சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானமானது பெரியளவில் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல.
ஜனவரி 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்திராத அளவுக்கு தோல்வியடைந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தான் அரசியலில் நிலைப்பதற்காக தனது ஆதரவாளர்களை ஒன்றுசேர்த்து வருகிறார்.
சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன் வரும் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த வாய்ப்பைத் தற்போது ராஜபக்ச தனதாக்கிக் கொண்டுள்ளார்.
சிறிசேனவால் தலைமை தாங்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியானது ராஜபக்சவைத் தனது வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக திடீரெனத் தீர்மானித்தமையானது ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஒன்றுகூடிய எதிரணியின் ஆதரவுடனேயே கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து அதிபராகப் பதவியேற்ற சிறிசேன தொடர்ந்தும் மகிந்தவின் வேட்பாளர் நியமனம் தொடர்பில் அமைதி காத்துள்ளார்.
இந்நிலையில், ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைகளின் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது இந்த நியமனமானது அதிபர் சிறிசேனவின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் இடம்பெற்றுள்ளது’ என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்திருந்தார்.
ஐ.ம.சு.கூட்டணிக்குள் செயற்படும் ராஜபக்சவின் ஆதரவாளர்களின் அழுத்தத்தின் பேரிலேயே ராஜபக்ச வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது சிறிசேனவின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐ.ம.சு.கூட்டணியினதும் தலைமைப் பொறுப்பை சிறிசேன வகிக்கின்ற போதிலும் இவற்றுள் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அதிகாரம் செலுத்துவதால் சிறிசேனவால் இவ்விரண்டையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெருமளவான உறுப்பினர்கள் ராஜபக்சவின் விசுவாசிகளாவர்.
பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிடத்தக்க ஒருவர் ராஜபக்ச மட்டுமே என்பது இக்கட்சி உறுப்பினர்களின் கருத்தாகும்.
சிறிசேன அதிபராகப் பதவியேற்று கடந்த ஆறு மாத காலத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐ.ம.சு.கூட்டணியையும் ஒன்றுபடுத்துவதில் சிறிசேன பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளார்.
ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு அதிகாரங்களை நீக்குவதற்கு சிறிசேன முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் இவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதனை எதிர்த்தனர்.
குறிப்பாக சிறிலங்காவின் நிறைவேற்று அதிபருக்குள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் மற்றும் இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் நாட்டின் அதிபராகப் பதவி வகிக்க முடியும் போன்றன தொடர்பில் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சிறிசேன பல்வேறு இடர்களைச் சந்தித்தார்.
இதற்கு ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர்கள் கூட தமது எதிர்ப்பைக் காண்பித்தனர். இறுதியில் சிறிசேன இவற்றை வெற்றி கொண்டு சட்டத்தில் மாற்றங்களைச் செய்தார்.
அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இவரது சக உறுப்பினர்களின் ஆதரவு கிட்டாமையே காரணமாகும்.
நாட்டில் மீளிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதாக சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.
ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றிற்குத் தெரிவானால் தற்போதைய சூழலுக்கு எதிராகவே செயற்படுவார். ராஜபக்சவின் சிங்கள தேசியவாத அரசியற் கோட்பாடுகள் கடந்த அதிபர் தேர்தலில் வெற்றியளிக்காத போதிலும், பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் ராஜபக்சவின் பௌத்த தேசியவாதக் கோட்பாடுகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பைக் குழிதோண்டிப் புதைப்பதாகவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் ராஜபக்ச தனது வேட்பாளர் அறிவிப்பு உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இது சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் ராஜபக்சவின் ஆதரவை அதிகரிப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது. சிறிசேனவின் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களுக்கு சவாலாக அமையும்.
சிறிலங்காவின் போருக்குப் பின்னான சவால்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் உள்நாட்டுப் போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், அரசியல் மற்றும் இன வடுக்கள் இன்னமும் எஞ்சியுள்ளன. எல்லாத் தரப்பினர்களுக்கும் நிலையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதிலேயே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
வழிமூலம் – ‘தி ஹிந்து’ (ஆசிரியர் தலையங்கம்)
மொழியாக்கம் – நித்தியபாரதி
மொழியாக்கம் – நித்தியபாரதி
Geen opmerkingen:
Een reactie posten