எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல. ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கும் வகையிலான அரசாங்கம் ஒன்றே எனக்கு அவசியமாகும்,,,
..மஹிந்த ராஜபக்சவுடன் ஜனவரி 8 ம் திகதிக்கு முன்னர் இருந்த எதிர்ப்பு இன்னும் உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற மாட்டார். அவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார். அவர் தோல்வியடைந்ததே சரித்திரம். நான் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் இல்லை. அவருக்கு வேட்பு மனு வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கடந்த காலத்தை வைத்தே எதிர்காலம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கவேண்டும். அதன் அடிப்படையில் சுதந்திரக்கட்சியை உடைத்துக்கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. அப்படி சுதந்திரக்கட்சியை சிதறடித்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு நாளை வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களாக என்னைப் போன்று விமர்சிக்கப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. காட்டிக் கொடுத்தவன், துரோகி என விமர்சிக்கின்றனர். இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு விமர்சனத்திற்குள்ளாகவில்லை.
ஆனால் நான் ஏற்படுத்திக் கொடுத்த ஜனநாயகத்தின் சுதந்திரத்தை அனைவரும் அனுபவிக்கின்றனர் என்பதை உணரும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஜனநாயக பண்புகளை நன்றாக அனுபவியுங்கள் என்றே நான் கூறுகின்றேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நான் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றமை தவறானது என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் நான் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றிருக்காவிடின் அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தையும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய நிதி அமைச்சரின் வரவு, செலவுத் திட்டத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கும் என்பதையும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி தனது தரப்பு நியாயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்கு தான் ஒருபோதும் விரும்பவில்லையென்றும் எனினும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக விருப்பமில்லாமல் அதற்கு அனுமதித்ததாகவும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார். இனவாதத்திற்கு எதிராகவும், மதவாதத்திற்கு எதிராகவும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு 62 லட்சம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
அதன் படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி வந்தார். இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அரசியல் காய்களை நகர்த்தி வந்தார்.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியை மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது.
இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய்ப்பு வழங்கக்கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
எனினும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவாளர்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் போட்டியிட முன்வந்தனர்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு விட்டார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன் பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளதுடன் தான் ஒருபோதும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்றும் கூறியிருக்கிறார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியில் செயற்பட்டுள்ள விதத்தை குறைகூற முடியாது.
எனினும் ஜனவரி 8ம் திகதி தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக வேட்புமனுவை வழங்கியமை மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதையும் மறுக்க முடியாது.
அரசியல் தலைவர்கள் எப்போதும் தமது கட்சி நலனை விடுத்து நாட்டினதும் மக்களினதும் நலன்குறித்து சிந்திக்கவேண்டியது மிக வும் அவசியமாகும். இதற்கு எமது நாட்டில் பல உதாரணங்களை நாம் முன்வைக்க முடியும்.
குறிப்பாக கடந்த 2004ம் ஆண்டு சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்தித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க த்தை கவிழ்த்து பாராளுமன்றத்தை கலைத்தார். இதனால் அடுத்த 10 வருடங்களில் நாடு எவ்வாறான சிக்கல்களை எதிர்நோக்கியது என்பதை யாவரும் அறிவார்கள்.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை உடையாமல் பாதுகாப்பதற்காக எடுத்துள்ள முடிவானது நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதே ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது. எவ்வாறெனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைப்பிடித்து வருகின்ற ஜனநாயக பண்புகளையும் விழுமியங்களையும் நாம் பாராட்டியாக வேண்டும்.
அதுமட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டால் கட்சிக்கு தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
எவ்வாறெனினும் தேர்தல் பிரசாரத்தின் ஆரம்பத்திலேயே ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை நாட்டு மக் களுக்கு தெளிவுபடுத்தியமை வரவேற்கத்தக்க விடயமாகும். அத் துடன் மக்கள் ஜனநாயக பண்புகளை பயன்படுத்துகின்றமை தொட ர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் முடிவுகளை எடுக்காமல் தனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் ஆழமாக சிந்தித்து அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றமையை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அத்துடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்பதில் அவர் தீர்மானங்களை எடுப்பதில் சிக்கல் இருக்கும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வாறெனினும் இந்த விடயத்தில் மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten