தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 17 juli 2015

தமிழ் மக்கள் பேரம் பேசும் தேர்தலாக இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்: பொன்.செல்வராசா



எதிர்வரும் தேர்தலை தமிழ் மக்கள் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரான பொன்.செல்வராசா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவின் தேர்தல் பிரசாரப் பணிகள் புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் அரசடி பெரியதம்பிரான ஆலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பொன்.செல்வராசா, 
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த நாட்டில் பாரிய நெருக்கடி நிலையொன்று இருந்துவந்தது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் அரச பயங்கரவாதம் ஒன்று இருந்தது.
இந்த அரச பங்கரவாதம் இந்த ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி வரை நீடித்திருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்று பதிய ஜனாதிபதி நாட்டை ஆட்சிசெய்து வருகின்றார். நாங்கள் இன்று ஓரளவு சமாதானத்துடன் வாழ்கின்றவர்களாக இருக்கின்றோம்.
போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்களை காப்பாற்றக்கூடியவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தபோது 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்து தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களுக்கு காவலர்கள் என்பதை உலகுக்கு வெளிக்காட்டினர்.
வடக்கினை விட கிழக்கு மாகாண மக்கள் தமிழ்தேசியத்தில் பற்றுக்கொண்டவர்கள் என்ற காரணத்தினால் இங்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தே தெரிவு செய்யப்பட்டனர்.
அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெற்றது. ஆனால் இந்த முறை ஓரு ஆசனத்தினை கூடுதலாக பெற்று நான்கு ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும்.
நடைபெறப்போகும் தேர்லானது இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்போகும் பாராளுமன்றமாக இருக்கப் போகின்றது.
கடந்த காலத்தில் அரசாங்கத்துடன் பல தொடர் பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் கூட அந்தபேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. ராஜபக்ஸ அரசாங்கம் எமது கட்சியை புறக்கணித்தது.பேச்சுவார்தையினை தொடர்ந்து முன்செல்வதை தடுத்தது. முறித்தது.ஆனால் துவண்டு செல்லவில்லை.
சர்வதேசத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எடுத்துக்கொண்ட பிரேரணை சர்வதேசத்தினை விழிப்படையசெய்த பிரேரணையாக இருந்தது.நாங்கள் மூன்று தடவைகள் சர்வதேச ரீதியாக வெற்றியடைந்துள்ளோம்.
இது ஓரு முயற்சியென்றாலும் இவற்றினை சர்வதேரீதியாக கொண்டுசென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பேயாகும். இதனை அரசாங்கத்தினை ஆதரித்த தமிழ் அரசியல் அடிவருடிகளோ, தமிழ் கட்சியோ செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே செய்தது.
இதன்செயற்பாடு அறிக்கை வடிவிலே எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதற்கு முன்பாகவே தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த அறிக்கை மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் வெற்றி பெறுவார்கள் என்பதையும் நான் இந்தவேளையில் கூறிக்கொள்கிறேன்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலை சர்வதேசம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டுள்ளது. இது சமாதான காலத்திலே நடைபெறுகின்ற தேர்தல்.இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்களை நாடிபிடித்தறியும் வேலையில் சர்வதேசம் ஈடுபட்டுள்ளது.
கடந்த முறை 14 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றனர். இந்தமுறை 20 உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதற்கான நிலையை தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும்.
எதிர்வரும் புதிய பாராளுமன்றத்தில் எமது பெரும்பான்மையை காட்டும்பொழுதுதான் நாங்கள் பேரம்பேசும் சக்தியாக மாறும் நிலையேற்படும்.இதுவரையில் நாங்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றம்பெறவில்லை.அதற்கான நிலையை தமிழ் மக்கள் ஏற்படுத்தவேண்டும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய முகம்களையும் களம் இறக்கியுள்ளோம். புதியவர்களுடன் பழையவர்களும் செல்லும்போதே பழையவர்களின் ஆலோசனைகளும் வழிநடத்தல்களும் புதிய உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.
எனவே புதியவர்களையும் பழையவர்களையும் இந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யும்போதே சிறந்த அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தமுடியும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten