தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 juli 2015

ஒரே அணி, ஒரே தலைமை, ஒரே குரலில் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய த.தே.கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யுங்கள்!

கடந்த 2010 ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போடப்பட்ட மொத்த வாக்குகள் 148,503 ஆகும். இதில் 19,774 வாக்குகள் (13.32%) செல்லுபடியாகாத வாக்குகள் ஆகும்.
இதே நிலைமை வேறு தேர்தல் மாவட்டங்களிலும் காணப்பட்டன. இந்த செல்லுபடியாகாத வாக்குகளில் 5 % குறைவாகப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் அடங்கும்.
விகிதாசார வாக்களிக்கும் முறை 1978 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட யாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டு அதில் யாருக்கு முதலிடமோ அவர் தெரிவு செய்யப்படுவார்.
இந்த முறைமை அமெரிக்கா போல இரண்டு முக்கிய கட்சிகள் போட்டியிடும் போது எந்தக் கட்சி வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். பெரும்பாலும் வெற்றி பெற்றவருக்கு 50 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் கிடைத்திருக்கும்.
ஆனால் கனடா போல மூன்று பெரிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிகழும் போது 39 விழுக்காடு வாக்குகள் பெற்றவர் முதலிடத்துக்கு வந்து வெற்றிபெற முடியும். எடுத்துக்காட்டாக முதல் கட்சி வேட்பாளருக்கு 39 விழுக்காடு வாக்குகள், அதற்கு அடுத்த இரண்டாவது கட்சி வேட்பாளருக்கு 35 % வாக்குகள்,
அடுத்த மூன்றாவது கட்சி வேட்பாளருக்கு 26 % வாக்குகள் விழுந்தால் சிறுபான்மை வாக்கு விழுக்காட்டைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்துக்கு வந்தவர்கள் பெற்ற வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தும் அவை பெறுமதியற்றதாகப் போய்விடும்.
இதன் காரணமாகவே 1978 இல் விகிதாசார வாக்கு முறைமை கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.
(1) ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியோடு நிற்பதற்குப் பதில் அந்த தேர்தல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பரப்புரை செய்து வாக்குகள் சேகரிக்க வேண்டும். இதனால் தேர்தல் செலவு கூடிவிடுகிறது.
(2) ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே விருப்பு வாக்குகள் பெறுவதில் போட்டி மனப்பான்மை ஓங்கிவிடுகிறது.
எனவே தொகுதிவாரிப் போட்டியோடு விகிதாசாரப் போட்டியும் கலந்த ஒரு கலப்பு தேர்தல் வாக்களிக்கும் முறைமையை கொண்டு வர இலங்கை அரசு யாப்பில் திருத்தம் செய்ய எத்தனித்தது. ஆனால் கட்சி அரசியல் காரணமாக அது கைகூடவில்லை.
எதிர்வரும் ஓகஸ்ட் 17 இல் நடைபெறும் தேர்தல் விகிதாசார அடிப்படையிலேயே நடைபெற இருக்கிறது. இந்த விகிதாசார முறைமை 1978 இல் இருந்த நடைமுறையில் இருந்து வந்தாலும் சில வாக்காளர்கள் முறையாக வாக்களிக்கத் தவறிவிடுகிறார்கள்.
விகிதாசார முறைமையில் நடைபெறும் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு தான் விரும்பும் கட்சிக்கு ஒரு வாக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களுக்கு தலைக்கு ஒரு வாக்கு அளிக்கலாம். வாக்காளர் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பது கட்டாயம்.
ஆனால் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது கட்டாயம் இல்லை. ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவருக்கும் வாக்களிக்கலாம். மூன்று வாக்குகளை ஒருவருக்குப் போட முடியாது.
இலங்கையில் 160 தொகுதிகள் (அல்லது இப்போது அழைப்பது போல வாக்களிப்பு பிரிவு - polling divisions ) இருக்கின்றன. சில கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு அமைப்பாளரை நியமிக்கின்றன.
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்துக்கும் எத்தனை உறுப்பினர்களை ஒதுக்குவது என்பதை இந்த 160 தொகுதிகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றது. இலங்கை முழுதும் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 160 ஆல் பிரித்து வரும் எண்ணே அந்த தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கப்படும் உறுப்பினர்கள் தொகையாகும்.
எடுத்துக்காட்டாக 2014 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் தொகை 15,044,490 ஆகும். இதனை 160 ஆல் பிரித்தால் ஒரு உறுப்பினருக்கு 93,000 வாக்காளர் தேவைப்படும். எடுத்துக்காட்டாக மொன்றாகலை தொகுதி பதவி செய்யப்பட்ட வாக்காளர் தொகை 339,797.
இந்த எண்ணை 93,000 ஆயிரத்தால் பிரித்தால் 3.6 வரும். ஆனால் முழு எண்ணே கணக்கில் எடுக்கப்படும். பின்னம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. எனவே மொன்றாகலை தொகுதிக்கு 3 உறுப்பினர்களை தெரிவு செய்யலாம்.
160 தொகுதிகளுக்கு மேலாக மேலும் 36 இருக்கைகள் ஒவ்வொரு மாகாணத்துக்கும் 4 என்ற கணக்கில் பிரித்து ஒதுக்கப்படுகிறது. இந்த நான்கு இருக்கைகளும் அரசியல் யாப்பின் 6 ஆவது அட்டவணைக்கு அமைய வெவ்வேறு தேர்தல் தொகுதிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது.
இலங்கை யாப்பின் கீழ் ஊவா மாகணத்தில் உள்ள பதுளை மாவட்டத்துக்கு 3 இருக்கைகளும் மொன்றாக்கலை தேர்தல் மாவட்டத்துக்கு 1 இருக்கையும் பங்கிட்டுக் கொடுக்கப் படுகிறது. எனவே மொன்றாக்கலை தேர்தல் மாவட்டத்துக்கு மொத்தம் 4 இருக்கைகள் ஒதுக்கப்படும்.
இப்படி 160 + 36 இருக்கைகள் மொத்தம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். எஞ்சிய 29 (225-196) இருக்கைகள் தேசியப்பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும்.
ஒவ்வொரு கட்சிக்கும் இலங்கை முழுதும் விழுந்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. அதாவது ஆகக் கூடுதலான வாக்குகள் பெற்ற கட்சிக்கு விகிதாசார அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கிய பின்னர் அதற்கு அடுத்த நிலையில் உள்ள கட்சிக்கு அதே விகிதாசார முறையில் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன.
மீண்டும் மொன்றாக்கலை தேர்தல் தொகுதியை எடுத்துக் கொண்டால் 5 % வாக்குகளுக்கு மேலாக எடுத்த கட்சிகளின் வாக்குகளின் கூட்டுத்தொகை 158,544 (2010). அவை எண்ணப்பட்ட பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இருக்கைகள் என்பது 3 சுற்றில் தீர்மானிக்கப்படுகிறது.
முதலாவது சுற்றில் தேர்தல் தொகுதியில் ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு மேலதிகமாக (போனஸ்) ஒரு இருக்கை ஒதுக்கப்படும். இதிலிருந்துதான் இருக்கைகள் பங்கீடு தொடங்குகிறது.
அடுத்த சுற்றில் 5 விழுக்காட்டுக்கு குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளின் வாக்குகள் நிராகரிக்கப்படுகிறது. மொத்த வாக்குகளில் இருந்து இவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கழிக்கப்படுகின்றது. இப்படிக் கிடைக்கிற வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்படும்.
இப்போது தேர்தலில் விழுந்த மொத்த செல்லுபடியான வாக்குகளை தொகுதிக்கு உரிய இருக்கையில் இருந்து ஒரு இருக்கையை கழித்து (செல்லுபடியான வாக்குகள்) பிரிக்கப்படுகின்றது. இப்போது கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் மேலிருந்து கீழ் ஒதுக்கப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (ஐமசுமு) விழுந்த வாக்குகள் 120,634, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 28,892, சனநாயக தேசிய முன்னணிக்கு (சதேமு) கிடைத்த வாக்குகள் 9,028 ஆகும்.
தேர்தல் தொகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையில் இருந்து ஒன்றைக் கழித்து எஞ்சிய எண்ணினால் மொத்த வாக்குகளைப் பிரித்தால் 52,848 வாக்குகள் வருகிறது. எனவே மொத்த வாக்குகளை (158,544) ஐமசுமு க்கு கிடைத்த வாக்குகளால் பிரித்தால் அந்தக் கட்சிக்கு இரண்டு இருக்கைகள் வருகிறது.
இந்த இரண்டு இருக்கையோடு மேலதிக இருக்கையை கூட்டினால் மொத்தம் அந்தக் கட்சிக்கு 3 உறுப்பினர்கள் கிடைக்கிறது. ஐமசுமு க்கு அடுத்ததாக 28,892 வாக்குப் பெற்ற கட்சி ஐதேக ஆகும். ஆனால் நான்காவது இருக்கைக்கு வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை 37,890 (158,544 - 120,634) ஆகும்.
ஆனால் ஐதேக க்கு விழுந்த வாக்குகள் 28,892 மட்டுமே. ஐசுமமு க்கு இரண்டு இருக்கைக்கு ஒதுக்கிய வாக்குகள் (120,634 - 105,696) போக மிஞ்சி இருப்பது 14, 938 வாக்குகள் ஆகும். ஆனால் ஐதேக க்கு கிடைத்த வாக்குகள் 28,892 க்கு பிரதிநித்துவம் இல்லை. எனவே நான்காவதும் கடைசியும் ஆன இருக்கை ஐதேக க்கு ஒதுக்கப்படுகிறது.
மொனராகலை தொகுதியில் சனநாயக தேசிய முன்னணிக்கு (மக்கள் விடுதலை முன்னணி + சரத் பொன்சேகா) 5.56 % வாக்குகள் கிடைத்தது. ஆனால் இருக்கை பெற அது போதுமானதாக இல்லை.
ஐந்து விழுக்காட்டுக்கு மேலே வாக்குகள் கிடைத்தால் ஒரு இருக்கையாவது கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மூன்றாவது சுற்றில் யாருக்கு முன்னுரிமை என்றால் பிரதிநித்துவப்படுத்தப்படாத வாக்குகள் ஆகும்.
மாத்தறை மாவட்டத்தில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 2010 இல் நடந்த தேர்தலில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 325,516. இதனை 8 இல் இருந்து ஒன்றைக் கழித்து வருகிற எண்ணினால் பிரிக்கும் போது 46,502 வாக்குகள் வருகிறது.
தேர்தலில் ஐமசுமு க்கு 213,937, ஐதேக க்கு 91,114, சனநாயக தேசிய முன்னணிக்கு 20,465 வாக்குகள் கிடைத்தன. ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளை 46,502 என்ற எண்ணினால் பிரித்தால் ஐசுமமு க்கு 4, ஐதேக க்கு 1 இருக்கை ஒதுக்கப்படும். ஆனால் ஆகக் கூடுதல் வாக்குகளைப் பெற்ற காரணத்தால் ஐமசுமு க்கு அதற்கு ஏற்கனவே 1 இருக்கை கிடைத்துவிட்டது.
எனவே ஐமசுமு சார்பாக மொத்தம் 5 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மேலும் 2 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். இது பிரதிநித்துப்படுத்தாத வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஒரு இருக்கையை கைப்பற்றிய ஐதேக க்கு 44,612 வாக்குகள் (91,114 - 46,502) எஞ்சியிருக்கின்றன.
எனவே ஐதேக க்கு மேலும் ஒரு இருக்கை கிடைக்கும். ஐதேக க்கு அடுத்ததாக பிரதிநித்துவப் படாத பெரும்பான்மை வாக்குகளைக் கொண்ட கட்சி ஐமசுமு ஆகும். அதற்கு 27,929 வாக்குகள் (46,502 x 4 = 186,008 - 213937 = 27929) எஞ்சியிருக்கின்றது. எனவே அந்தக் கட்சிக் கடைசி ஒரு இருக்கை ஒதுக்கப்படும். ஆக இப்போது ஐமசுமு க்கு 6, ஐதேக 2 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதில் சனநாயக தேசிய முன்னணிக்கு மாத்தறைத் தேர்தல் தொகுதியில் 6.25 % வாக்குகள் (20,465) கிடைத்தாலும் அந்தத் தொகை ஐமசுமு க்கு எஞ்சியிருந்த வாக்குகளை (27,929) விடக் குறைவானதாகும்.
எனவே அந்தக் கட்சி 20,465 வாக்குகள் எடுத்தாலும் இருக்கை கிடைக்கவில்லை! மொத்தம் 7,464 (27,929 - 20,465) வாக்குகளால் ஒரு இருக்கையை சனநாயக தேசியக் கட்சி பெறத் தவறிவிட்டது.
விகிதாசார வாக்களிப்பு முறையில் ஒரு கட்சியானது அதிக வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டும். அதிக வாக்குக் கிடைக்கும் கட்சி மேலதிக இருக்கையை தட்டிக் கொண்டு போய்விடும்.
ஓகஸ்ட் 18 இல் நடைபெற இருக்கும் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் சனநாயக தேசிய முன்னணியும் தனித்தனி போட்டியிடுகின்றன. இதனால் நல்லாட்சி வேட்பாளர் மைத்திரிபாலா சிறிசேனவுக்கு விழுந்த வாக்குகள் சிதறப்படுகிறது. இப்படியான மும்முனைப் போட்டி ராஜபக்ச போட்டியிடும் ஐமசுமு க்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
சனாதிபதி சிறிசேனவுக்கு விழுந்த வாக்குகள் இந்தத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (United National Front for Good Governance) மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சனநாயக தேசிய முன்னணி கட்சிகளுக்கு இடையே பிரிக்கப்படுகிறது.
வட கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் மற்றும் நுவரேலியா தேர்தல் மாவட்டம் நீங்கலாக எஞ்சிய 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபச்வுக்கு ஆதரவாக 52,99,151 இலட்சம் வாக்குகளும் சிறிசேனவுக்கு ஆதரவாக 49,96,446 இலட்சம் வாக்குகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிசேனவை விட 3,02,7270 இலட்சம் வாக்குகளை கூடுதலாக ராஜபக்ச பெற்றார்.
கடந்த தேர்தலில் நல்லாட்சிக்கு வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடும். எடுத்துக்காட்டாக சிறிசேன அவர்களது சொந்த மாவட்டமான பொலநறுவை தேர்தல் மாவட்டத்தில் சனாதிபதி தேர்தலின் போது அவருக்கு 147,974 வாக்குகளும்,
ராஜபக்சவுக்கு 105,640 வாக்குகளும் விழுந்தன. சிறிசேனவுக்கு விழுந்த ஐதேக ஆதரவாளர்களது வாக்குகள் நீங்கலாக எஞ்சிய வாக்குகள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு விழுமா அல்லது ஐசுமமு க்கு விழுமா இல்லை இரண்டுக்கும் விழுமா என்பதை கணிப்பிட முடியாது இருக்கிறது. இதே நிலைமை ஏனைய பல தொகுதிகளிலும் காணப்படுகிறது.
இருந்தும் இந்தத் தேர்தலில் கடந்த சனாதிபதி தேர்தலில் ராஜபக்ச பயன்படுத்திய (அரச) ஆட்பலம், பொருளாதார வளம் மற்றும் ஊடக ஆதரவு இம்முறை கிடைக்க வாய்ப்பில்லை.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களது ஊழல் மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இவை வாக்காளர்களது மனதை ராஜபக்சவுக்கு எதிராக மாற்றக் கூடும்.
தவறி மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்றால் அவரே ஐமசுமு நாடாளுமன்ற உறுப்பினர்களது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரே அடுத்த பிரதமர். இதில் ஐயமில்லை.
இதனை எழுதி முடித்துக் கொண்டிருக்கும் போது சனாதிபதி சிறிசேன தனது நீண்ட கால மவுனத்தைக் கலைத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தோல்வியைத் தழுவுவார் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நின்றுவிடாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள எடுத்த தீர்மானம் சரியானது என்றும் கடந்த இரண்டு வாரங்களில் தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைப் போன்று வேறு எந்த சனாதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை.
காட்டிக் கொடுத்தவன், கெட்டவன், துரோகி எனத் தன்னை ராஜபக்ச தரப்பினர் வசை பாடியதாகக் கூறுகிறார். எது எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமனம் செய்ய மாட்டேன் என்றும் அடித்துக் கூறியிருக்கிறார். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியம் என்பது தெரியவில்லை.
தமிழ்மக்களைப் பொறுத்தளவில் சனவரி 8 இல் நடந்த சத்தமில்லாத அரசியல் புரட்சியை தக்க வைப்பதோடு அதனை முன்னெடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
இராஜதந்திரிகளும் பன்னாட்டு சமூகமும் ததேகூ அதிக இருக்கைகளைப் பெற வேண்டும் என விரும்புகிறது. ததேகூ க்கு விழுகிற வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குச் சொந்தமான காங்கிரஸ் கட்சியும் மற்ற உதிரிகளும் பிரித்தால் அது மகிந்தாவின் மீள் வருகைக்கு வழி கோலிவிடும்.
ராஜபக்ச பிரதமராக வந்தால் தமிழ்மக்களுடைய காணி அபகரிப்பு, இராணுவத்தின் நெருக்குவாரம், வெள்ளைவான் கடத்தல், கப்பம், கிறீஸ்பூதம், கழிவொயில், ஒட்டுக் குழுக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.
எனவே மக்கள் சிந்தித்து ஒரே அணி, ஒரே தலைமை ஒரே குரலில் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமை வெற்றிபெறச் செய்யுங்கள்!
நக்கீரன்
athangav@sympatico.ca
http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq2E.html

Geen opmerkingen:

Een reactie posten