பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை.
இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்ப்பவர்கள்தான், விக்னேஸ்வரன் என்கிற மக்கள் தலைவனின் உயரத்தை உணர முடியும்.
பதவி - நாற்காலி என்கிற கவலையெல்லாம் இல்லாமல், துண்டை உதறித் தோளில் போட்டபடி உண்மையைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் விக்னேஸ்வரன். அதைப் பார்த்துத்தான் பயப்படுகிறது இலங்கை.
'வடக்கில் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது எப்படி' என்கிற தலைப்பில் சென்ற மாதம் 'அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை' நடத்திய மக்கள் சந்திப்பில், விக்னேஸ்வரன் ஆற்றிய உரை ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இராணுவ அதிகாரிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், இராணுவத்தின் மீது மிக மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை அவர் சுமத்தினார்.
"2009 மே மாதத்துக்குப் பிறகே, வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதற்குமுன், போதைப் பொருள் பாவனை இப்படியெல்லாம் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் போதைப் பொருள் பாவனை அறவே இல்லை.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வடமாகாணம் இருக்கிறபோதே, போதைப் பொருள் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இராணுவத்துக்கு இருக்கிறது"... என்கிற யதார்த்தத்தை விக்னேஸ்வரன் போட்டு உடைக்க, மறுநாளே அதைப் பரபரப்பாக்கிவிட்டன கொழும்பு பத்திரிகைகள்.
உலகின் எந்த நாட்டிலாவது, இப்படியொரு குற்றச்சாட்டை அந்த நாட்டின் மாகாண சபை முதல்வர் ஒருவர் சுமத்தியிருக்கிறாரா? எனக்குத் தெரியவில்லை. 'நம் நாட்டின் இராணுவம் எங்கள் மாநிலத்தில் போதைப் பொருளைப் பரப்பும் சேவையைச் செய்து கொண்டிருக்கிறது' என்று யாராவது பேசி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே அந்த வகையிலான முதல் குற்றச்சாட்டு, இதுதான் என்று நினைக்கிறேன்.
உண்மையை மூடிமறைக்காமல், மென்று விழுங்காமல், உள்ளதை உள்ளபடி துணிவுடன் அம்பலப்படுத்தினார் விக்னேஸ்வரன்.இ ராணுவமோ இலங்கை அரசோ, அந்தக் குற்றச்சாட்டை அழுத்தந்திருத்தமாக மறுக்கக்கூட முன்வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பௌத்த சிங்கள ரவுடி அமைப்புகள் 'விக்னேஸ்வரன் ஒரு தேசத் துரோகி' என்று முக்கி முனகியதோடு விஷயம் முடிந்துவிட்டது.
விக்னேஸ்வரன் சொன்னதில் எள்ளளவும் பொய்யில்லை - என்பதை உறுதி செய்கிற விதத்தில், சென்றவாரம், கொழும்பு நிகழ்ச்சியொன்றில் வேதனையோடு பேசியிருக்கிறார்,
இலங்கையின் பிரபல தேரர்களில் ஒருவரான சோபித தேரர். "நாடாளுமன்றம் போதைப் பொருள் வியாபாரிகளால் நிரம்பி வழிவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று, விக்னேஸ்வரனைப் போன்றே சிதறுதேங்காய் விட்டார், சோபித தேரர்.
"நாடு போதைப்பொருள் வர்த்தகத்தின் மையப்புள்ளி ஆகிவருகிறது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகிற எம்.பி.க்களுக்கு, அவர்கள் வகிக்கிற பதவியே பாதுகாப்பாகி விடுகிறது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் அவர்கள் ஈடுபடுவது தெரிந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை"......... இதெல்லாம் விக்னேஸ்வரன் முன்மொழிந்ததை சோபித தேரர் வழிமொழிந்திருப்பதன் சுருக்கம்.
விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை மறுத்த ஒருசிலரின் செவுளில் அறைவதாக இருந்தது - சோபித தேரரின் குற்றச்சாட்டு. 'விக்னேஸ்வரன் இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது... மைத்திரிபாலவையும் ரணிலையும் அனுசரித்துப் போகும் சாணக்கியம் அவருக்குத் தேவை' என்றெல்லாம் எங்கேயோ இருந்து ஒலித்த அசரீரிகள்,
கொழும்பிலிருந்தே கேட்ட சோபித தேரரின் உரத்த குரலில் அமுங்கிவிட்டன. (சாணக்கியம் என்பதென்ன, எவர் காலையேனும் நக்கிப் பிழைப்பதா - என்று விக்னேஸ்வரன் எதிர்க் கேள்வி போடவும் இல்லை.... உண்மையான சாணக்கியம் அதுதானே!)
விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதைப் பொருள் கலாச்சாரம், ராணுவத்தினரின் காலத்தில்தான் பரவியிருக்கிறது - என்கிற குற்றச்சாட்டில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை உற்றுப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
அந்த ஒற்றை வரியில், ஈழத்தின் வரலாறும் அடங்கியிருக்கிறது, வலியும் அடங்கியிருக்கிறது. அந்த மண்ணில் உலவிய மாவீரர்களுக்கும், அந்த மண்ணில் திரியும் ராணுவப் பொறுக்கிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை, இதைக் காட்டிலும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்ட வேறு எவராலும் இயலாது.
இராணுவத்தைப் பற்றிய இந்த நேரடிக் குற்றச்சாட்டை பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஒரு அசாதாரண குற்றச்சாட்டு. இப்படிக் குற்றஞ் சாட்டியிருப்பவர், ஒரு சாதாரண அரசியல்வாதியும் இல்லை. அவர், ஒரு மாகாணத்தின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மேலதிகமாக, சட்டத்தை முழுமையாக அறிந்தவர். மேடைகளில் அரசியல்வாதிகள் போல அவர் முழங்குவதுமில்லை, உளறுவதுமில்லை. உணர்ச்சி வசப்பட்டு உளறாமல், தான் சொல்வது என்ன என்பதை அறிந்தே பேசுகிற விக்னேஸ்வரனின் அந்தக் குற்றச்சாட்டைத்தான், வழிமொழிந்திருக்கிறார் சோபித தேரர்.
வடக்கில் இராணுவம் வந்தபிறகுதான் போதைப்பொருள் பரவுகிறது - என்கிற விக்னேஸ்வரனின் புகார், இலங்கை இராணுவத்தின் லட்சணத்தைக் காட்டுகிறது. 'இலங்கை நாடாளுமன்றம் போதைப்பொருள் வியாபாரிகளால் நிரம்பி வழிகிறது' என்கிற தேரரின் புகார், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் லட்சணத்தைக் காட்டுகிறது.
இலங்கை இராணுவமும் நாடாளுமன்றமும் என்ன கிழித்துக் கொண்டிருக்கின்றன - என்று கேட்பவர்களுக்கு இதைக்காட்டிலும் தெளிவான பதில் தேவையில்லை.
உன்னுடைய இராணுவம் ஒழுக்கக் கேடானது....
உன்னுடைய இராணுவம் பள்ளிப் பிள்ளைகளிடையே போதைப் பொருளைப் பரப்புகிறது....
உன்னுடைய இராணுவத்தின் இருப்பால், எங்கள் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.....
உடனடியாக எம் மண்ணிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறு....
உன்னுடைய இராணுவம் பள்ளிப் பிள்ளைகளிடையே போதைப் பொருளைப் பரப்புகிறது....
உன்னுடைய இராணுவத்தின் இருப்பால், எங்கள் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.....
உடனடியாக எம் மண்ணிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறு....
என்று பதவியேற்ற நாளிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார் விக்னேஸ்வரன். இன்றுவரை அதற்குச் செவிமடுக்க மறுக்கிறது இலங்கை அரசு. இந்த நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்தது மகிந்தன் மட்டுமல்ல.... வடக்கு மக்களின் வாக்குகளாலேயே ஜனாதிபதியான மைத்திரியும், அந்தப் பின்னணியிலேயே பிரதமரான ரணிலும் கூட மறுத்துவிட்டார்கள்.
விக்னேஸ்வரனின் நேர்மையான கோரிக்கையை எற்க மறுத்ததுடன் நின்றுவிடவில்லை மைத்திரிபால. அதற்கு நேர் எதிரான கோரிக்கை ஒன்றை ஐ.நா.விடம் வைத்திருக்கிறார் அவர்.
அண்மையில் நடந்த இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, 'ஐ.நா.வின் அமைதிப்படையில் இலங்கை ராணுவத்துக்குக் கூடுதல் இடம் கொடுக்க வேண்டும்' என்று குற்றவுணர்வோ கூச்சமோ இன்றி கோரிக்கை வைத்திருக்கிறார் அவர்.
ஐ.நா.படையில் சிங்களச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உலகெங்கும் போதைப் பொருளைப் பரப்புவது, அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பையை நிரப்புவது - என்று குறுகிய கால சாகுபடித் திட்டம் எதையாவது கைவசம் வைத்திருக்கிறாரா..... தெரியவில்லை!
இத்தனைக்கும், 2007ல், ஹெய்தி நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.நா. அமைதிப்படையில் இருந்த சிங்கள சிப்பாய்கள் 111 பேரும், 3 அதிகாரிகளும், குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்.
7 வயது குழந்தைகளைக்கூட அந்த மிருகங்கள் விட்டுவைக்காதது தெரியவந்தபிறகே, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த மிருகங்களை மீண்டும் ஐ.நா. படையில் சேர்த்தால்தான் உலகில் அமைதியும் சுபிட்சமும் ஏற்படும் என்று நினைக்கிறாரா, மைத்திரிபால?
(அந்த 114 மிருகங்களில் எத்தனை மிருகங்கள் வன்னி மண்ணில் நிறுத்தப்பட்டிருக்கின்றன? அதைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்!)
ஐ.நா. ஆய்வுக் குழு ஒன்று, 'குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய நாடுகளின் இராணுவத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைகளில் சேர்க்கத் தடை விதிக்க வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு பொறுக்கி இராணுவத்தைக் கொண்டுபோய் ஐ.நா.வின் தலையில் கட்ட மைத்திரி முயற்சிப்பது கொடுமையிலும் கொடுமை!
என்ன செய்வது.... ஆறு மாதங்களுக்கு முன் எந்த மகிந்தனைத் தமிழர்களின் வாக்குகளால் வீழ்த்தினாரோ, அதே மகிந்தனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்,
மைத்திரி என்கிற அந்த ஜனாதிபதி நாற்காலிக்காரர். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்கிற அருவருப்பான நிலையில் இருக்கிற ஒருவருக்குள் நாம் விக்னேஸ்வரனையா தேட முடியும்?
என்னைப் பொறுத்தவரை, முள்ளிவாய்க்காலுக்குப் பின், தமிழினத்துக்கு விக்னேஸ்வரன் கிடைத்திருப்பதும், சிங்கள இனத்துக்கு மைத்திரியும் மகிந்தனுமே கிடைப்பதும்தான் இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக ஆகப் போகிறது என்று நினைக்கிறேன்.
ஒரு நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டிய இராணுவம், அப்பாவி இளைஞர்களிடையே போதைப் பொருட்களைப் பரப்புவதையே லட்சியமாகக் கருதிச் செயல்பட்டு வருகிறது.
ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டிய நாடாளுமன்றம், போதைப்பொருள் விற்பனையாளர்களின் சொர்க்கமாகவே மாறிவிட்டிருக்கிறது.
அந்த சிங்கள ராணுவத்தையும், சிங்கள நாடாளுமன்றத்தையும் தமிழினம் முதலான மற்ற இனங்களின் தலையில் திணிக்க முயல்கிறது இலங்கை. இந்த அருவருப்புகளின் கீழ் அடிமைகளாக வாழவா பிறந்திருக்கிறது தமிழினம்?
'ஒற்றை இலங்கையின் கீழ் ஒன்றுபட்டு வாழ்வது' என்று துளிக்கூட வெட்கமில்லாமல் வார்த்தை விபசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் எவராயிருந்தாலும், அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் நாம்.
இராணுவத்திலும் நாடாளுமன்றத்திலும் பொறுக்கிகளே நிறைந்திருப்பதை விக்னேஸ்வரனும் சோபித தேரரும் வெட்டவெளிச்சமாக்கிய பிறகும், அந்த அமைப்புகளின் கீழ்தான் வாழ்ந்தாக வேண்டும் - என்று வற்புறுத்த இவர்கள் யார்? எங்கேயோ வாங்குகிற கூலிக்கு இங்கே வந்து குரைக்கப் பார்க்கிறார்களா?
சிங்கள அடிமையாகவோ, சீன அடிமையாகவோ, அமெரிக்க அடிமையாகவோ, இந்திய அடிமையாகவோ எவர் வேண்டுமானாலும் இருந்து தொலைக்கட்டும். வரலாறு, அவர்களைக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டுத்தான் வேறு வேலை பார்க்கும். முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டார்களே எங்கள் ஒன்றரை லட்சம் உறவுகள்.... அவர்களது உயிர்த் தியாகம் மட்டும்தான் வரலாற்றை உருவாக்கும்.
ஒன்றரை லட்சம், 70 ஆயிரம், 40 ஆயிரம் - என்கிற வெவ்வேறு உயிரிழப்புக் கணக்குகள் தான், இந்த இனத்தை அடிமைப்படுத்தப் பார்ப்பவர்களுக்கு இதுவரை முட்டுக்கட்டையாக நிற்கின்றன.
அந்தக் கணக்கைச் சொன்னவுடனேயே பதறித் துடிப்பது இலங்கை மட்டுமல்ல.... அமெரிக்கா, இந்தியா என்று அத்தனையும் பதறுகின்றன.
வட மாகாண சபையில் 'நடந்தது இனப்படுகொலைதான்' என்று தீர்மானம் போட்டவுடன் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து விக்னேஸ்வரனைப் பார்த்த முதல் நபர், அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் நிஷா பிஸ்வாஸ்.
'புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில் இப்படியொரு தீர்மானம் தேவையா' என்று அந்த அம்மையார் கேட்டது பழைய செய்தி. அப்போதே, 'குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை' என்று நிஷாவிடம் தெளிவாகத் தெரிவித்தவர் விக்னேஸ்வரன்.
சென்றவாரம் அமெரிக்கா போயிருந்த விக்னேஸ்வரனிடம் - 'இனப்படுகொலை குறித்தே பேசிக் கொண்டிராமல், வடக்கின் நல்லிணக்கம் - புனரமைப்பு - புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்' என்று நிஷா மீண்டும் அறிவுறுத்தியதாக செய்திகள் கசிகின்றன.
இப்படியெல்லாம் போதிக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை. இனப்படுகொலை செய்பவர்களுக்கு ஆயுதங்களை வாரி வழங்கிவிட்டு, இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுகிற வெட்கங்கெட்ட நாடு அது. விக்னேஸ்வரன் போன்ற ஒரு அறம் சார்ந்த அறிவாளியை, தனது அடப்பக்காரனாக மாற்ற முடியாது என்கிற உண்மையை அமெரிக்கா முதலில் உணரவேண்டும்.
குழந்தைகளும் ஆயுதம் ஏந்தியதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய புரிதலே இன்றி, அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியும் இன்றி, 'குழந்தைகள் எப்படி ஆயுதம் ஏந்தலாம்' என்று கேட்டவர்தான் திருவாளர்.
அமெரிக்கா. போர்க்குற்றம் செய்தவர்களை விடவே கூடாது - என்று சென்ற ஆண்டு சாமியாடிவிட்டு, இந்த ஆண்டு குற்றவாளிக்காக வக்காலத்து போடுகிற மேதாவியும் அவர்தான்!
உலக நாட்டாமைகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளைப் போராளிகளாக்குகிற சூழ்நிலை எது - என்பதை உணராமல் அவர்கள் பேசக்கூடாது.
ஒரு குழந்தை எப்படிப் போராளியாகிறான் - என்பதைச் சொல்ல ஒரு திரைப்படத்தையே உருவாக்கியிருக்கும் இயக்குநர் உதயபாரதியின் பார்வையில்தான் குழந்தைப் போராளிகளைப் பார்க்க வேண்டும் நாம்!
அதை அடுத்த வாரம் பார்ப்போம். கூடவே, புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளியை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது எனக்கு!
அடுத்த இதழில் அவைபற்றிப் பேசுவேன்!
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com
mythrn@yahoo.com
Geen opmerkingen:
Een reactie posten