இனவாதப் போரில் இறுகி மனிதப் படுகொலைகளால் இரத்த பூமியாகிய இலங்கை மண், தான் பெற்ற பிள்ளைகளை இனத்தின் பேரால் கொன்று குவித்து, குற்றக் கூண்டில் நிற்கும் பரிதாபத்திற்கு ஆளாகியது.
மனித வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தால் எழுதப்பட்டதென்ற துயரம் தரும் உண்மைகள், இன்றைய எழுச்சிமிகு விஞ்ஞான அறிவியல் உலகில் நீடிப்பதும் நிலைப்பதும் நியாயமானதன்று.
விட்ட தவறுகளிலிருந்து ஏற்பட்ட இழப்புகளிலிருந்து கற்றுக் கொள்பவன் தான் மனிதனாக இருக்க முடியும்.
ஆனாலும் எங்கள் நாட்டில் சிறுபான்மை இனம் அழிக்கப்பட்டால் அது பெரும்பான்மை இனத்துக்கு வெற்றி. பெரும்பான்மை இனம் தண்டிக்கப்பட்டால் அது சிறுபான்மை இனத்திற்கு கீர்த்தி என்ற மனநிலையே மிகுந்துள்ளது.
இத்தகைய மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதை ஆளும் அதிகார வர்க்கம் நினைத்தாக வேண்டும். ஆனால் அத்தகைய நினைப்பிற்கு இம்மியும் இடமில்லை என்று அடித்துக் கூற முடியும்.
வன்னிப் போரில் உயிரிழந்து போன அப்பாவிப் பொதுமக்கள், அதற்கு முன்னதாக 30 ஆண்டு காலப் போரில் மாண்டுபோன மனிதங்கள். எங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்கள் என்று துடிக்கின்ற மனிதநேயம் எங்கள் ஆட்சியாளர்களிடம் இல்லாது போயிற்று.
ஒரே நாடு, ஒரே இனம் என்று விளம்பரப்படுத்துவோர் அதனை அமுல்படுத்துவதாக இருந்தால், இறந்தவன் தமிழன், சிங்களவன் என்று முகம் பார்ப்பது ஏன்?
ஐயகோ! இறந்தவன் இலங்கையன் என்று துடிப்பதை மறந்துவிட்டு, ஒரே தேசம் ஒரே இனம் என்று அச்சிட்டு அதற்கு அலங்கார வளைவிடுவதால் சமாதானம் வந்து விடுமா என்ன?
சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும் என்று கூறும் நடிகர் வடிவேலுவின் பாணியில், போர் என்றால் பொதுமக்கள் உயிரிழக்கத்தான் செய்வர் என்று கூறுகின்ற கொடூரத்தனங்கள் இருக்கும் போது, இலங்கை மண்ணில் சமாதானம் ஏற்படவே மாட்டாது.
அதனை நிருபிப்பதாகவே தற்போது பேரினவாதக் கட்சிகள் தமிழினத்திற்கு எதிராகச் சண்டப் பிரசண்டம் கொண்டுள்ளன. சிங்கள இனத்திற்கு எதிர் என்றால் அது துரோகம். தமிழ் இனத்திற்கு எதிர் என்றால் அது தேசப்பற்றும் தேசிய இயக்கமுமாம்.
எப்படியிருக்கிறது நாடும் நடப்பும். தமிழர்களுக்கு எதிராகக் கருத்துரைப் போரையும் தூக்கு ... தூக்கிலிடு ... என்று கட்டளையிடும் அரசால் அன்றி வேறு யாராலும் இலங்கையிலுள்ள பேரினவாதப் பேயை கட்டிக் கழிக்க முடியாது.
Geen opmerkingen:
Een reactie posten