தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 juli 2015

மஹிந்த இப்போது சாதாரண வேட்பாளர்! முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகளை பயன்படுத்துவது சட்டவிரோதம்!

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடவுள்ள சாதாரண வேட்பாளர் என்பதால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அவர் பயன் படுத்துவது சட்டவிரோதமானது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவருக்கு வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டதன் மூலம் ஐ. ம. சு. மு வுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் திருடர்கள், மோசடிகாரர்கள், எதனோல் வர்த்தகர்கள் இன்றி எதிர்காலம் கிடையாது என்பது புலனாவதாக தெரிவித்த அவர், நாட்டை கட்டி எழுப்புவதற்காக அன்றி மோசடிக்காரர்கள் மற்றும் திருடர்களை பாதுகாக்கவே மஹிந்த தேர்தலில் குதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐ. தே. க தலைமையகமான சிறி கொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச எம். பி மேலும் கூறியதாவது,
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானித்ததன் மூலம் சுதந்திரக் கட்சிக்கு திருடர்கள் மோசடிக்காரர்கள் இன்றி இருப்பு கிடையாது என்பது உறுதியாகிறது. இவர்களிலே ஐ. ம. சு. மு தங்கியுள்ளது என்பது உறுதியாகிறது.
அவர் சட்டம் ஒழுங்கையோ மக்களையோ ஜனநாயகத்தையோ பாதுகாக்கவில்லை. தவறு செய்தவர்களை தான் பாதுகாத்தார். ஐ. ம. சு. மு வுக்கு மீண்டும் அதிகாரம் சென்றால் நாட்டுக்கு ஏற்படும் அழிவை மக்கள் உணர்வார்கள். தவறானவர்களுக்கு மீண்டும் ஆட்சி அமைக்க இடமளிக்க மாட்டோம். அடுத்த தேர்தலில் ஐ. தே. க பெரும்பான்மை பலத்தை பெறும்.
சிறுபான்மை அரசாங்கமாக நாம் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம். ஒளடத சட்டத்தை நிறைவேற்றினோம். சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் செய்ய முடியாத பலவற்றை நாம் 105 நாட்களில் சாதித்துள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதியின் வருகை எமக்கு சவால் அல்ல. ஆனால் முன்னாள் ஜனாதிபதி கெளரவமாக தமது ஓய்வு காலத்தை கழித்தார்கள். மக்கள் நிராகரித்த மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கியது கட்சி முடிவாகும். அது தொடர்பில் சட்ட பிரச்சினை கிடையாது. இங்கு இருப்பது ஒழுக்கம், நேர்மை நியாயம் தொடர்பான பிரச்சினையாகும்.
அவர் அம்பாந்தோட்டையை கைவிட்டு குருணாகலைக்கு சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ நாட்டை கட்டியெழுப்பவன்றி திருட்டு மோசடி விசாரணைகளை தடுத்து திருடர்கள், மோசடிக்காரர்களை பாதுகாக்கவே வருகின்றார்.
மஹிந்த ராஜபக்சவின் மோசடி ஆட்சியை துரத்தவே ஜனாதிபதி மைத்திரிபாலவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.
ஜனாதிபதி நியாயமான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ஐ. தே. க ஆதரவாளர்களே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஐ. ம.சு. மு அல்லது சு. க வாக்குகளினால் அவர் வெல்லவில்லை. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவாறு நீதியானதும் சுதந்திர மானதுமான தேர்தலை நடத்த ஜனாதிபதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோப் குழு விசாரணைக்கு தேவையான சகல விடயங்களையும் திரட்டி அறிக்கை தயாரிக்க வேண்டும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் கோப் குழு ரத்தாகிறது. நான் சமர்ப்பித்து 2 கோப் அறிக்கைகளை பாராளுமன்றம் முழுமையாக அங்கீகரித்த அறிக்கைகளாகும். பாராளுமன்றம் கலைத்த பின் டியூ குணசேகர கோப் குழு தலைவர் கிடையாது. இந்த நிலையிலே அவர் கோப் அறிக்கை குறித்து தகவல் வெளியிட்டார்.
இது பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணானது. மஹிந்த ராஜபக்ச எம்மை போன்ற சாதாரண வேட்பாளராவார். அவர் முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிமார் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. சட்டம் தயாரிக்க சட்டவல் லுனர்கள் இவ்வாறான ஒரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் அது தொடர்பில் சட்ட ஒழுங்குகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
அவர் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் வேறு பதவி வகித்தாலும் அவர் எம்மை போன்ற சாதாரண வேட்பாளர் மாத்திரமே. பொதுத் தேர்தல் வேட்பாளர் என்ற வகையில் அவர் முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகளை அனுபவிப்பது சட்ட விரோ தமானது, ஒழுங்கீனமானது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten