பொலிஸாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் எவ்வித அபராதமுமின்றி இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்காத பெண்கள் என்று பொலிஸாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்று ஆஜர்படுத்தும்படி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று ஆஜரான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் எந்தவித அபராதமுமின்றி விடுதலை செய்தார்.
நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியமையால் நீதிமன்றம் மக்களால் நிரம்பி காணப்பட்டது.
வாழைச்சேனை மீயான்குள காட்டுப் பகுதியில் மானை சுட்டவருக்கு பிணை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீயான்குள காட்டுப் பகுதியில் இன்று மான் ஒன்றை சுட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீயான்குளக் காட்டுப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை ஏற்படுத்திய பொலிஸார் கொல்லப்பட்ட மானையும் குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க விசாரனைகளை மேற்கொண்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி சந்தேகநபர் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதற்கிணங்க ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி,செல்வாநகரை சேர்ந்த 56 வயதான யோகராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போதே மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten