தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 juli 2015

ராஜபக்சே வெற்றி பெற்றால் பழிவாங்கும் கொடூரம் நடக்குமோ?

இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்தாலும் அங்குள்ள தமிழ் மக்களிடம் ஒரு இறுக்கமான நிலையே காணப்படுகின்றது. 
தமிழர்களின் பிரதிநிதியாக யார் நாடாளுமன்றம் சென்றாலும் தங்களுடைய வேதனைகள் தீர்ந்துவிடுமா என்ற ஏக்கமான மனநிலைதான் தமிழர்களிடம் இருக்கின்றது. ஆனாலும் தேர்தல்களம் சூடேறி உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சே இந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ள குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது தான்.

கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் ராஜபக்சேவுக்கு தேர்தலில் போட்டியிட கட்டாயத்தின் பேரில் வாய்ப்பு வழங்கியதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்திருக்கிறார். இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களின் முதுகில் குத்தும் துரோக செயலில் இறங்கிவிட்டார் மைத்ரி என்பதை பலரும் கவனிக்கத் தவறவில்லை.

இலங்கையில் நடக்கும் சிறிசேனாவின் கடந்த ஆறுமாத கால ஆட்சியை இதற்கு சான்றாகச் சொல்லலாம். யார் தன் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்களோ அந்த மக்களின் மீதுள்ள அடக்குமுறைகளை நிறுத்த முன்வரவில்லை.

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும் தமிழர்கள் திருமணம் போன்ற எந்த சமுதாய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென்றாலும் இராணுவத்தின் அனுமதியை பெறவேண்டியுள்ள நிலைமையும் இன்றும் தொடர்ந்தபடியே உள்ளன.

அதுமட்டுமில்லாது சிகை திருத்தும் நிலையம் ஆனாலும்கூட அனுமதி பெற்றுத்தான் நிறுவ வேண்டியுள்ளது. பதட்டத்தை உருவாக்கும் இராணுவத்தை திரும்பப் பெறவும் மைத்ரி சிறிசேனா அக்கறை செலுத்தவில்லை தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைப்பேன் என்று சொன்ன உறுதிமொழியை கிடப்பில் போட்டுள்ளது இன்றய சிங்கள அரசு.

வடக்கு கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு காவல்துறை நில நிர்வாகம், நில வருவாய், மீன்பிடித்தொழில் போன்ற அதிகாரங்கள் வழங்கப்படாததால் வரிகளும் வருவாயும் இல்லாமல் மாகாண கவுன்சிலின் நிர்வாகம் கைகள் கட்டப்பட்ட நிலையிலே நீடிக்கின்றது.

மாகாண கவுன்சிலின் முதல்வர் விக்னேஸ்வரன் தன் அலுவலகத்துக்கு பேனா, பென்சில் வாங்கவேண்டுமென்றால் கூட ஆளுநர் மூலமாக கொழும்பு அரசாங்கத்திடம் கையேந்தவேண்டிய நிலை. தமிழர்களுக்கு இலங்கையில் சேர்ந்துவாழ விருப்பம் இல்லை என்றால் அது குறித்து தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த கூடிய வகையிலும் 2009ல் ராஜபக்சே இலங்கையில் நடத்திய இன படுகொலை குறித்தான சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை குறித்து தெளிவாக பேசி எந்த முடிவும் மைத்திரி எடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக தன் ஆட்சிக் காலத்தில் ராஜபக்சே செய்த அட்டூழியங்கள், ஊழல்கள் குறித்து வழக்கு கூடத் தொடுக்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் குருநாகல் மாவட்டத்தில் ராஜபக்சே போட்டியிடுகின்றார்.

தன் அதிகாரங்களை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மைத்ரி  செயல்படாததன் விளைவு தான் கட்டாயங்களுக்கு அடிபணிந்ததாக அவரையே சொல்ல வைத்திருக்கிறது.

சிங்களவர்களிடையே ராஜபக்சேவுக்கு இருக்கும் செல்வாக்கு பௌத்த சிங்களரான அதிபர் மைத்ரிக்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை. எந்த பிரச்சனைகளிலும் அடிபடாததும் போர்க்காலங்களில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்று நடத்தியதும் சிறிசேனாவுக்கு அரசியல் வட்டத்தில் நன்மதிப்பை கொடுத்திருந்தாலும் அவர் தன் சொந்த மாவட்டமான பொலனறுவையைத் தவிர வெளியே அதிகம் அறியப்படாதவர்.

அப்படியிருந்தும் அவர் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற முக்கிய காரணம் தமிழர்களும் இஸ்லாமியர்களும் அளித்த வாக்குகள் மற்றும் ராஜபக்சே மீது அவர்களுக்கு இருந்த வெறுப்புகள் தான்.

ஆட்சிபீடத்துக்கு வந்த சிறிசேனாவால் இலங்கை அரசியலின் நெளிவு சுளிவுகளை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒருபக்கம் தன்னுடைய சுதந்திர கட்சியை நிர்வகிப்பதும் மறுபக்கம் தன் வெற்றிக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரிப்பதும் என்ற இரட்டை குதிரைச் சவாரிக்கு அவர் சரிப்பட்டு வரவில்லை.

புவியியல் ரீதியாக இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இலங்கை முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பதால் அதன் அரசியல் மாற்றங்களை கண்கொத்தி பாம்பாக கவனித்து கொண்டு வருகின்றன.

ராஜபக்சே தன்னை வெளிப்படையாக சீனாவின் ஆதரவாளனாக காட்டிக்கொண்டார். இலங்கையுடனான  சீனாவின் ஒப்பந்தங்கள் பல இவர் ஆட்சிக்காலத்தில் கையெழுத்தாகின. போருக்கு பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த இலங்கையை புனரமைக்க சீனா உதவியது கூட ராஜபக்சே மீதிருந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் சீனாவும் ராஜபக்சே வெற்றிபெற காய்களை நகர்த்தி வருகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் இணைந்து தனி கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த சீனாவும் ராஜபக்சே வெற்றிபெற காய்களை நகர்த்தி வருகின்றது.

தேர்தலிலும் ராஜபக்‌ஷ தோல்வியைத் தழுவுவார் என்று மைத்திரி குரல் கொடுத்திருப்பதுகூட சந்தேகங்களுக்கு உட்படுத்தப்படவேண்டியது. கொழும்பில் இரவு நேரங்களில் ரகசியமாகவும் பத்திரிகையாளார்கள் முன்புமாக மொத்தம் மூன்றுமுறை மைத்திரியும் மஹிந்த ராஜபக்‌ஷவும் புளகாங்கிதமாகச் சந்தித்துக்கொண்ட காட்சிகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

ராஜபக்‌ஷ ஒருவேளை வெற்றியடைந்தால் தோற்கடித்த மக்கள் மீது தொடுக்கும் பழிவாங்கல் நடவடிக்கை எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்ற இலங்கைத் தமிழர்கள் உள்ளத்தில் அச்சம் நிலவுகிறது.

ராஜபக்‌ஷவுக்கு பழிவாங்கும் எண்ணம் என்பதொன்றும் புதிதல்ல. கடந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை சிறையிலடைத்து சித்திரவதை செய்து உள்ளூர் குளிர்ந்தவர்தான் ராஜபக்‌ஷ. மைத்திரி தன்னை எதிர்த்து தேர்தலில் நின்றபோதுகூட மரணத்தோடு மோதுகிறார் என்று அறிவிக்கவும் துணிந்தவர் ராஜபக்‌ஷ.

துட்டகைமுனு மன்னனுக்குப் பிறகு இலங்கையை முழுவதுமாக ஆட்சி செய்தவர் என்ற பிம்பத்தை ராஜபக்‌ஷவுக்கு வழங்கிய அவரது ஆதரவாளர்களுக்கு இந்த மீள்பிரவேசம் புத்துணார்வு தரலாம். ஆனால் புலம்பெயர்ந்தும் தன் நிலைகள் இழந்தும் பல உயிர்களைக் காவு கொடுத்தும் போராடிய மக்களுக்கு ஒவ்வொரு நாளும் கலக்கமாகவே முடிகிறது.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல் முறைகள் அமலில் இருந்துள்ள சுதந்திரத்திலிருந்து 1978ம் ஆண்டுவரை அமலில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையும் 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை அமலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையொன்றையே கடந்தவாரம் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதிவாரி தேர்தல் முறை விகிதாச்சார தேர்தல்முறை ஆகியவற்றிலுள்ள நல்ல அம்சங்களை பயன்படுத்திக்கொள்வதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கமென கூறப்படுகிறது.  ஆனால் கலப்பு தேர்தல் முறைக்குள் அவ்விரண்டு தேர்தல் முறைகளின் நல்ல அம்சங்கள் மட்டுமன்றி மோசமான அம்சங்களும் புகுந்துள்ளன.

கடந்த சில நாட்களூக்கு முன்பு உள்ளூராட்சி மன்றாங்கள் தொடர்பாக இரண்டு சட்ட திருத்தங்கள் இலங்கையில் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இந்த தேர்தல் திருத்தச் சட்டமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அதன்மூலம் எதிர்கால அரசியல் களத்தில் பெரிய மாற்றங்கள் இடம்பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

அதேவேளை இந்த சட்டம் மூலம் சிறுபான்மையினரின் அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதே.

இரண்டு கட்சிகள் போட்டியிட்டு ஒரு கட்சி 51 சதவிகித வாக்குகளைப் பெற்று பல தொகுதிகளையும் வென்று இருந்தால் அக் கட்சிக்கு 70 இடங்கள் கிடைக்கும். மற்றைய கட்சிகள் மிகச் சிறிதளவு வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் அதாவது  49 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தால் 30 இடங்கள் வழங்கப்படும். அதாவது வாக்கு விகிதம் 51:49 என்றூ இருந்தாலும் கிடக்கும் இருக்கைகள் 70:30 என்றா விகிதத்திலே அமையும்.

இதுவரை இல்லாத அளவுக்கு 150க்கும் மேலான பெளத்த பிக்குகள் இந்த பொது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மைத்திரியின் நிலைமை ஒரு ஆளுமைக்கு உட்படாமல் இருப்பதும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிக்காவும் மைத்திரியுமாக மூவர் என்ற நிலையை விட்டு ஒருவருக்கொருவர் சிரித்து கொண்டே தனித்தனியாக வெவ்வேறு திசையில் முகத்தை திருப்பிக்கொண்டு பயணிக்கும் நிலைதான் உள்ளது.

இதற்கிடையில் ரணிலுக்கும் சந்திரிக்காவும் உள்ளார்ந்த போட்டிகள் யார் சொல்வதை மைத்திரி கேட்பார் என்ற பலப்பரீட்சைகள் பொம்மையான மைத்திரிக்கும் கொடிய ராஜபக்சவுக்கும் நடக்கும் பலப்பரீட்சைதான் இந்த நாடாளுமனறத் தேர்தல்.

தமிழர் பகுதியில் போட்டியிடும் வேட்பாளார்கள் மத்தியிலும் சரியான ஒருங்கிணைப்பும் இல்லை. மைத்திரி வந்தாலும் ராஜபக்‌ஷ வந்தாலும் தமிழர்களுடைய நிலைமை மேம்படாது என்பது தான் நிலை.

இந்திரன்கள் மாறினாலும்........ இந்திரசபை ஒன்றுதான்.



- குமுதம் -

Geen opmerkingen:

Een reactie posten