எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்குலகுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்ந்த முரண்பட்ட நிலை, மேற்குலக நலனை இலங்கைத் தீவிலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் நிலைநிறுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச பொருத்தமானவராக இல்லை என்ற மேற்குலகின் முடிவுக்கு வித்திட்டது. அதேவேளை, மகிந்தவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கும் கசப்பானதாகவே இருந்தது. தத்தமது தேசிய நலன்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போட்டி நிலவினாலும், மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்த சீனசார்பு கொள்கை அமெரிக்காவை முதன்மையாகக் கொண்ட மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு பொதுப்புள்ளியை உருவாக்கியது. அந்தப் பொதுப்புள்ளி இலங்கைத் தீவில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு காரணமானது என்பது மகிந்த ராஜபக்ச தரப்பினரின் ஒரு வாதம்.
1972 ற்குப் பிற்பாடு சிறீலங்காவில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு கங்கணம்கட்டி நின்றன. இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய பூகோள அரசியலை தமக்கு சாதகமாக மாற்ற எண்ணிய உலகின் சக்திமிக்க பல்வேறு நாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சித்தாந்தத்தின் மீது கொண்டிருந்த உறுதிப்பாடு ஒருவித முட்டுக்கட்டையாக காணப்பட்டது. ஆதலால், குறித்த இந்த நாடுகளும் சிறீலங்காவின் இரண்டு அரசாங்கங்களும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கின. ரணில் அரசாங்கதில் ஆரம்பமான இந்த நடவடிக்கை ராஜபக்ச அரசாங்கத்தில் முடிவுக்கு வந்தது. சுமார் ஆறு ஆண்டு தொடரப்பட்ட மறைமுகமானதும் வெளிப்படையானதுமான நடவடிக்கைகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நான்காம் ஈழப்போரில் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டார்கள். இதனைத்தான், இருபது நாடுகளின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளை தோற்கடித்தோம் என அன்றைய வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோகித்த போகொல்லகம இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்சவோடு கூட்டும் சேரும் போதே, மகிந்த ராஜபக்ச நீண்டகாலத்தில் தமது கொள்கைகளோடு இணங்கிப் போகக் கூடியவர் இல்லையென்பதை குறித்த சக்திமிக்க நாடுகள் தெரிந்தே வைத்திருந்தன. ஆனால், முதலில் விடுதலைப் புலிகளை அழிப்போம், பின்னர் மகிந்த ராஜபக்சவை கவனிப்போம் என்ற போக்கு அப்போது நிலவியதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆனால், போரில் வென்ற பின் ராஜபக்சக்கள் புதிய பலத்துடன் வியாபித்தனர். ஆதலால், 2010 சனவரி இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை தோற்கடிக்க முடியவில்லை. அதன்பிற்பாடு, மேலும் பலமடைந்த மகிந்த ராஜபக்ச தோற்கடிக்க முடியாத ஒரு இரும்பு மனிதராகவே தோற்றமளித்தார். ஆயினும், ராஜபக்சவை வீழ்த்துவதற்காக பல்வேறு தரப்புகளையும் இணைத்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக சுமார் ஐந்து ஆண்டுகள் பலசுற்று வேலைத் திட்டங்கள் இடம்பெற்றன. இலங்கைத் தீவிலிருந்த இனக்குழுமங்கள், மதக் குழுக்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், ஊடக அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள் மத்தியில் ராஜபக்சவுக்கு எதிராக நிலவிய அனைத்து வகையான உணர்வுகள், செயற்பாடுகள் இனங்காணப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, கரணம் தப்பினால் மரணம் என்ற அடிப்படையில் திட்டங்கள் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டது. அந்த கூட்டு செயற்பாட்டின் விளைவே இவ்வருடம் சனவரி மாதம் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிப்கப்பட்டார். ஆனால், சுமார் ஐந்து வருடகால செயற்திட்டங்களின் ஊடாக தோற்கடிப்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, வெறும் ஐந்தே மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் அச்சுறுத்துபவராக எழுச்சி பெற்றுள்ளார்.
இது எந்தளவிற்கு நிலைக்கும் என்பதற்கு அப்பால், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்டவரே மகிந்த ராஜபக்சவின் மீள்வருகைக்கான வெளித்தெரியும் பிரதான காரணியாக விளங்குகிறார். நல்லாட்சி, சனநாயகத்தை மீள்நிலைப்படுத்தல், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றின் நடுநாயகமாக சோடிக்கப்பட்ட மைத்திரிபால சிரிசேன, சர்வதிகாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தியவரை மீண்டும் அரசியலில் பிரவேசிக்க உடந்தையாக இருக்கிறார் என்ற ஆவேச அலை தென்னிலங்கையில் பீறிட்டு பாய்கையில் மேற்குலக சமூகம் மைத்திரி தொடர்பாக ஏமாற்றமடைந்துள்ளது.
மைத்திரி தனக்கு துரோகமிழைத்ததாக முன்னர் ராஜபக்ச கருதினார். ராஜபக்சவின் மீள்அரசியல் பிரவேசத்தை கட்டுப்படுத்த முடியாததால், சனவரி 8 நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் மைத்திரி துரோகமிழைத்து விட்டதாகா தற்போது ஆட்சிமாற்றத்திற்கு பின்னின்ற தீவிர 'சிறீலங்கர்கள்' கருதுகிறார்கள். நாற்பத்தொன்பது வருடகால சுதந்திரக் கட்சியின் வரலாற்றை கொண்டிருந்தாலும், படிநிலை வளர்ச்சியூடாக சனாதிபதியானவரல்ல மைத்திரி. மாறாக குறுகிய காலத்துக்குள் பெரும் பிம்பங்களாலும், மாயைகளாலும் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டவர். அந்த அலங்கரிப்புக்குப் பின்னால் சக்திமிக்க நாடுகளின் பூகோள அரசியல் சார்ந்த நலன் உள்ளது. ஆதலால்தான், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாகி இரு மாதங்களிலேயே இலங்கைத் தீவுக்கு வருகை தந்தார். மைத்திரிபால சிரிசேன சனாதிபதியான பின், முதன்முதலாக வாழ்த்துச் சொல்லி மலர்ச்செண்டை கொழும்பிலுள்ள இந்தியாவுக்கான தூதுவர் வழங்கினார்.
கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்காவின் இராசாங்க செயலாளர் ஜோன் கெரி அவர்கள் இலங்கைத் தீவுக்கு வந்திருந்தார். அத்துடன், அமெரிக்காவின் பல இராசதந்திரிகளும் இலங்கைத் தீவுக்கு படையெடுத்திருந்தனர். இந்த பயணங்களின் நிறைவிலெல்லாம் சிறீலங்காவின் புதிய அரசாங்கத்துக்கும் சனாதிபதி மைத்திபால சிரிசேனவுக்கும் பாராட்டுதல்களும் புகழாரமும் எல்லையற்று விரிந்தது. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு பயணம் செய்த போது விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டு, இலங்கைத் தீவு தென்னாசியாவின் தேர்தல் சனநாயகத்துக்கு எடுத்துக்காட்டாக பேசப்பட்டது. மைத்திரி-ரணில் அரசாங்கத்துக்கு நெருக்கடியும் அசௌகரியமும் ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாகவே, கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் வெளிவரவிருந்த அறிக்கை செப்டெம்பர் மாதம் வரைக்கும் பிற்போடப்பட்டது.
இத்தனை வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்ட பின்னும், மைத்திரிபால சிரிசேனவால் ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏதாவது எதிர்பாராத சர்வதேச ரீதியிலான அதிஉயர்மட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலேயன்றி, மகிந்த ராஜபக்ச ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடுவதனை தடுக்க முடியாது என்ற நிலையே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வரையான யதார்த்தம்.
சனவரி 8 தேர்தல் முடிவும் சரி, மிக அண்மைக் காலமாக தென்னிலங்கையில் அரங்கேறிவரும் அரசியல் நகர்வுகளும் சரி எதிர்பாரததாகவும் நடந்து முடியும் வரை நம்பமுடியாததுமாகவே உள்ளது. இது ஒருபுறம் மேற்குலகுக்கு அதிர்ச்சி, ஏமாற்றம், கோபத்தை உண்டுபண்ணுகிறது. மறுபுறம், இலங்கைத் தீவு தொடர்பான மேற்குலகின் கணிப்பீடுகளும் திட்டமிடல்களும் மீண்டும் ஒரு தடவை தவறாகிப் போயுள்ளதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. தேசிய நலன்களைத் தவிர அரசியலில் நிலையானதென்று எதுவுமில்லை. ஆனால், குறித்த நாடுகள் தமது தேசிய நலன்களை பூர்த்தி செய்வதற்காக சுமார் ஐந்து வருடங்களாக மேற்கொண்ட ஒரு செயற்த்திட்டம் வெறும் ஐந்து மாதத்தில் ஆபத்தை எதிர்கொண்டிருப்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது.
அன்று தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எந்த சக்திமிக்க நாடுகளால் மகிந்த ராஜபக்ச பலப்படுத்தப்பட்டாரோ, அந்த சக்திமிக்க நாடுகளுக்கு சவால் விடுபவராக மகிந்த ராஜபக்ச இன்று மாறியுள்ளார். வெளியகத்தால் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பலம், அவரை உள்ளகத்தில் ஒரு போரியல் நாயகனாக, வரலாற்று சாதனையாளனகா மாற்றியது. இன்று அந்த பலம் சார்ந்த பிம்பமே மேற்குலகுக்கும் மிரளாத வல்லமையை அவருக்கு வழங்கியுள்ளது. ராஜபக்சவுக்கான வெளியக ஆதரவில் முதன்மையானதான சீனாவின் ஆதரவென்பது நிலையானதல்ல. ஏனெனில், ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போன்று தம்மோடு இணங்கிச் செயற்பட முன்வந்தால், அவர்களுடன் கூட்டுவைக்க சீனா தயங்காது.
இத்தருணத்தில் மற்றுமொரு முக்கியமான விடயமும் கவனிக்க வேண்டும். அது யாதெனில், அமெரிக்காவுக்கும் தமக்கும் சீனா பொது சவால் என்ற காரணத்திற்காக, அமெரிக்கா இலங்கைத் தீவில் ஆழமாக காலுன்றுவதை இந்தியா விரும்பப் போவதில்லை. ஏனெனில், இலங்கைத் தீவில் அமெரிக்கா ஆழமாக காலூன்றுவதென்பது, அமெரிக்காவின் மேலாண்மையை இந்துசமுத்திரத்தில் பலப்படுத்தும். அது, இந்தியாவின் தேசிய நலனுக்கு நீண்டகால நோக்கில் சவால்விடக்கூடிய சாத்தியம் உண்டு. இந்த நீண்ட கால திட்டத்தின் அடிப்படையிலேயே, இலங்கைத் தீவை மையப்படுத்தி இந்து சமுத்திரத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்டும் நகர்வை 1970 களின் இறுதிப்பகுதியில் அமெரிக்கா எடுத்த போது, சிறீலங்கா அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக, தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் இந்தியா வழங்கியது. இதனூடாக அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்தது. அணிசேர நாடுகளின் கூட்டம் 1981 டெல்லியில் இடம்பெற்றபோது, டீக்கோ கார்சியா (Diego Garcia ) தீவில் அமைந்துள்ள அமெரிக்காவின் கடற்படை மற்றும் இராணுவத் தளங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்ற தீர்மானத்தை இந்தியா கொண்டுவர முற்பட்டது. ஆனால், அதனை அமெரிக்காவுக்கு சார்பான முறையில் சிறீலங்கா அரசு மாற்றியமைத்தது. இது பின்னர் சிறீலங்காகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய இந்தியாவின் நகர்வுகளுக்கு வழிவிட்டது. 2002 ரணில் அரசாங்கம் இருந்தபோது, சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்காவின் அக்சா (Acquisition and Cross-Servicing Agreement - ACSA) உடன்படிக்கையில் சிறீலங்காவும் அமெரிக்காவும் கைத்சாத்திட முனைந்தன. ஆயினும், இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இது கைவிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆயினும் இந்த உடன்படிக்கை பின்னர் 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்காவோடு இந்தியாவுக்கு சில பொதுப்புள்ளிகள் இருப்பினும், அமெரிக்காவின் மேலாண்மையை இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரிப்பதற்கு துணைபோகக் கூடிய ஆட்சிகள் தமது அண்டை நாடுகளில் பலமாக இருப்பதை இந்தியா விரும்பாது. இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்புலத்திலேயே, எதிர்பாராத மாற்றங்கள் இலங்கைத் தீவின் அரசியலில் ஏற்பட்டுவருகிறது. குறிப்பாக ராஜபக்சவின் எதிர்பாராத மீள் அரசியல் பிரவேசம் என்பது மேற்குலகுக்கு குழப்பகரமானதொன்றே.
இந்த எதிர்பாராத நிகழ்வு மட்டுமன்றி, இதனோடு தொடர்புபட்ட கடந்த மூன்று தசாப்தகால அரசியல் விருத்திகளும், இலங்கைத் தீவு தொடர்பான மேற்குலக சமூகத்தின் கொள்கைகள் மீள்பரீசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஏனெனில், இது ஒரு கட்சியின் உள்வீட்டுப் பிரச்சனையோ, தனித்து ஒரு நாட்டின் பிரச்சினையோ அல்ல. மாறாக இது ஒரு தேசத்தின் இருப்புக்கும், ஒரு தேசத்தின் இருப்பை, எதிர்காலத்தை மறுக்கும் இன்னுமொரு தேசத்துக்குமிடையிலான இனக்குழும மோதுகையாக ஆரம்பித்து, பிராந்திய தலையீட்டை எதிர்கொண்டு, பூகோள அரசியலால் சர்வதேசமயப்படுத்துள்ளப்பட்டுள்ள பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டுமெனில், இவற்றிற்கெல்லாம் மூலவேராக இருக்கின்ற இனக்குழும மோதுகைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். அந்த மாற்றம் உருவாகும் வரை, எந்த மாற்றமும் நிலையானதாக இருக்காது. பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டுமெனில், இவற்றிற்கெல்லாம் மூலவேராக இருக்கின்ற இனக்குழும மோதுகைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். அந்த மாற்றம் உருவாகும் வரை, எந்த மாற்றமும் நிலையானதாக இருக்காது.
நிர்மானுசன் பாலசுந்தரம்
Geen opmerkingen:
Een reactie posten