தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 juli 2015

முன்னாள் போராளிகள் அரசியல் பலிக்கடாக்களா?

வடக்கில் முன்னாள் போராளிகளை மையமாக வைத்து உதயன், சுடரொளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான என். வித்தியாதரன் என்பவரின் ஒருங்கிணைப்பில் தோற்றம் பெற்றுள்ள “ ஜனநாயகப் போராளிகள் கட்சி” தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 
தமிழ் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை அரசியல் ரீதியான விமர்சனங்கள் என நாம் ஒதுக்கித் தள்ளினாலும் பொதுமக்கள் தரப்பிலிருந்து வெளிவரும் விமர்சனங்கள், முன்னாள் போராளிகளை அரசியல் சாக்கடைக்குள் தள்ளிக் கேவலப்படுத்தக் கூடாதென்பதுடன், அவர்களை அரசியல் பலிக்கடாக்களாகவோ பகடைக்காய்களாகவோ ஆக்கக்கூடாது என்பதாகவே உள்ளன.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தோற்றம், அதன் பின்னணி, அதனால் ஏற்படப் போகும் விளைவுகள், பாதிக்கப்படப்போகும் அல்லது ஆபத்துக்களை சந்திக்கப் போகும் போராளிகள் தொடர்பில் தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட தமிழர்கள் எவரும் வாளாவிருக்க முடியாது. எனவே இது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கவலைகளும் உள்ளன.
யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகளாகின்ற நிலையில் ஒரு தடவையேனும் முன்னாள் போராளிகள் தொடர்பில் கவனமோ, கருணையோ காட்டாதவர்கள், அவர்கள் நலன் தொடர்பில் அக்கறைப்படாதவர்கள் தற்போதைய தேர்தல் கால சூழ்நிலையில் திடீரென முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
முன்னாள் போராளிகளும் அவர்களின் குடுபங்களும் வாழ வழியின்றி, வாழ்வாதாரமின்றி அவலப்படும் எத்தனையோ ஆயிரம் செய்திகள் ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தபோதுகூட அவர்களுக்கான வாழ்வுக்கோ, வாழ்வாதார உதவிகளுக்கோ எந்தவித பங்களிப்புகளையும் செய்யாதவர்கள், அவர்களை அரசியலுக்குள் இழுத்து வருவதன் நோக்கம் நிச்சயமாக முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்ததாக இருக்கப் போவதில்லை.
இதேவேளை, முன்னாள் போராளிகள் தற்போதும் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்குள் இருக்கின்ற நிலையில் அவ்வாறானவர்களை அழைத்து வந்து பகிரங்கமாகக் கூட்டம் நடத்தி, கட்சி ஆரம்பிக்கும் செய்தியை பெரியளவில் பிரசாரப்படுத்திவிட்டு கூட்டத்தை நடத்திய போது அக்கூட்டத்திற்கு ஒரு பொலிஸோ புலனாய்வுத்துறையோ கூட வரவில்லை என்பது அதனைத் தலைமையேற்று நடத்தியவர்களின் அரச, பாதுகாப்புத்துறையின் செல்வாக்கு தொடர்பில் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. இதேவேளை இராணுவ புலனாய்வு பிரிவினருடன் தொடர்புபட்ட முன்னாள் போராளிகள் சிலரே இக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளவரின் இணையத்தளத்தில் கூட கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகளின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்படவில்லை. பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரேயொரு படத்தில் கூட முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் போராளிகளின் புகைப்படங்களைக்கூடப் பிரசுரிக்காது முகங்களை மறைப்போர் எப்படி இந்தப் போராளிகளை வைத்துக்கொண்டு பகிரங்க அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்? அவ்வாறானால் முன்னாள் போராளிகளின் பாதுகாப்புடன் குறிப்பிட்டு சொன்னால் உயிருடன் விளையாட முற்படுகின்றனரா?
இதேவேளை புலிகளை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தும் மகிந்த தரப்பினர் மீண்டும் பதவிக்கு வரத் துடித்து அரசியலில் குதித்துள்ள நிலையில், முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து கட்சி அமைக்கும் முயற்சி மீண்டும் புலிகள் ஒன்றிணைகின்றார்கள் என மகிந்த தரப்பு கூறி அரசியல் இலாபம் தேடுவதற்கானதொரு அனுசரணை முயற்சியா என்ற கேள்வியும் மக்கள் மனத்தில் உண்டு.
அத்துடன் ஜனநாயக போராளிகள் கட்சியை கட்டுறுதியான அமைப்பாக உருவாக்கும் வரை அதன் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரு முன்னாள் போராளிகளை இணைத்து கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் யார் ? அவர்களின் பின்னணி என்ன ? தலைமைச் செயலகம் எது என்பது தொடர்பில் எதுவுமே வெளிப்படுத்தப்படாத நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு செயற்பட்டுவரும் நிலையில் அவர்களின் அங்கீகாரம் பெறப்பட்டதா? அல்லது தமிழர் நலன்களில் அக்கறையுடன் செயற்படும் புலம் பெயர் தமிழர் அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டு சம்மதம் பெறப்பட்டதா என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படாது முன்னாள் போராளிகளை அரசியலுக்குள் கொண்டுவரும் இந்த முயற்சி அப்பட்டமானதொரு சுயநல நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்க முடியும்.'
அது மட்டுமன்றி தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள இக்கட்சி அவ்வாறு சிலவேளைகளில் முன்னாள் போராளிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் என்ன உத்தரவாதத்தை வழங்கும்? மக்கள்தான் அவர்களின் பாதுகாப்பெனக் கூறித் தப்பிக்க முடியாது.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஜனநாயக போராளிகள் கட்சி தோற்றம் பெற்றுள்ளமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைக்கும் ஒரு திட்டமிட்ட சதியா? என்ற சந்தேகமும் உண்டு. எனெனில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாவட்டம்தோறும் முன்னாள் போராளிகள் இருவரை இணைத்துக் கொள்ள வேண்டுமென இக் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை சடுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு எதிராகவும் செயற்படுவதாக பிரசாரங்களை முன்னெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் தமிழர் விரோதக் கட்சியாக காட்டும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ, முன்னாள் போராளிகளை எந்தவித முன்னேற்பாடுகள், திட்டமிடல்கள், சரியான பாதுகாப்பு உத்தரவாதங்களும் இல்லாது அரசியலுக்குள் இழுத்து வருவது நிச்சயம் அவர்களுக்கு ஆபத்தாகவே முடியும். அப்படி அவர்களுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படும் போது அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்ற யாராவது திட்டமிடுகின்றனரா?
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியது போல, இம்முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுமிடத்து அது தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமிழ் மக்களுக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கும் ஏற்படும் அவமானமாகவே கருதப்படும். அத்துடன் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டனர் என்ற பிரசாரமும் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படும்.
முன்னாள் போராளிகள் தமிழ் மக்களுக்காக எவ்வளவோ தியாகங்களைச் செய்துவிட்டனர். தமிழரின் விடுதலைக்காக தம்மை, தமது குடும்பத்தை அர்ப்பணித்த அவர்கள், அதற்காக இழந்தவை ஏராளம். இன்றுகூட போரில் காயமடைந்து நடக்க முடியாத, செயற்பட முடியாத, உடல் அவயவங்கள் செயலிழந்த நிலையில் எத்தனையோ முன்னாள் போராளிகள் வவுனியாவில் உள்ளனர். அவர்களை, இக் கட்சியை உருவாக்க முற்பட்டடோர் ஒரு தடவையேனும் சென்று எட்டியாவது பார்த்தார்களா?
எனவே தயது செய்து முன்னாள் போராளிகளின் வாழ்கையில் விளையாடாதீர்கள். அவர்களை நீங்கள் வாழவைக்காது விட்டாலும் பரவாயில்லை. வாழ விடுங்கள். அவர்களை உங்கள் சுயநல அரசியலுக்குப் பலியாக்கிவிடாதீர்கள். பகடைக்காய்களாக்கியும் விடாதீர்கள்.
நன்றி - தினக்குரல் (தாயகன்)

Geen opmerkingen:

Een reactie posten