தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 juli 2015

கூட்டமைப்பின் தலைமை சிந்தித்து செயற்படவேண்டும்

ஜனாதிபதியின் நிலைப்பாடு தெளிவில்லை - த ஹிந்து
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 10:20.35 PM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புரிமை வழக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் த ஹிந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பொதுத் தேர்தல் தொடர்பான விவரண கட்டுரையொன்றை வெளியிட்டுள்ள த ஹிந்து,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கவுள்ளதாக அறிவித்த பின்னர், ஜனாதிபதி அமைதியான போக்கை கடைபிடிப்பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளதன் காரணமாக இந்த விடயம் தெளிவற்ற நிலைமையில் இருக்கின்றது.

எவ்வாறாயினும், அமைதியான போக்கை கடைப்பிடிப்பதன் ஊடாக மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்படுவதை ஜனாதிபதி அனுமதித்துள்ளார் என்ற ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாது எனவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டமைப்பின் தலைமை சிந்தித்து செயற்படவேண்டும்
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:06.10 AM GMT ]
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையேயும் ஆசனப் பங்கீட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசனப் பங்கீட்டில் இணக்கம் காணப்பட்டதுடன் வடக்கு, கிழக்கில் இம்முறை 20 ஆசனங்களை கைப்பற்றி பேரம் பேசும் சக்தியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் மூன்று கட்டங்களாக கூட்டமைப்பின் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. முதலில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதன் பின்னர் காணாமல்போனோர் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெற்றோரையும் இவர்கள் சந்தித்துள்ளனர். இதன் பின்னர் தேர்தல் குறித்து கட்சியின் தலைவர்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கும் வந்துள்ளனர்.
மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டுமென்றும் கூட்டமைப்பின் இலக்கு என்ன என்றும் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
ஜனநாயக சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் சர்வதேசம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் எமது பேரம் பேசும் சக்தியை நிலைநாட்டுவதன் மூலமே நிரந்தர அரசியல் தீர்வு என்ற இலக்கை அடையமுடியும்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது ஜனநாயக பலத்தை உறுதிப்படுத்த வேண்டும். இம்முறை தேர்தலில் வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களை வெற்றிகொள்வதே கூட்டமைப்பின் இலக்காகும் என்று சம்பந்தன் இந்தக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் தமது ஜனநாயக கடமைகளை சரியாக செய்வதற்குரிய தெளிவுபடுத்தல்களை நாம் முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து மக்களையும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியத்துவத்தை அவர்களிடம் எடுத்துக்கூறவேண்டும். தற்போதைய சூழலில் தமிழ் தேசியம் தொடர்பாக அனைவரும் இளைஞர்களுக்கு உரிய புரிதல்களை ஏற்படுத்துவது அவசியமாகும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 14 ஆசனங்களை பெற்றிருந்தது. தற்போது யுத்தத்திற்குப் பின்னர் இரண்டாவது பொதுத்தேர்தல் இடம் பெறுகின்றது.
யுத்தம் முடிவடைந்த போதிலும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்தபாடாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம், அதியுயர் பாதுகாப்பு வலய விவகாரம் என்பவற்றுக்கும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தது. இதற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதுடன் புதிய ஆட்சியும் உருவாக்கப்பட்டது. 175 நாட்கள் புதிய அரசாங்கம் பதவியிலிருந்தபோதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் உரிய தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பேரம் பேசும் சக்தியை நிலைநாட்டும் வகையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் செயற்படவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே தமது அன்றாடப் பிரச்சினைகளுக்காவது தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்த விவகாரத்தில்கூட இழுத்தடிப்புபோக்குகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் விடயத்திலும் இன்னமும்முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை எந்தவகையில் அமையவேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.
புதிய அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண தயார் என்றே கூறிவருகின்றது. ஆனால் புதிய ஆட்சி ஏற்பட்டிருந்த போதிலும் அது நிலையானதாக இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சி என்று கூறியபோதிலும், அதற்குள் ஒற்றுமை நிலவவில்லை. இதனால் எந்தவொரு முயற்சியும் ஒழுங்கான முறையில் செயற்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அடுத்துவரும் புதிய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை நடத்தி தீர்வுகள் காணப்படவேண்டியது அவசியமானதாகும்.
தென்பகுதியில் யார் ஆட்சி அமைத்தாலும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். வடக்கு, கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரித்தால் தான் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடன் பேரம் பேசக்கூடிய நிலை ஏற்படும்.
2004 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களை பெற்றிருந்தது. பின்னர் 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை 14 ஆக குறைவடைந்தது. இம்முறைத் தேர்தலில் அந்த எண்ணிக்கையை 20 ஆக அதிகரிப்பதே தமது இலக்கு என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது ஆசன ஒதுக்கீடுகளுக்கு தகுதியானவர்களை நியமித்து போட்டியிடுவதுடன் ஒற்றுமையாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்மாகாண மக்கள் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மை ஆசனங்களை வழங்கியிருந்தனர்.
இதன் மூலம் கூட்டமைப்பின் ஆட்சி வடக்கில் உருவாக்கப்பட்டது. அவ்வாறு மாகாணசபை ஆட்சி நிர்வாகம் கூட்டமைப்பின் வசம் சென்றபோதிலும் தற்போது மாகாணசபையின் முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கிடையில் ஓர் இணக்கப்பாடு இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
இதனால் பல்வேறு முரண்பாடுகளும் இருதரப்பிற்குமிடையில் உருவாகியிருந்தன. இத்தகைய முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் தற்போது கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். வவுனியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படத்தக்க வகையில் ஒரு பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்களாக இருப்பவர்களைக் கொண்டு ஒரு மத்திய குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் நாடு திரும்பியவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார்.
இவ்வாறு மாகாணசபைக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் எதிர்காலத்திலும் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் இவ்வாறான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது சிறந்ததாகும். மொத்தத்தில் ஒற்றுமையை கட்டியெழுப்பி தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு கூட்டமைப்பின் தலைமை தொடர்ந்தும் சிந்தித்து செயற்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyHTcSUeu7I.html

Geen opmerkingen:

Een reactie posten