தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

உரி­மை­களை வென்­றெ­டுக்க கூட்­ட­மைப்­புடன் அணி திர­ளுங்கள்: மாவை சேனா­தி­ராஜா



60 ஆண்டு காலமாக உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ் மக்களின் இலட்சிய வேட்கை இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அந்த இலட்சியத்தை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டுமென யாழ்.மாவட்டத்தின் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
சாவகச்சேரி நகரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்துக் காந்தி செல்வநாயகத்தின் தலைமையில் அகிம்சை ரீதியில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிங்களப் பேரினவாதிகள் எம்முடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதும் அவற்றையெல்லாம் திட்டமிட்ட முறையில் அவர்களே மீறி வந்தார்கள். தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்து பேரினவாத ஆட்சியை முன்னெடுக்க முனைந்தார்கள்.
இதனால் 80 களில் அகிம்சை ரீதியிலான உரிமைப் போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாற்றமடைந்தது. இன்று மீண்டும் எமது அடையாளங்களை உறுதிப்படுத்தி எமது மண்ணில் நாம் பண்பாட்டு ரீதியான வரலாற்று ரீதியான பூர்வீக இனம் என்பதை நிலை நிறுத்துவதற்காக அகிம்சை ரீதியில் போராடுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
எமது உரிமைகளை வென்றெடுத்து தமிழ் மக்கள் தமது சொந்த மண் ணில் அடையாளங்களை உறுதிப்படு த்தும் வகையில் கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ வேண்டும். அதுவரையில் எமது உரிமைப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதுவே எமது இலட்சியம். எமக்குச் சொந்தமான மண்ணில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். இதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
உயர் பாதுகாப்பு வலயங்களையும் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் பல்வேறுபட்ட நிலைகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். சர்வதேசம் இன்று எமது பிரச்சினைகளை நன்குணர்ந்துள்ளது.
அவற்றிற்குத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமென்ற நிலையிலுள்ளது. நாம் குடும்ப ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை உருவாக்கினோம். எமது பலத்தையும் பேரம்பேசும் சக்தியையும் தென்னிலங்கை உணர்ந்துள்ளது.
இந்நிலையில் எமது உரிமைப் போராட்டத்தை வென்றெடுக்கும் இலட்சியத்தை அடைவதையே அன்று முதல் இன்றுவரை கொள்கையாகக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது மக்கள் அணி திரள வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten