தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 juli 2015

கடவுளுக்கோர் கடிதம் !

“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்ற வலிய வார்த்தையை உச்சரித்த தந்தை செல்வா அன்று அமைதியிழந்து காணப்பட்டார். அவர் தமிழினத்தையும் தமிழ் மக்களையும் விட்டு பிரிந்து ஏறத்தாழ நான்கு பத்தாண்டுகள் ஆகின்றது.
அக்கால இடைவெளியில் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுமாறு கடவுளிடம் தொடர்ந்து வேண்டிக்கொண்டிருந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் தந்தை செல்வாவை சந்தித்துப் பேச கடவுள் அழைத்திருந்தார்.
தொழில்சார் வழக்கறிஞராகவிருந்த தந்தைசெல்வா கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று அறிந்திருந்தும் பழக்கதோசம் காரணமாகவோ என்னவோ இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் பட்ட பட்டுவரும் இன்னல்கள் தொடர்பான ஆவணங்களையெல்லாம் சரிபார்த்து அடுக்கி வைத்தார்.
அத்துடன் அன்று கையளிக்கவிருந்த 'வட்டுக்கோட்டை தீர்மான மனுவையும்” சரிபார்த்து ஒப்பமிட்டார். பரபரப்புடன் புறப்பட்டவர் ஏதோ நினைவுவந்தவராக, தனது பையில் இருந்த ஆவணங்களிலிருந்து ஒரு கோவையை வெளியே எடுத்து போட்டார்.
அக்கோவையின் முன்பக்கத்தில் தமிழ் இயக்கங்களினால் கொல்லப்பட்ட தமிழர் விபரம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான ஒரு சோக வரலாற்றை கடவுள் முன் எடுத்து செல்ல அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அக்கோவையை பார்க்கவே அவருக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது.
கடவுளின் தீர்ப்பு
சந்திப்பு தொடங்கியதும் அமைதியான ஆனால் உறுதியான தொனியில் தந்தைசெல்வா வாதங்களை முன்வைத்தார். எல்லாவற்றையும் செவிமடுத்த கடவுள் தனது இறுதித்தீர்ப்பை வழங்கினார்.
தனது படைப்புகளில் மிகவும் அழகிய ஒன்றான இலங்கைத்தீவை ஒரு புதிய ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருவதாகவும், இன விகிதாசாரத்தை 50க்கு 50 என பேணுவதால், பெரும்பான்மை, சிறுபான்மை பிரச்சனைக்கு இடமிருக்காது என்பதனால், பிரச்சனைகள் தோன்ற வாயப்பில்லை எனவும்,
தந்தை செல்வா விரும்பினால் இலங்கைத்தீவில் புதிதாக தோன்றும் தமிழினத்தில் மீண்டும் பிறந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்யலாம் எனவும், தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைக்கேட்ட தந்தை செல்வாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று தமிழ் மக்களின் மீதிருந்த 'சிறுபான்மை இனம்” என்ற அடையாளம் நீக்கப்படப்போகின்றது. என்பதுடன், மீண்டும் ஒரு தமிழ்தாயின் வயிற்றில் பிறக்கப்போகின்றேன் என்பதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
புதிய இலங்கைத்தீவும் பாகப்பிரிவினையும்
காலப்பெருவெளியில் புதிய இலங்கைத்தீவு அதே அழகுடன் படைக்கப்பட்டது. பத்து மனிதர்கள் ஆண் பெண்ணாக அங்கு விடப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் தமிழிலும் ஐந்து பேர் சிங்களத்திலும் பேசினார்கள். அன்று பாகப்பிரிவினைக்காக பத்துப்பேரும் அழைக்கப்பட்டனர். பேச்சு வார்த்தை மேசையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
வல்லமை பொருந்திய கடவுளின் தூதுவர் நடுவராக இருந்தார். தந்தை செல்வாவுக்கு அவதானிப்பாளர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முதலில் சிங்களத்தரப்பினர் பேசினர். அவர்கள் ஒரே குரலில் 'இது சிங்கள பௌத்த மக்களுக்காக வாக்களிக்கப்பட்ட நாடு” எனக் கூறியதுடன். நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஏகமனதாக தமக்குள் ஒரு தலைவனை நியமித்தனர்.
அடுத்து தமிழ் தரப்பினர் பேசினர். அவர்களும் இத்தீவில் தமக்கு ஒரு பங்கு இருப்பதாகவும் வடக்கு-கிழக்கு இணைந்த தனியான தேசம் தமது பாரம்பரிய சொத்து எனவும் ஆக்ரோசமாக கூறினார்கள்.
கடவுளின் தூதுவனும் அதனை ஏற்றுக்கொண்டு 'பாகப்பிரிவினை” உடன் படிக்கையை எழுதத்தொடங்கினார். அதேவேளை தமிழர் தரப்பை நோக்கி இந்த உடன் படிக்கையில் ஒப்பமிட ஒருவர் முன்வர வேண்டும் எனக் கூறிவிட்டு தனது பணியை தொடர்ந்தார்.
இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த தந்தை செல்வாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. தமிழன் எதிர்பார்த்த கனவு தேசம் கைகளில் கிடைக்கப் போவதையிட்டு அகமகிழ்ந்தார்.
அடுத்து நடந்தது......... ?
பாகப்பிரிவினை உடன் படிக்கையை எழுதிக்கொண்டிருந்த தேவதூதனின் கவனத்தை தமிழர் தரப்பிலிருந்து வந்த சலசலப்பு திசை திருப்பியது. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே யார் தமிழர் தரப்பில் ஒப்பமிடுவது? என பலத்த தர்க்கம் நடைபெற்றது. இறுதியில் அது கைகலப்பாக மாறியது.
தந்தை செல்வா தேவதூதனை நோக்கி 'ஏதாவது செய்யுங்கள் எனக் கேட்க தேவதுhதன் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். மறு புறத்தே சிங்களத்தரப்பு 'றபாண்” இசையெழுப்பி பால்சோறு உண்டபடி, மிகவும் ஒற்றுமையாக தமிழர் தரப்பின் சண்டையை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். சில வேளைகளில் கரகோசம் செய்து சண்டையை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர்.
சண்டை பிடித்து களைத்துப்போன ஒருவன் திடீரென்று தமிழர் தரப்பிலிருந்து சிங்கள தரப்பிற்கு ஓடிப்போய் 'நான் இலங்கையன் ஒன்று பட்ட இலங்கைக்குள் வாழ விரும்புகிறேன்” என்று தேவதூதனை பார்த்து கூறினான்.
அடுத்து ஒருவன் ஓடிப்போனான், தனிநாடு சாத்தியமில்லை சகோதர இனத்துடன் சேர்ந்து வாழப்போகிறேன் என்றான். சிறிது நேரத்தில் இன்னுமொருவன் ஒடிப்போனான், தான் ஒரு பிரதேசத்தை சேர்ந்தவனென்றும், அப்பிரதேசத்திற்கென தனிப்பட்ட தேவைகள் இருப்பதனால் சிங்களத்தரப்புடன் சேர்ந்தே தனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும் கூறினான்.
கடைசியில் தமிழர் தரப்பில் இருவர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். இருவரும் நீண்ட நேரம் சண்டை பிடித்ததால் கடுமையாக களைத்திருந்தனர். அதில் ஒருவன் சொன்னான். 'எங்களுக்கு தாறதை தாங்கோ மிச்சக்காலமென்றாலும் பிள்ளை குட்டியோடு நிம்மதியாக இருக்கப்போறன். என்று அங்கும் போகாமல், இங்கும் போகமல் நடுவில் நின்று தேவதூதனின் கால்களில் விழுந்தான்.
கடைசியாக தமிழர் தரப்பில் நின்ற ஒற்றை மனிதன் மட்டும் 'தனிநாடு தனிநாடு” என்று கத்திக்கொண்டேயிருந்தான் யாரும் அதனை செவி மடுத்ததாக தெரியவில்லை.
நடைபெற்ற சம்பவங்களால் குழப்பமடைந்த தேவதூதன் பாகப்பிரிவினை உடன் படிக்கையை எழுதுவதை இடைநிறுத்தி விட்டு, கடவுளிடம் கேட்டு வருவதாக கூறி அவ்விடத்தில் நின்று புறப்பட்டு விட்டார்.
சிறிது நேரத்தில் தன்னை வந்து சந்திக்கும் படி கடவுளிடமிருந்து தந்தை செல்வாவுக்கு அழைப்பு வந்தது. கடவுளின் முன் போய் நிற்கத் தயங்கிய தந்தை செல்வா கடவுளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். கடவுளே தங்களால் கூட தமிழனை காப்பாற்ற முடியாது.............
தொடர்ந்தது கடித வரிகள் மட்டுமல்ல, கண்ணீரும் தான்.
இ.உயிர்த்தமிழ்
uyirththamilzh@gmail.com

Geen opmerkingen:

Een reactie posten