனைக்கு -  கூட்டமைப்பினூடாக வலுச் சேர்ப்பார்களா ..... எது காலத்தின் கட்டாயம் என்பதை தமிழ் மக்களே முடிவெடுக்க வேண்டிய சூழலே இது.

இறுதியாக தலைவரின் சிந்தனையிலிருந்து ஒரு வரி......

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.


- முகில் -
karu.bomi@gmail.com

Geen opmerkingen:

Een reactie posten