1994ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராவதற்கு ஸ்ரீ.மு. காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஆஷ்ரப் எவ்வாறான சாணக்கியத்தைக் கையாண்டு மு.கா.வை தீர்மானிக்கும் சக்தியாக மாற்றினாரோ, அதே வழியை இம்முறை பொதுத்தேர்தலில் கையாண்டு ரணிலை பிரதமராக்கும் சாணக்கியத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளதாக கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில்லறைக் கட்சிகளுக்கு வாக்களித்து மிகவும் பெறுமதிவாய்ந்த வாக்குகளை வீணாக்காமல் முஸ்லிம்களின் சமூக கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமது இருப்பையும் சுயமரியாதையையும் கெளரவத்தையும் பேணிப் பாதுகாக்க முடியுமென தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாம் பல இளப்புக்களைச் சம்பாதித்திருக்கிறோம், நாம் ஒற்றுமையாக இருந்தால் எம்மில் பிளவு வருவதற்கோ, நாம் அடிமையாவதற்கோ எந்த சந்தர்ப்பமும் ஏற்படாது.
எனவே ஒற்றுமைப்பட்டு இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க நாம் நம் சொந்தங்களைக் கேட்டுக்கொள்வோம்.
இன்று எங்கு பார்த்தாலும் ஆளுக்கொரு கட்சி, நாளுக்கொரு கட்சியாக ஆரம்பித்து அனைவருக்கும் தேசியத்தலைவர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரின் இந்த ஆசைக்கு நமது சமூகத்தின் விடிவைப் பாழாக்கிவிடுவது எந்தவகையிலும் நியாயமில்லை.
எனவே நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு சில்லறைக் கட்சிகளையும் அதில் முகம்காட்டும் சந்தர்ப்பவாத வேட்பாளர்கள், அரசியல் வாதிகளையும் தூக்கிவீசி விட்டு சமூகத்தின் குரலாய் ஒலிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பக்கம் ஒன்றிணைந்து ஒருமித்து குரல் கொடுத்து நமது தேவைகளை நிமிர்ந்து நின்று பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார்.
இன்றைய தேர்தலானது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்ட தேர்தல் இதன் மூலம் சிறுபான்மைச் சமூகத்தின் வாழ்வியல் தங்கியுள்ளது.
ஒவ்வொருவரும் அவரவர் சுயநலத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகம் சீரழிந்து கொண்டு செல்கிறது. சமூகத்தின் பக்கம் தங்களின் பார்வைகளைத் திருப்ப மறுத்து அவர்களின் பக்கம் சமூகத்தின் பார்வையைத் திருப்ப முயற்சிக்கின்றனர்.
எனவே அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற இன்றே ஒன்றிணைவோம் வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்தார்.
Geen opmerkingen:
Een reactie posten