தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

வடக்கு முஸ்லிம்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்!

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எமது தேசத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இனநல்லுறவு, சகவாழ்வு இணக்கப்பாட்டு அரசியல் என்பன குறித்து ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தேவை மனிதம் குறித்து சிந்திக்கின்ற எல்லோராலும் வலியுறுத்தப்படுகின்றது.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தேசத்தில் அரசியல் என்பது தனிநபர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வியாபார அரசியலாக மாறியுள்ளது.
இந்நிலையில் அதற்கு மாற்றீடாக சமூக இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட விழுமிய அரசியல் ஒழுங்கொன்றின் தேவை தற்போது மிகவும் பலமாக உணரப்படுகிறது.
எனவே இவ்விரண்டு முக்கிய அடிப்படைகளையும் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு கடந்த ஜூலை 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன், முதலைமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பில் அப்துர் ரஹ்மான் (பொறியியலாளர்), நஜா முஹம்மத், அப்துல் வாஜித், அஷ்ஷெய்க் பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப், முஹம்மட் பிர்தௌஸ், முஹம்மட் லாபிர் மற்றும் முஸ்தபா மௌலவி ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர்களது ஏனைய நலன்கள் குறித்தும் பேசப்பட்டது.
அத்துடன் அமையப்போகும் வட மாகாண சபையில் அவர்களது பிரதிநிதித்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியலுக்கான அடிப்படைகள் குறித்தும், விழுமிய அரசியலுக்கான மாதிரிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், வட மாகாண சபை நிர்வாகத்தில் முஸ்லிம்களின் பங்கேற்பு குறித்தும் பேசப்பட்டது.
இரு சாராருக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இதன்போது, விரிவாகப் பேசப்பட்டதுடன் அதற்கான நகல்களும் இச்சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதன்போது காணப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் வெகுவிரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதோடு, தேர்தல் பிரச்சாரங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு நேரடியாக பங்கேற்கும் என அதன் ஊடகப் பேச்சாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten