தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 juli 2015

மகிந்தவின் அரசியல் மீள்வருகையால் ஏற்படும் ஆபத்தை சிங்கள இனம் உணர்கிறதா?

கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம் நாட்டுக்கு நல்ல சகுனம் ஏற்பட்டுள்ளதாகவே பலராலும் கருதப்பட்டது. அந்த எதிர்பார்ப்பின்படியே முடிவுகளும் அமைந்தன.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் புதிய ஜனாதிபதியாக தெரிவானார். சில வெளிநாடுகளின் பின்புலத்தோடும், கூட்டுக் கட்சிகளின் பங்களிப்போடும், மூவின மக்களின் ஆதரவோடும் அவரது வெற்றி சாத்தியமானது.
குடும்ப ஆதிக்க இராணுவ மேலாதிக்க ஆட்சிமுறை நீக்கப்பட்டது, லஞ்ச ஊழல் புரிந்த அரசு நீக்கப்பட்டது, அடக்கு முறை அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது போன்ற வெற்றிக் கோசங்கள் அதன்போது வெளியிடப்பட்டன.
இலங்கை மக்களிடையே அத்தகைய மகிழ்ச்சி மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது எனலாம். ஒரே கட்சிக்குள் போட்டி அரசியல் என்ற புயலுக்குள் சிக்கி, திக்குத் தெரியாத நிலையை முதல் நூறுநாட்களிலேயே எட்டியது புதிய அரசு.
சகுனப் பிழை ஏற்பட்டதோ தெரியவில்லை, சாண் ஏற முழம் சறுக்கும் நிலையை புதிய அரசு எட்டியது. அதற்குக் காரணமாக அமைந்தது மகிந்தவின் மீள் எழுகையாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று எதிர்பார்த்திராத மகிந்த, அடிபட்ட பாம்பாக சிறிது காலம் பதுங்கிக் கிடந்தார். ஆட்சி அதிகாரமற்ற ஒரு வாழ்க்கையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆள், அம்பு, சேனை என்பவற்றோடு, மக்களின் வரிப்பணத்தில் சுகபோகத்தை அனுபவிக்கும் வாழ்நாள் அதிபராக தெடர்ந்து தானே இருப்பேன் என்ற கனவோடு வாழ்ந்தவருக்கு, அவரின் கீழ் கடமையாற்றிய மந்திரி ஒருவரால் ஏற்பட்ட தோல்வி செருப்படியாகவே விழுந்தது எனலாம்.
‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற சரித்திரக் கதையில் வரும் கதாபாத்திரங்கள்போல் ஆட்சிபுரிந்த மகிந்தவோடு கூட்டு களவாணிகளாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தூண்டுதல் கொடுத்ததால் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தார் மகிந்தர்.
ஊழலில் பங்கு கொண்டவர்கள் புதிய அரசால் தங்கள் தலைக்கும் ஆபத்து வரும் என்று கருதியே மகிந்தாவை முன்நிறுத்தி அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். மகிந்தாவின் மீள் வருகையே தமக்கான பாதுகாப்பு என்ற வகையில் கட்சியை பிளவுபடுத்தவும், மகிந்தாவை முன்னிலைப்படத்தி புதிய அணி ஒன்றை உருவாக்கவும் முயன்றார்கள்.
தனது குடும்ப அரசியலுக்கு இணக்கமாகவும், கூட்டு ஊழலுக்கு துணையாகவும் இருந்த முக்கிய உறுப்பினர்களின் தொடர்ச்சியான முயற்சியால் தேர்தல் வெற்றியில் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், அரசியல் சூதாட்டத்தில் களம் இறங்கினார் மகிந்த.
தோல்வியை சந்தித்திருந்தாலும், பதவி ஆசை மகிந்தவை விட்டு விலகவே இல்லை. தரக் குறைவு என்றாலும், என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை எட்டவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார். அதற்கான வளமும், பணபலமும், இனவாத சிந்தனையாளர்களின் ஆதரவும் அவருக்கு இருந்தது.
மக்களிடம் அபகரித்து பதுக்கி வைத்த பணத்தை தாராளமாக இறைக்கவும் செய்தார். புத்த மத யாத்திரிகைகள் மூலம் பௌத்த பீடங்களை இனவாத அரசியலுக்கான மேடைகளாக ஆக்கிக்கொண்டார். அதன் பலனை அவர் எட்டிவிட்டதாகவெ தெரிகிறது. மைத்திரியின் கையாலாகாத அரசியல் நிலைமை தினமும் வெளிப்படும் அளவுக்கு மகிந்தவின் செல்வாக்கு வலிமை பெற்றுள்ளது.
அரச தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் யாவும் மகிந்தாவின் ஆதரவுத் தலைமைகள் மூலம் விலத்தப்பட்டு, தேர்தலுக்கான வேட்பு மனுவில் கையெழுத்திடும் அளவுக்கு அரசியல் களத்தில் மகிந்த முன்னேறியுள்ளார்.
அவருக்கான அனுமதி ஜனாதிபதியால் வளங்கப்பட்டதை வெளிப்படுத்துவதற்கே இன்றும் அரசதரப்பை சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு மாறுபட்ட கதைகளை சொல்லும் நிலையிலேயே இருக்கிறார்கள். ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, இரண்டு பக்கமும் ஏதோ ஒரு திட்டத்துடனே காய்க் நகர்த்தப் படுகின்றன.
ஆனால் இடையில் அகப்பட்டு நிற்பவர் ஜனாதிபதி மைத்திரிதான். இரண்டு பக்கமும் தலை ஆட்டவேண்டிய நிலையில் அவர் அகப்பட்டுள்ளார். ஆனாலும் அவர் என்ன முடிவை எடுத்தார் என்பது வேட்புமனு தாக்கல் முடிவடையும் திததியில் அனைத்து தரப்பினருக்கும் தெரிய வரும். அதுவரை வதந்திகளிலிருந்து விலகியிருப்பதே நல்லது.
பிரதமர் பதவியை நோக்கியே மகிந்தவின் அரசியல் நகர்வுகள் அமைந்துள்ளன. பிரதம வேட்பாளருக்கான அனுமதி கிடைக்காவிடினும், சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தலில் அதிக ஆசனங்களை பெறுமிடத்து, அதிகப்படியான வாக்குகளை பெற்றவராக பிரதமர் பதவியை தனக்கு வளங்கும்படி மைத்திரிக்கு அழுத்தத்தை கொடுக்கும் நோக்குடனேயே குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட மகிந்த முனைந்துள்ளார்.
இலங்கை அரசியல் நிலைமைகளில் என்ன மாற்றம் ஏற்படும் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஜனநாயக விரோதியாக கருதப்பட்டு தோற்கடிக்கப்பட்ட மகிந்தவுக்கும், அவரது சகாக்களான ஊழல்வாதிகளுக்கும் தேர்தலில் போட்டியிட மைத்திரி அனுமதித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இலங்கையின் தேர்தல் களநிலைமையில் மேலும் குழப்ப நிலை தோன்றியுள்ளது.
சந்திரிக்கா கூட முரண்பட்ட நிலையில் திடீரென லண்டன் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. இலங்கையின் இன்றைய அரசியல் நிலையில், மீண்டும் ஒரு குடும்ப அதிகார ஆட்சிக்கான அத்திவாரம் இடப்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
மகிந்தாவின் அரசியல் அத்தியாயம் இன்னும் ஓயவில்லை என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. போர் வெற்றியின் நாயகன், நாட்டை கடன் சுமையில் தள்ளினாலும் அபிவிருத்தி மூலம் நாட்டை வளப்படுத்திய தலைவன்,
சர்வதேசத்தையே எதிர்த்து நின்ற தலைவன் என்பது போன்ற சிங்கள மக்களின் நம்பிக்கையானது இலங்கை அரசியலில் மேலும் செல்வாக்கை செலுத்தும் அளவுக்கு மகிந்தாவுக்கு வலிமையை கொடுத்துள்ளது.
ஆனால் மகிந்தவை வெறுப்பதற்கும் வீழ்த்த வேண்டும் என்ற நினைப்பதற்கும் சிங்கள இனத்தை விடவும் மேலான காரணங்கள் பல தமிழினத்துக்கு இருக்கின்றன.
ஆனாலும், இலங்கை மக்கள் என்ற பொதுவான ஒரு நிலையில் முழு நாட்டின் வளத்தையும் சூறையாடிய ஒரு தலைவனை, குடும்ப அதிகார ஆட்சியை பத்து வருடங்களுக்கு மேல் நிலைநாட்டிய ஒரு தலைவனை, ஊழல் பெருச்சாளியாக இருந்த ஒரு தலைவனை,
மனிதத்தை தொலைத்த ஒரு இனவாதியை, இராணுவப் பின்புலத்தோடு எதேச்சாதிகார ஆட்சி புரிந்தவரை, ஜனநாயகத்தை மூழ்கடித்த ஒரு சர்வாதிகாரியை மீண்டும் அதிகார பீடத்தில் இருத்த சிங்கள இனம் முன்வருமானால், நாடு மேலும் சீரழிவதை தடுக்க முடியாது என்பதே எமது கருத்தாகும்.

க.ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com

Geen opmerkingen:

Een reactie posten