தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 juli 2015

முன்னாள் புலிகளின் பின்னால் உள்ள அரசியல்

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10 பேர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடும் விவகாரம், பரபரப்பாகவே ஊடக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
புலிமுக சிலந்திச் சின்னத்தை இவர்கள் தமது சின்னமாகத் தெரிவு செய்திருக்கின்றனர்.  தமது புலி அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காகவே இந்தச் சின்னத்தை அவர்கள் தெரிவு செய்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
அதனை சுயேச்சைக் குழுவின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரனும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியல் களத்தில் இறங்கியிருக்கும், முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள், புலிகள் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தியே தம்மை நிலைப்படுத்தி, வெற்றியை உறுதிப்படுத்த முனைகின்றனர் என்பது உறுதியாகியிருக்கிறது.
ஆனால், முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை தமிழ்ச் சமூகம், விடுதலைப் புலிகளாகப் பார்க்கவில்லை என்ற யதார்த்தம் அவர்களுக்கு இன்னமும் புரியாதிருப்பது வேடிக்கை.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது, அதன் தலைவராக இருந்த வே. பிரபாகரனால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்று.
அதனால் தான், பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால், வெளிநாடுகளில் கூட ஒரு குடையின் கீழ்ச் செயற்பட முடியாது போனது.
பல்வேறு நாடுகளில் பல்வேறு நபர்கள் தாமே புலிகள் என்று கூறிக் கொண்டிருந்தாலும், அவர்களால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை.
வெளிநாடுகளில் புலிகள் என்று பலர் கிளம்பியதைப் போலவே தான், தம்மையும் முன்னாள் புலிகள் என்று இங்கு அரசியல் நடத்தும் நிலையும் உருவாகியுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் புலிகள் என்று பல குழுக்கள் செயற்பட்ட போது, அதை தட்டிக்கேட்க யாருமற்ற நிலை எவ்வாறு ஏற்பட்டதோ, அது போலவே, இலங்கையில் முன்னாள் புலிகள் என்று அரசியல் நடத்தப்படும் போதும், அதைத் தட்டிக் கேட்க யாரும் இருக்கவில்லை.
இவ்வாறு அரசியல் நடத்துவது புலிகள் இயக்கத்தின் கொள்கைக்கு ஏற்புடைய ஒன்றா? இதனைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்றெல்லாம் யாரும் சிந்திக்கவில்லை.
வெளிநாடுகளில் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் செயற்படலாம். அவற்றினால், அதிகபட்சமாகச் சாதிக்கக் கூடியது ஒன்று தான்.
ஆண்டு தோறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில், விடுதலைப் புலிகளின் வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் செயற்படுகிறது என்ற வாசகங்களை இடம்பெறச் செய்ய முடியும். அவ்வளவுதான்.
அதேவேளை, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியை உருவாக்கினாலும் சரி, உருவாக்காது போனாலும் சரி, அவர்கள் இந்தத் தேர்தலில் தமது பலத்தை நிரூபித்தாக வேண்டும்.
இது ஜனநாயக அரசியல் களம். இங்கு போட்டியிட்டு தமக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், அதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கப் போகிறது.
இத்தகைய கட்டத்தில் முன்னாள் புலிகளின் சுயேச்சைக் குழு தோல்வியடைந்தால், அது விடுதலைப் புலிகளின் தோல்வியாக கருதப்பட்டு விடுமோ என்று கவலைப்படுபவர்கள் அதிகம்.
இத்தகைய கவலை தமிழ் மக்களிடத்தில் இருந்தாலும், விடுதலைப் புலிகளின் கொள்கை விடயத்தில் தமிழ் மக்களிடம் தெளிவான புரிதல் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
கடந்த வாரம் பி.பி.சி. தமிழோசையில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்துப் பொதுமக்களிடம் பெறப்பட்ட பேட்டிகள் ஒலிபரப்பானது. சுமார் பத்துக்கும் அதிகமானோர் அதில் கருத்துக்களை கூறியிருந்தனர்.
அவர்களில் ஒருவரேனும், முன்னாள் புலிகளின் அரசியல் பிரவேசத்தை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. அல்லது அதில் சந்தேகம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதை அந்தப் பேட்டி வெளிப்படுத்தியது.
தேர்தல் ஒன்றில் முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி அடையும் தோல்வியை அவர்களின் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வியாகக் காட்டும் முயற்சிகளை சிங்கள அரசியலில் மட்டுமன்றி, வேறு தளங்களிலும் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் பெயரை வைத்து நடத்தப்படும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளத்தக்கவர்களாகவே இருந்தனர்.
அதாவது விடுதலைப் புலிகள் ஒருபோதும், பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் கொள்கை உடையவர்கள் அல்ல, அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்பதைப் பலரும் பட்டவர்த்தனமாகப் வெளிப்படுத்துகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் கடைசி வரையில், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனி நாடு ஒன்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது.
முள்ளிவாய்க்காலில், ஆயுதங்களை மௌனிப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், அதற்கப்பால், பாராளுமன்ற அரசியல் வழிமுறையை நாடப் போவதாக அவர்கள் கூறியிருக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒருபோதும், பாராளுமன்ற அரசியல் மீது நாட்டம் கொண்டவராக இருந்தவரில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் சில பிரமுகர்களை சந்தித்திருந்தார்.
அப்போது எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து அவர் விபரித்த போது, சண்டையைப் பிடித்து தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பது தான் தனது வேலை, அதற்கப்பால், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது மாத்தயாவின் வேலை என்று, கூறியிருந்தார்.
அப்போது மாத்தயாவே விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்தார். பின்னர் அவர் தலைமைக்குத் துரோகம் இழைத்த குற்றச்சாட்டில் மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிட்டது.
பிரேமதாச அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி வந்த ஒரு கட்டத்தில் புலிகள் இயக்கம் அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது, ஏனைய போராளி இயக்கங்களைப் போன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அவர்கள் கட்சியைப் பதிவு செய்யவில்லை.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் தான் ஒரு கட்சியைப் பதிவு செய்தனர்.
அந்தக் கட்சியின் செயலாளராக இருந்தவர் யோகரத்தினம் யோகி. தலைவர் மாத்தயா எனப்படும் மகேந்திராஜா.
இந்தக் கட்சியின் சின்னமாக, புலியைத் தெரிவு செய்திருந்த போதிலும், ஒரு போதும் விடுதலைப் புலிகள் இதனைப் பயன்படுத்தித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியதில்லை.
ஆனால், கிழக்கில் சில தேர்தல்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அது போலியான கையெழுத்துடன் கொடுக்கப்பட்ட வேட்புமனுக்கள்.
அவை போலி என்பது தேர்தல் திணைக்களத்துக்குத் தெரியும்.
*எனினும், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பொதுச்செயலராகப் பதிவு செய்யப்பட்ட யோகியிடம் இருந்து ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படாததால், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
ஆனாலும், போலியான பெயரில் தாக்கல் செய்யப்பட்ட � விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் வேட்பாளர்களுக்கு சில நூறு வாக்குகள் கூட கிடைத்திருக்கவில்லை.
ஏனென்றால் அது விடுதலைப் புலிகள் அல்ல, அவர்களின் ஆதரவு பெற்றவர்கள் அல்ல என்பதை வாக்காளர்கள் அறிந்திருந்தார்கள்.
அதற்காக விடுதலைப் புலிகளுக்கு மக்களின் ஆதரவு இல்லையென்று அர்த்தம் கற்பிக்கப்படக் கூடாது.
விடுதலைப் புலிகளின் ஆதரவு இருந்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் பிரபலமானது � தேர்தல்களில் வெற்றியைப் பெற்றது மட்டுமன்றி, அவர்களுக்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
1989ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சைக்குழுவாகப் போட்டியிட்ட ஈரோஸ், புலிகளின் ஆதரவினால் தான் 11 ஆசனங்களைப் பெற்றது.
அப்போது புலிகள் பகிரங்கமாக எதையும் கூறவில்லை. அவர்களின் கண்ணசைவு மட்டும் தான் ஈரோசுக்கு கைகொடுத்திருந்தது.
விடுதலைப் புலிகள் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள் அல்லது யார் தெரிவு செய்யப்படுவதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்கும் பாரம்பரியம் ஒன்று தமிழ் மக்களிடம் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
2005 ஜனாதிபதி தேர்தல் அதற்கு உதாரணம்.
அதேவேளை விடுதலைப் புலிகள் தமக்கு வாக்களிக்குமாறு கேட்டு வருவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை.
அவர்களைத் தமிழ்மக்கள் போராளிகாகவே பார்த்தனரே தவிர அரசியல்வாதிகளாகப் பார்க்கவில்லை.
அப்படியொரு தோற்றம் எடுப்பதை தமிழ்மக்கள் இன்று வரை விரும்பவில்லை என்பதையே ஜனநாயகப் போராளிகளின் அரசியல் நுழைவு பற்றிய அவர்களின் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
2002ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட சமாதான காலத்தில் சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளை முற்றிலுமான ஜனநாயக அரசியலுக்கு வர நிர்ப்பந்தித்தன.
நோர்வே ஊடாக அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
சீருடையில் இருந்த புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு, வேட்டி கட்டிப் பார்க்க ஆசைப்பட்டது மேற்குலகம்.
ஆனால், வேட்டி கட்டிய அரசியல்வாதியாக மாறத் தான் தயாரில்லை என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக மறுத்திருந்தார்.
காரணம், அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். அப்போது பிரபாகரனின் கருத்து வீண் பிடிவாதமாகவே மேற்குலகினால் கருதப்பட்டது.
அது சரியா, தவறா என்பது இந்தக் கட்டத்தில் தேவையற்ற விவாதம்.
ஆனால், விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபடுவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்பதை அவர்களின் எண்ணங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஜனநாயகப் போராளிகள் பற்றிய பரவலாக எழுந்திருக்கும் கேள்விகளும் சந்தேகங்களும், இந்த ஆழ்மனச் சிக்கலின் வெளிப்பாடு தான்.
புலிகளை, விடுதலைப் புலிகளாகவே தமிழ்ச் சமூகம் மதிக்க விரும்புகிறது போலுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மை என்பதை இந்த தேர்தலின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒருவேளை, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களை தமிழ்ச் சமூகம் அரசியல் ரீதியாக நிராகரித்து விடுமானால், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வேட்டி கட்டிப் பார்க்க ஆசைப்பட்டது தமது தவறே என்றும் அதற்கு மறுத்த அவரது நிலைப்பாடு சரியானதே என்றும் மேற்குலகம் உணர்ந்து கொள்ளக் கூடும்.

- சுபத்ரா -

Geen opmerkingen:

Een reactie posten