தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 juli 2015

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை: பிரித்தானியா



வடக்கு கிழக்கிலே அழிக்கப்பட்ட எல்லா விதைகளும் ஐ.நாவின் கதவைத் தட்டுகின்றன: சீ.யோகேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 12:06.06 PM GMT ]
இம்முறை வெற்றிலையில் வாக்கு கேட்டு வருபவர்களை வெற்று இலைகளாக மாற்றும் வகையில் எதிர்வரும் தேர்தல் முடிவு அமைய வேண்டும் என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள 15வது பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழக்கூடிய எங்களுடைய இனத்திற்கு உரிமைப் பிரச்சினை இருக்கிறது. அதை உடைத்தெறிந்து அதனூடாக ஏற்படுகின்ற இடர்களையெல்லாம் தாண்டி, எங்களுடைய உறவுகள் இந்த நாட்டிலே சுதந்திரமாக தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து விடயங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமது கொள்கையாக கொண்டு செயற்படுகிறது.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எமது மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே அரசியல் கட்சிகள் தவிர்ந்த 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தவிர எந்தவொரு தமிழரும் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கின்ற வாக்குகளை சிதைப்பதற்காக களமிறக்கியிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் பல தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். அதே போன்று தேசிய சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் தமது பிரச்சார மேடைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று கேட்கிறீகள். இந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் இந்த மண்ணை யாரும் அபகரிக்கக் கூடாது, அபகரிக்கவும் முடியாது, என்ற நோக்கிலே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பணியிலே உங்களுடைய மண்ணும் காப்பாற்றப்படுகிறது.
எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் எங்களுடைய நிலத்தை சூறையாடுகின்ற வகையிலும் நாங்கள் பாரம் பரியமாக வாழ்ந்த அந்த வரலாற்றை சிதைக்கின்ற வகையிலும் கடந்த அரசுகள் திட்டமிட்டு செயற்பட்டன. அதற்கு எம்மவர்களும் உடந்தையாக இருந்தார்கள்.
மீள்குடியேற்றம் என்ற பேரிலே சிங்கள மக்களை குடியேற்றினார்கள். மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களில் இன்னும் வேறு மாவட்டத்தைச் சேரந்த சிங்களவர்கள் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அதையெல்லாம் தட்டிக் கேட்கின்றோம். இதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா? நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் உங்களுடைய நிலமும் பாதுகாக்கப்படுகிறது.
கடந்த கால ஆட்சியாளர்களினால் எமது வணக்க ஸ்தலங்களையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டு ஒவ்வொரு மூலைக்கு மூலையும் புத்த சிலை வைக்கிறார்கள். எங்களுடைய மக்கள் வழிபட முடியவில்லை.
இதை உங்களால் தட்டிக் கேட்க முடியாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தட்டிக் கேட்கின்றனர். இதனால் உங்களுடைய நிலத்திலும் புத்தர் சிலை வைக்காத நிலை உருவாகிறது.
வடக்கு கிழக்கிலே அழிக்கப்பட்ட, காணாமல்போன, இன்றைக்கும் சிறைகளிலே வாழ்கின்ற, மடிந்த எல்லா விதைகளும் இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே கதவைத் தட்டுகிறது.
எமது உறவுகளை அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எங்களுடைய இனத்தை அழித்து அடிமையாகியவர்கள் சர்வதேச ரீதியில் தண்டிக்கப்பட வேண்டும்.
அன்று எங்களுடைய மக்கள் அனுபவித்த அவலம் இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே கதவைத் தட்டுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தன்மானமுள்ள எந்த தமிழனும் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர எந்தவொரு மாற்றுக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டான்” என நம்புகிறேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq6C.html

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை: பிரித்தானியா
[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 12:21.29 PM GMT ]
இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் முன்னேற்றமடைந்துள்ளதுடன், புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சில இணையத்தளங்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் வடக்கிற்குச் செல்வதற்கான தடையும், அரசசார்பற்ற நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு ஜனநாயக வெளி திறந்து விடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் படையினரின் கண்காணிப்பு குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உயர்ந்தளவு இராணுவ மயமாக்கல், பொதுமக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடுகள், ஆயுதப்படைகளால் தொடர்ந்து காணிகள் அபகரிக்கப்படுதல் போன்ற சவாலான விடயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல் என்பன கவலைக்குரிய விடயங்களாகவே உள்ளன.
போரின் போது, படைகளிடம் சரணடைந்து காணாமற்போனதாக குற்றம்சாட்டப்படும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்குவதாக தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை நிராகரிக்கின்றனர்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளன. என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq6D.html

Geen opmerkingen:

Een reactie posten