அக்குரஸ்ஸவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவேசமடையக் காரணமாக இருந்தவர், தனது செயலுக்காக நேற்று மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அக்குரஸ்ஸ பழைய பேருந்து நிலையத்தில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, கூட்டத்தினர் மத்தியில் நடந்து சென்ற போது, திடீரென ஆவேசமடைந்து, சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முயன்றார்.
எனினும், அவரது பாதுகாவலர்கள் அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேடைக்கு கொண்டு சென்றனர்.
இந்தக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இது மகிந்த ராஜபக்சவின் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஒருவர் தனது கையை இறுகப் பற்றிக் கொண்டதால், தனக்கு வலித்து விட்டதாகவும், கைவிரல் முறிந்து போகும் அளவுக்கு அவரது பிடி இருந்ததாகவும், அதனால் தான், அவரைத் தள்ளிவிட்டு விரல்களைப் பாதுகாக்க முற்பட்டதாகவும் மகிந்த ராஜபக்ச பின்னர் விளக்கமளித்திருந்தார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது கையைப் பிடித்துக் கொண்டவருக்கும் இடையில், சிக்கிக்கொண்டவர் ஒரு கிராம அதிகாரி என்று தெரியவந்தது.
ஊடகங்களில் அவரது படம் ஊடகங்களில் வெளியானதையடுத்து அவரே தாக்கியதாக கருதி, அவருக்கு தொலைபேசி மூலம் பலரும் தொல்லை கொடுத்திருந்தனர். அத்துடன் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
எனினும், தமக்குப் பின்னால் நின்ற ஒருவரே, மகிந்த ராஜபக்சவின் கையைப் பிடித்து இழுத்தார் என்றும் அவரைத் தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்ட கிராம அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று, மகிந்த ராஜபக்சவின் கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படும் அக்குரஸ்ஸவை வசிப்பிடமாகக் கொண்ட எஸ்.எஸ்.ஜி.சமிந்த என்பவர் மாத்தறையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் சம்பவம் தொடர்பாக விபரித்த போது, “கூட்டம் இடம்பெற்ற போது நான் கொஞ்சம் மதுபோதையில் இருந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டதும் நான் இருந்த இடத்தையே மறந்து விட்டேன்.
நான் அவருடைய கையைப் பிடித்து இழுத்தேன். பாதுகாப்புத் தரப்பினர் மற்றொரு பக்கம் இழுத்தனர். சனக்கூட்டத்துக்கு மத்தியில் பாரிய நெரிசல் ஏற்பட்டது. என்னால் ஏற்பட்ட சங்கடத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என்று குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten