தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 juli 2015

வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!! :இறுதி யுத்தத்தின் போது சம்மந்தன் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலித்தேவன்

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளருமான சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். நேற்று வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக் கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எல்லோரும் பாராளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. எமது கூட்டமைப்பினர் தமது தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது இந்தியா அவர்களை கூப்பிட்டிருந்தது. கூட்டமைப்பினர் இந்தியா செல்லும் விடயம் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு தெரியவந்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டார். அப்போது கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை. ஏனெனில் புலிகளின் கதை முடிகின்றது. இந்தியாவுடன் போவோம் எனக் கருதியிருந்தார்கள்.
இதன் போது எனது தொலைபேசிக்கும் அழைப்பு வந்தது. நான் கதைத்தேன். அப்போது தொடர்பினை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் சம்மந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பினர் எங்கே நிற்கிறார்கள்? அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார். நான் அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளார்கள் என தெரிவித்திருந்தேன். உடனடியாக புலித்தேவன் என்னிடம் சொன்னார் அவர்கள் இந்தியா செல்வதை நிறுத்தும் படி ஏனெனில் இவர்களை இந்தியாவில் வாயை மூடிக்கொண்டு இருக்க வைத்துவிட்டு யுத்தத்தை முடிப்பதற்கு இந்த அரசாங்கமும் இந்தியாவும் பார்கிறது என்றார்.
நான் இதனைக் கூறிய போது கூட்டமைப்பினர் அதனை கணக்கு எடுக்கவில்லை. அன்றிரவே இந்தியா சென்று விட்டனர். அவர்கள் யுத்தம் முடிந்த பின்னே வந்து இறங்கினார்கள். அப்போது ஒரு அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் நடந்தது. அந்நேரம் நான் பாராளுமன்றம் சென்றேன். அங்கு எங்களுடைய கூட்டமைப்பினர் எவரும் இல்லை. அதனால் நான் தனித்து வாக்களிக்க முடியாத ஒரு கட்டம் இருந்தது. அதனால் நான் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. அவ்வாறு மோசமான நிலமை காணப்பட்டது. நான் அதனை எதிர்த்து வாக்களித்து இருந்தால் என்னை மண்டையில் போட்டிருப்பார்கள். அவர்கள் சொல்லாமல் போனதால் நான் தனிமையில் மாட்டினேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten