தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 17 juli 2015

காலமாற்றம் வகுத்து வாழ்ந்த தமிழினத்தின் நிலை காணீரோ?

தமிழர்களின் பண்பாடு என்பது மிகவும் பெறுமதியானதும் அர்த்தமுள்ளதுமாகும். உயர்ந்த பண்பாட்டைத் தமிழினம் கொண்டிருந்ததால்தான் திருவள்ளுவரால் திருக்குறள் என்னும் உலகப் பொதுமறையை உருவாக்க முடிந்தது.
குடும்ப வாழ்வை இல்லறம் என்று குறிப்பிடுகின்ற மிக உயர்ந்த உன்னதம் உலகில் வேறு எந்த இனத்திலும் காணமுடியாது.
கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுகள் கூடி வாழ்கின்ற வாழ்வியலை ஒரு பெரும் அறமாகக் கருதுகின்ற நடைமுறை தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மிக உயர்வான சிறப்பு.
இன்று ஆடிப் பிறப்பு. சூரியன் தெற்கு நோக்கி நகருகின்ற காலம் ஆரம்பமாவதால் இதனை தட்சணாயன காலம் என்று வகுப்பர்.
இதேபோல தை மாதம் முத லாம் திகதி சூரியபகவான் வடக்கு நோக்கி நகர்வார். இது உத்தராயண காலம்.
சூரியன் ஆறு மாதம் வடக்கு நோக்கியும் அடுத்த ஆறுமாதம் தெற்கு நோக்கியும் நகருகின்ற காலத்தை வகைப்படுத்தி அதற்கேற்றால் போல் உணவு வகைகளை மாற்றுகின்ற தமிழர்களின் வாழ்வு எத்துணை சிறப்பானது.
தட்சணாயன காலம் ஆரம்பமாகும் போது பனங்கட்டிக் கூழ் காய்ச்சிக் குடித்து காலமாற்றத்திற்கு ஏற்ப உணவுமுறையை மாற்ற ஆரம்பிக்கின்றோம்.
இங்ஙனம் உணவுப் பழக்கத்திலும் கூட தமிழினம் தன்னை ஒழுங்குபடுத்தியது. எனினும் இன்று எங்களின் சிறப்பை நாங்கள் உணரவில்லை.
மேலைத்தேய நாகரிகமும் சினிமா மோகமும் எங்கள் வாழ்வின் அடிப்படைகளை சீர்குலைத்துவிட்டன.
இதுதவிர, எங்களின் பண்பாட்டை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதிலும் அதனை பேணுவதிலும் நாங்கள் பஞ்சி கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் தர்மசக்கரக் கொடிகள் பறக்க விடப்படுகின்றன.
பெளத்த சிங்கள மாணவர்களின் இறை நம்பிக்கைக்கு இது எத்துணை சான்று என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சேர் பொன் இராமநாதனின் கொடையால் கிடைத்த உயர் கலாபீடம்.
அங்கு பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்பது அந்தப் பரமேஸ்வரனின் பெயரால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வரா கல்லூரி என்பதும் தெரிந்ததே.
எனினும் பரமேஸ்வரப் பெருமான் வருடத்தில் ஒருமுறை திருநெல்வேலியை, யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி வீதியுலா வருவார்.
வாழைகள் கட்டி, மகர தோரணங்கள் நாட்டி, வீதிகள் தோறும் கும்பங்கள் வைத்து பரமேஸ்வரப் பெருமானை மக்கள் வழிபாடு செய்வர்.
ஆனால் இந்த நடைமுறை எத்தனையோ ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது. ஏன்? இந்த நிலைமை.
தென்பகுதியில் இருந்து வந்த பெளத்த சிங்கள மாணவர்கள் வெசாக் பண்டிகை நாளில் மட்டுமன்றி, ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலில் பெளத்த மதக் கொடிகளை பறக்கவிடும் போது, பல்கலைக்கழகத்தில் இருக்கும் பரமேஸ்வரனை வெளியில் கொண்டுவர முடியாமல் போனது ஏன்?
பயம் என்று சொல்லி தப்பித்துக் கொள்கின்ற மரபுதான் காரணமா?
முதலில் எங்களின் இனத்தை, சமயத்தை பாதுகாக்க நாங்கள் தயாராக வேண்டும். இதைவிடுத்து செயலற்ற வார்த்தைகள் பேசுவதால் எதுவும் நடந்துவிடாது.
நாங்கள் எங்களின் கலாசாரத்தை, பண்பாட்டை, சமய நடைமுறைகளை பின்பற்றும் போது மற்றவர்களும் அதை மதிப்பார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten