தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

சம்பந்தனின் பேச்சுக்கு இடையூறு விளைவித்தது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்!- பிரபா கணேசன் எம்.பி !


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக ஆற்றப்பட்ட உரைக்கு எதிராக பாராளுமன்றத்தில் செயல்பட்ட இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
கடந்த பாராளுமன்ற தொடரின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் மக்களுக்காக குரல் எழுப்பி பேசிய பொழுது அதற்கு இடைய+று விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் அப்துல் காதருமான இருவருமே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
மாறாக கூட்டமைப்பின் தலைவரை முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர கூறியிருப்பது நகைப்பிற்குரியதாகும். அன்று இரா.சம்பந்தன் முஸ்லிம் மக்கள் சார்பாக உரையாற்றிய பொழுது பல அநாகரீக வார்த்தைகளை சம்பந்தனுக்கெதிராக இவர்கள் உபயோகித்தார்கள்.
அஸ்வர் எம்.பியின் ஊடக அறிக்கையில் முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியதற்காக இரா.சம்பந்தன் மன்னிப்பு கோர வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக தெரிவித்திருக்கின்றார்.
இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பல அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை இவர் சபையில் இரா.சம்பந்தனுக்கெதிராக குறிக்கிட்டு தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியதையும் கிழக்கு மாகாணத்தில் அவர்களுக்கெதிரான கொலை செயல்பாட்டுகளுக்கும் நான் மட்டுமல்ல அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம்.
ஒரு போதும் இதனை நாங்கள் நியாயப்படுத்தியதில்லை. நியாயப்படுத்தப் போவதுமில்லை. அதே நேரம் விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களது பிழையான செயல்பாடுகளுக்கெதிராக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கிலும் சரி தென்னிலங்கையிலும் சரி இருந்த தமிழ் அரசியல்வாதிகளான எங்களுக்கு குரல் கொடுக்க தைரியம் இருக்கவில்லை என்பதனை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏற்கனவே அன்றைய புலிகளின் முஸ்லிம் மக்களுக்கெதிரான செய்ல்பாடுகளுக்காக கூட்டமைப்பிலிருந்து பல தரப்பினர் தமது வேதனையையும் கண்டனத்தையும் பலமுறை தெரிவித்துள்ளார்கள். அப்படியிருக்கும் நிலையில் முஸ்லிம் மக்களுக்கு சார்பாக இரா.சம்பந்தன் அவர்களின் உரையை குறிக்கீடு செய்த இவர்கள் வெறுமனே அரசாங்கத்திற்கு வால்பிடிக்கும் வேலையைத் தான் செய்கின்றார்கள். நாங்களும் அரசாங்கத்திற்கு எமது ஆதரவுகளை வழங்கியிருந்தாலும் கூட இவ்வாறான அநாகரீகமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க முயற்சிப்பதுமில்லை.

சிறுபான்மையின தலைவர் ஒருவர் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பொழுது அதனை அன்புடன் வரவேற்கக்கூடிய பக்குவம் அரசியல்வாதிகளுக்குத் தேவை. இன்று இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத செயல்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் மக்களுக்கெதிராக இன்று இடம்பெற்றுவரும் சம்பவங்கள் நாளை தமிழ் மக்களுக்கெதிராகவும் இடம்பெறலாம். ஆகவே சிறுபான்மையின மக்களின் ஒற்றுமையே இதனை முறியடிக்கக்கூடிய சக்தியாகும். அரசாங்கத்திற்கு வெறுமனே சாமரம் வீசும் செயல்பாடுகளின் ஈடுபடும் இப்படியான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

Geen opmerkingen:

Een reactie posten