[ வலம்புரி ]
ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கமுடியும் என்பது ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த அரசியல் அமைப்பின் முடிவு.
இருந்தும் இரண்டு தடவைகள் என்ற கால எல்லைக்கு அப்பாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பதே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நோக்கமாக இருந்தாலும் அது நிறைவேறாமல் போயிற்று.
காமினி திசநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னிலைத் தலைவர்களாக்க ஜே.ஆர் முயற்சித்தாராயினும் காலம் விடவில்லை.
கூடவே ஆர்.பிரேமதாச, ஜே.ஆருக்குப் பயப்பீதியை ஏற்படுத்துபவராக இருந்தார். இதன் காரணமாக பிரேமதாசவுக்கு இடத்தைக் கொடுத்து விட்டு மெளனமாகிவிடுவதே புத்திசாலித் தனமானது என ஜே.ஆர் முடிவு செய்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு காமினி திசநாயக்கவை, அத்துலத் முதலியை முன்னிலைப்படுத்தும் நீங்கள் உங்களின் மருமகனாகிய ரணில் விக்கிரமசிங்கவை ஏன் கட்சியில் முதன்மைப்படுத்த வில்லை என சிலர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் கேட்டனர். அதற்கு ஜே.ஆர் கூறியது “எனக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர் புத்தபிக்குவாக போய் விட்டார்.
அவருடைய இடத்தில் வைத்துத்தான் ரணில் விக்கிரமசிங்கவையும் நான் பார்க்கிறேன்” என்றார் ஜே.ஆர்.
ஆட்களை இனம் காண்பதில் ஜே. ஆருக்கு நிகர் யாருமில்லை என்றாலும் மகிந்த ராஜபக்வும் ஓர் அளவிற்கு ஆட்களை இனங்காணக்கூடியவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது நள்ளிரவு வேளையிலும் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகைக்கு மகிந்த அழைத்தார்.
தனக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இருக்கக்கூடியவர் ரணில் என்று மகிந்த தீர்மானித்ததிலிருந்து ஆள் இனங்காணல் என்ற விடயத்தில் மகிந்தவுக்கும் அதிக புள்ளி வழங்கலாம்.
எது எப்படியோ ஜே.ஆர்., காமினி, அத்துலத் முதலி, பிரேமதாச என்ற எல்லைகளைக் கடந்து ஐக்கிய தேசியக் கட்சி ரணிலின் தலைமையைத் தாங்கி நிற்கிறது. இதைத்தான் விதி என்று சொல்வது போலும்.
எதுவாயினும் ஆட்களை இனங்காணுதல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதற்கு முன்னதாக, நேர்மையானவர்கள், தமிழினத்திற்கு அநீதி இழைக்காத வர்கள் யார்? என்பதை இனங்காண்பது மிகவும் அவசியம்.
நல்லவர்களை-நேர்மையானவர்களை-இனத்தின் விடிவுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்றம் அனுப்புவதே நாங்கள் செய்ய வேண்டிய முதற்கடமையாகும்.
பிழையானவர்களை, தமிழ் மக்களுக்காக எதுவும் செய்யாமல் வெறும் பேச்சுக்களில் அரசியல் நடத்துபவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் அந்தப் பாதகத்தை நாமே அனுபவிக்க வேண்டி வரும்.
எனவே இனங்காணுதல் என்பது மிகவும் முக்கியமானது. இதை தமிழ் மக்கள் மிக நிதானமாக-மிக நேர்த்தியாகச் செய்தாக வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten