இது கறுப்பு ஜுலை வாரம். தாயகத் தமிழர்களின் இதயங்களில் விடுதலை நெருப்பை மூட்டிய வாரம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக ஈழத் தமிழினம் தனது உரிமைக்களை இழக்க ஆரம்பித்திருந்தது.
தமிழ் மக்களினதும், தமிழ் தலைவர்களினதும் வேண்டுகோள்கள், கோரிக்கைகள் என்பன காலத்துக்கு காலம் இலங்கையை ஆண்ட சிங்கள அரசுகளால் நிராகரிக்கப்பட்டே வந்தன.
தமிழ் தலைவர்களோடு ஒப்பந்தங்கள் செய்வதும், சிங்கள பேரினவாதகளின் தூண்டுதலால் அவை கிழித்தெறியப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
அவ்வப்போது தமிழர்மேல் தொடுக்கப்டும் வன்முறைகளால் தமிழ் மக்களின் உயிர்கள், உடமைகள், நிலங்கள் என்பன சிங்கள காடையர்களால் பறிக்கப்பட்டன.
அதன் உச்சமே 1983 ஜுலையில் இடம்பெற்ற தமிழர் மீதான இன அழிப்பின் ஆரம்பம்.
அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் இனவாத அரசில் அங்கம் வகித்த அடிப்படைவாத காடையர் கூட்டம் தமிழ் மக்களை வேட்டையாடியது.
மனித குலமே வெட்கப்படும் அளவுக்கு, சர்வதேச நாடுகளே கண்டிக்கும் அளவுக்கு ஒரு இனவெறியாட்டத்தை நடாத்தி முடித்தது இலங்கை அரசு. அதுவே அகிம்சை வழியில் போராடிய தமிழ் தலைமைகளை புறம்தள்ளி, இளைய தமிழ் தலைமுறையை ஆயுதம் ஏந்த வைத்தது.
இலங்கை எங்கும் பரந்துவாழ்ந்த தமிழ் மக்களின் உயிர்களை இனக் கலவரங்கள் மூலம் சிறிது சிறிதாக பறித்து, அவர்களது உடமைகளை அபகரித்து, அந்தந்த பிரதேசங்களை விட்டே விரட்டியடித்த சிங்களவர்கள், 83 ஜுலையில் படுபாதக வன்முறை மூலம் மிகப்பெரியதொரு உயிர் உடமை அழிவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தினார்கள்.
அத்தகைய கொடுமைகளால் வெட்டப் பட்டவர்களும், தீ மூட்டி எரிக்கப்பட்டவர்களும், அழிக்கப்பட்ட சொத்துக்களும், உடமைகளை இழந்தவர்களும், அங்கவீனம் ஆனவர்களும், மனநோயாளிகளாகப் போனவர்களும் எண்ணில் அடங்காதவர்களானார்கள்.
தமிழர் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத வடுவாகப் பதிந்துவிட்ட இந்த சோக நாட்களை 32 வருடங்கள் கழிந்த நிலையிலும் தமிழினம் நினைவு கூரும் நிலையில், அந்த துயரில் புலம்பெயர்ந்த தமிழர்களாக நாமும் இணைந்து கொள்கிறோம்.
1983 இல் ஆரம்பித்து, 2009 வரை லட்சக்கணக்கான உறவுகளையும், இளம் தலை முறையினரையும் இழந்துவிட்டபோதும், இன்னமும் விடிவு கிட்டாத நிலையில் மீண்டும் ஒரு தேர்தலை தமிழினம் சந்திக்கிறது.
தேர்தலுக்கு ஒரு மாதகாலம் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கட்சி நிலவரங்களை கணிப்பிட முடியாத அளவுக்கு குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னைய தேர்தல்களை போன்று ஒருபக்க சார்பான அலை வீசுவதாகத் தெரியவில்லை.
கட்சிகளுக்கிடையேயான போட்டி அதிகரித்திருப்பதையும், தமிழ் மக்களிடையே பிளவு நிலை அதிகரித்திருப்பதையும், யாரை ஆதரிப்பது என்று புரியாத குழப்பம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
முன்னைய தேர்தல்களில் தமிழர் கூட்டமைப்புக்கும், மகிந்தர் தன் கட்சியின் சார்பில் முன்னிறுத்திய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தரப்புக்குமே அதிகம் போட்டி இருந்ததாக கருதப்பட்டது.
கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டது என்றாலும், தெற்கின் பிரதான கட்சிகள் இரண்டும் தமிழ் அங்கத்தவர் மூலம் பாராளுமன்ற ஆசனங்களை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
இம்முறையும் வடபகுதி தேர்தல் களத்தில் தெற்கின் பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன என்பதோடு, டக்ளஸ் அவர்களின் கட்சி அரச துணையின்றி தனியாக நிற்கிறது என்பது அவருக்கான பலயீனமாக கருதப்படுகிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி புலம்பெயர் தமிழரிடம் பெற்றுக்கொண்ட ஆதரவோடு பலமான நிலையில் போட்டியிடுகிறது. ஜனநாயக போராளிகள் என்ற முன்னாள் போராளிகளின் புதிய கட்சியும் போட்டியிடுகிறது.
சந்தேகத்தோடும், கேள்விக்குறியோடுமே அவர்களது திடீர் வருகை நோக்கப்படுகிறது. மொத்தத்தில் இவர்கள் அனைவருமே தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிடுகிறார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.
இன்றைய நிலையில் தமிழ் கூட்டமைப்பின் அதிகப்படியான வெற்றியே நமக்கு உகந்தது என்று கருதப்படுகிறது. தெற்கின் அரசியல் குழம்பியுள்ள நிலையில், மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிரான விசாரணை அறிக்கை எதிர் கொள்ளப்படும் நிலையில்,
மகிந்தாவின் வருகையால் மேற்குலகம் மனம் தளர்ந்துபோயுள்ள நிலையில், தமிழரின் ஒன்றுபட்ட பலமும், இணைந்த குரலும் ஓங்கி ஒலிப்பதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பமாகவே இது கருதப்படுகிறது.
தெற்கின் அரசியல் களம் பிழவுபட்டுள்ள நிலையில், தமிழர் தரப்பை பாதுகாப்பான நிலையில், வலிமையான தளத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.
அரசியல் போட்டிகளால் எமக்கான வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதே தமிழர்களின் பொதுவான நோக்கு. தமிழ் கூட்டமைப்பின் சில அங்கத்தவர்கள் மேல் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை.
அதை வெளிப் படுத்துவதற்கு இது சரியான சந்தர்ப்பம் அல்ல. எதிரி தமக்குள்ளே முட்டிக்கொள்ளும்போது நாம் சுதாகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதய வாய்ப்பைப்போல் ஒரு அரசியல் சூதாட்ட நிலை தெற்கு இலங்கையில் இனி ஏற்படுமோ தெரியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பேதங்களை மறந்து தமிழ் கூட்டமைப்புக்கு கொடுக்கப்படும் இறுதிச் சந்தர்ப்பமாக கருதி அவர்களை வெற்றிபெற செய்யவேண்டியது அவசியமாகிறது.
அதேசமயம், கூட்டமைப்புக்கு எதிராகவே செயல்படுவோம் என்று நினைப்பவர்கள், கடந்தமுறை தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தது பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்ததுபோல் அல்லாமல், தமிழின விடுதலையை முன்னிறுத்தி போடடியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களை விருப்பு வாக்கின் மூலம் தெரிவு செய்வது மேல் என்று கருதுகிறோம்.
தெற்கின் அரசியல் தலைவர்கள் எவரும் இதுவரை பிரச்சார நோக்கில் வடபகுதிக்கு வரவில்லையென்றாலும், ரணில் விரைவில் வடபகுதிக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்.
பிரச்சாரத்துக்காக ஜனாதிபதி மைத்திரி வடபகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், மகிந்த தன்னை தோற்கடிக்கடித்த வடபகுதி தமிழ் மக்களைத் தேடி வருவாரா என்பதை சொல்ல முடியவில்லை.
மதம் பிடித்திருக்கும் மகிந்த சுயநலத்துக்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் பிரச்சாரத்துக்கு வடபகுதிக்கு வராமல் விட்டாலே அவரது சிந்தனையின் வக்கிரத்தை புரிந்து கொள்ள முடியும்.
அதுவும், தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக வருவாரானால், தமிழ் மக்கள் அச்சுறுத்தலான ஒரு எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம்.
சரியாக கணிப்பிட முடியாத ஒரு தேர்தல் நிலைவரம் தெற்கில் நிலவுவதால், சிறு வித்தியாசத்தில் பிரதான கட்சிகள் ஆசனங்களை பெறுமிடத்து, மகிந்தகூட தமிழரை நாடும் நிலை ஏற்படலாம்.
கோபத்தை மனதில் சுமந்தபடி தமிழ் மக்கள் மீது அவர் பாசத்தை பொழியலாம். அவர் தமிழரை நாடும் ஒரு சந்தர்ப்பம் அமைவதற்கு கூடுதல் ஆசனத்தை தமிழர் கூட்டமைப்பு பெற்றிருக்க வேண்டும்.
அந்த ஒரு காரணத்துக்காகவே கூட்டமைப்புக்கு அதிகப்படியான ஆதரவை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இம்முறை கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியான முறையில் கூட்டமைப்பு பாவிக்காமல் மீண்டும் சுயநல அரசியலில் இறங்குவார்களானால், அடுத்தமுறை மக்கள் அவர்களை தண்டிக்கும் நிலை நிச்சயம் ஏற்படும்.
க.ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com
க.ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com
Geen opmerkingen:
Een reactie posten