தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

சர்வதேச விசாரணையொன்றே இன்று சுயாதீனமானதொன்றாக இருக்கமுடியும் என்கிறார் சுமந்திரன் பா.உ.


அவையின் பிரதித் தலைவருக்கு நன்றி... எமது தாய் ஐக்கிய நாடுகளின் அமைப்பினால் இவ்வாறு நடாத்தப்படுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? இது சரியா? என்ற ஒரு வினாவுடன் மதிப்பிற்குரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார்.
ஆனால் அதுவல்ல முக்கியமான வினா. நான் இதனைவிட மிகப் பொருத்தமானதும், மிகவும் பாரதூரமானதுமான வினாவொன்றை இங்கு கேட்க விரும்புகிறேன்.
அதாவது, இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கும் எங்களை எமது தாய் நாடு இவ்வாறாகவா நடாத்துவது? அது சரியா?
வெறுமனே எண்ணிக்கையில் குறைந்த ஒரு சமூகம் என்பதற்காக, எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சமூகம் எங்களை இரண்டாவது தரப் பிரஜைகளாக, அல்லது அதற்கும் மேலாக மிகக் கீழ்த்தரமாக நடாத்துவது சரியா?
பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விடலாம் என்று கூறும் நீங்கள் நல்ல நோக்குடன் கேட்கப்பட்ட எனது இந்த வினாவிற்கு விடையளிக்க முடியுமா?
மதிப்பிற்குரிய வெளியுறவுத்துறை அமைச்சர், தனக்கு மிகவும் பரீட்சயமான ராணியின் ஆங்கில மொழிநடையில் பேசியிருந்தார். அவர் தனது தாய் மொழியில் அதற்கு நிகராகவோ அல்லது அதைவிட மேலாகவோ பரீட்சயமாக இருந்தாலும் கூட, மேல்நாட்டு மொழியான ஆங்கில மொழியில் உரையாற்ற இன்று தேர்ந்தெடுத்திருந்தார்.
மேல்நாட்டுக் கல்வி, மேல்நாட்டுப் புலமைப்பயிற்சி போன்றவற்றின் பயன்களைப் பெற்ற அவர், இன்று மேல்நாட்டு நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்.
இந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளைப் பட்டியலிடும் போது கூட, அவர் அதனைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்காதது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
சிலவேளை, ஜெனிவாவிலுள்ள அவரது சக அதிகாரிகள் அவருக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது குறித்துச் சரியாகத் தெரிவிப்பதில்லையோ என்னவோ! இவரது சக அதிகாரிகள் அல்ல, இவர் தான் அங்கு இருந்திருக்க வேண்டும்.
அநேகமாக இவர் 32 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருப்பதாகத் தெரிவித்த பத்திகைகளை மட்டும் வாசித்து விட்டு 32 நாடுகள் என்று கூறுகிறார்.
மதிப்பிற்குரிய அமைச்சரே! உண்மையிலேயே 43 நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன. உங்கள் பதிவுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். ஜெனிவாவிலுள்ள உங்களது சக அதிகாரிகள் அங்குள்ள நிலைமைகள் குறித்து பிந்திய தகவல்களை உங்களுக்கு அறியத்தரவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
நீங்கள் இரண்டு நாட்கள் பிந்திய தகவல்களையே இன்னமும் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு அங்கிருந்து தகவல்களேதும் கிடைப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் பத்திரிகைகளை வாசிப்பதனூடாகவே தகவல்களைச் சேகரிக்கிறீர்கள்.
இந்தத் தீர்மானத்திற்கு யார் அனுசரணை வழங்குகிறார்கள் என்பது குறித்த உங்களது முறைப்பாடு – அதாவது இலங்கை அரசாங்கம் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கிய 2009 ம் ஆண்டுத் தீர்மானத்திற்கு யார் அனுசரணை வழங்கியது? 2009 ம் ஆண்டின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இன்றைய தீர்மானமும் வரையப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் 23ம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்த அந்தத் தீர்மானமும் 2009 ம் ஆண்டின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே வரையப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானங்களுக்கு அனுசரணை வழங்கியது யார்?
இன்று இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, சகல கண்டங்களிலும் உள்ள நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதனை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
(குறுக்கீடு)
மதிப்பிற்குரிய அமைச்சர் பேசும் போது தன்னை குறுக்கீடு செய்ய வேண்டாம் என எம்மிடம் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க நாங்கள் அவரை குறுக்கீடு செய்யவில்லை.
ஆனால் இதேவிடயத்தைத் தனது பின்னிருக்கைக் காரர்களுக்குச் சொல்லுவதற்கான பண்பு அவருக்கில்லை. உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களை நீங்கள் இப்படித்தான் நடத்துகிறீர்கள்!. நீங்கள் சிறப்புரிமை கோருகிறீர்கள். ஆனால் உங்களது பிழைகள் திருத்தப்பட்டால் நீங்களனைவரும் குழப்பமடைகிறீர்கள்.
நீங்கள் பேசும் போது நாங்கள் உங்களை மதித்தோம், நீங்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க உங்கள் பேச்சைக் குறுக்கீடு செய்யாமல் அமைதி காத்தோம். ஆனால் உங்கள் பின்வரிசைக்காரர்கள் எங்களை இவ்வாறு கேவலமாக நடாத்தும் போது நீங்கள் வாயடைத்து மெளனமாக இருக்கிறீர்கள். இதுதான் உங்களின் பிரச்சனை.
இந்த நாட்டிலுள்ள உண்மையான பிரச்சனை இதுதான். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மையினம் என்பதனால் எங்களுக்காகக் குரல்கொடுக்க யாரும் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்? நாங்கள் கதைக்க முடியாது என நீங்கள் எண்ணுகிறீர்கள்? ஒட்டுமொத்த மமதை….
(குறுக்கீடு)
சபாநாயகர்: மதிப்பிற்குரிய அஸ்வர் அவர்களே, தயவுசெய்து இருக்கையில் அமருங்கள்.
எம். ஏ. சுமந்திரன்: உமது இனத்திற்கு என்ன நடக்கின்றது என்பது உமக்குத் தெரியவில்லை. நீர் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு பண்டம்.
சபாநாயகர்: மதிப்பிற்குரிய சுமந்திரன், நீங்கள் அவரைத் தாக்காமல், உங்கள் உரையைத் தொடருங்கள்.
எம். ஏ. சுமந்திரன்: இல்லை, இவர் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு பண்டம்.
இன்று முன்வைக்கப்படும் திருத்த வரைவானது மீள்குடியேற்ற அதிகாரசபையின் செல்லுபடியாகும் காலப்பகுதியை ஆறு வருடத்திலிருந்து, ஒன்பது வருடமாக நீடிப்பதனை மட்டுமே குறிப்பதாகும்.
மதிப்பிற்குரிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த மசோதாவை பற்றிப் பேசாது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றிப் பேசினார். நான் முதலில் இந்த மசோதாவைப் பற்றிக் கதைத்துவிட்டுப் பின்னர் ஜெனிவாவில் என்ன நடக்கின்றது என அவர் எழுப்பிய சில கேள்விகளுக்கு வருகிறேன்.
அவர் ஜெனிவாவில் தெரிவிக்க வேண்டிய விடயங்களைத் தெரிவிப்பதற்குப் பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் போலத் தெரிகிறது. அவரது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அவரிற்குப் பாராளுமன்றம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது போலும். அதனால்தான் அவர் ஜெனீவா பற்றித் தொடர்பில்லாத ஒரு மசோதா விவாதத்தின் போது ஜெனிவா பற்றி மட்டுமே பேசினார்.
மதிப்பிற்குரிய மீள்குடியமர்வு அமைச்சர் தான் பேசும்போது அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மிகச் சரியாகப் பதிலளித்தது மட்டுமன்றிப் பல உண்மைகளையும் தெரியப்படுத்தினார்.
எமக்கு மீள்குடியேற்ற அமைச்சர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவர் அந்தப் பதவிக்கு வந்த நாளிலிருந்து சகல விடயங்களிலும் எங்களை உள்ளடக்கிக் கலந்தாலோசிக்கத் தவறுவதில்லை. எனக்கு நன்றாக நினைவுள்ளது அவர் பதவியேற்ற மறுநாளே அங்கிருந்து எம்மோடு கலந்தாலோசிக்க வேண்டும் எனச் செய்தியனுப்பியிருந்தார். இவ்வாறு அவர் நல்ல மனதுடனேயே செயல்படுகிறார். அந்த நல்ல மனதுடன் அவர் இன்று மதிப்பிற்குரிய அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேர்மையாகப் பதிலளித்தார்.
கடந்த நான்கு வருடங்களில் சுமார் 470 வீடுகள் அரசாங்கத்தால் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மிக மோசமான கேவலம். இதுதான் உங்களின் மீள்குடியேற்றம் என்றால் நிச்சயமாக மேலும் 3 வருடங்கள் உங்களுக்குப் போதாது.
சுமார் 250,000 ற்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிக்கப்பட்ட இடத்தில் ஆக இவ்வளவுதான் உங்களால் செய்ய முடிந்தது என்று இந்த சபையில் கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
2010 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட சிறிய வரவு செலவுத் திட்டத்திலிருந்து நாங்கள் இது தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இது தொடர்பாக என்ன செய்கிறது?
நாங்கள் இந்தியாவிற்கும் மேல்முறையீடு செய்ய வேண்டியிருந்தது. இந்தியா 50,000 வீடுகளுக்கு உறுதியளித்தது. வெறும் 1000 வீடுகள் மட்டுமே தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
(குறுக்கீடு)
வர்த்தக அமைச்சர் தலையீடு செய்கிறார். அவருடைய தலையீட்டினாலும், வடக்கிலிருக்கும் இன்னொரு அமைச்சருடைய தலையீட்டினாலும் வடக்கில் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படுவது மிகவும் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நான்கு வருடங்களின் பின்னரும், இதன் பயன்பாட்டினைப் பெறுபவர்கள் அங்கு மீள்குடியேற்றப்பட முடியாதுள்ளது.
(குறுக்கீடு)
ஜெனீவாவில் வாக்கெடுப்பு நிறைவடைந்து விட்டது. அங்கு தீர்மானம் சுமார் 13 அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற இந்த சந்தோஷமான செய்தியை மதிப்பிற்குரிய வெளிநாட்டமைச்சரிற்கு அறிவிக்க விரும்புகிறேன்.
(குறுக்கீடு)
மீள்குடியேற்ற அமைச்சர் தனது உரையின்போது மன்னார் மாவட்டத்தில் மடு வீதியில் சில வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அது உண்மைதான். அங்கே 52 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
நான் இப்போது இங்கு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதாவது 2011 ம் ஆண்டு 23ம் திகதியன்று நான் இச்சபையில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையில் இந்த வீடுகளின் புகைப்படங்களையும் இணைத்திருந்தேன். அது தொடர்பில் நான் அமைச்சரை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அதாவது எத்தனை தமிழர்களுக்கு இந்த 52 வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை. ஏனைய சமூகத்தினருக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனையேதும் கிடையாது. நான் அதற்கு எதிரானவனும் அல்ல. வடக்கில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள் உள்ளிட்ட ஏனைய சமூகத்தவர்கள் மீண்டும் அங்கு வந்து வாழவேண்டுமென்றே நான் நினைக்கிறேன். நாங்கள் அவர்கள் அங்கு மீண்டும் வந்து வாழ்வதனை வரவேற்கிறோம்.
வடக்கிலிருந்து தவறாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களும் மீளவும் அங்கு வந்து வாழவேண்டும், நாம் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம். எனது கட்சித் தலைவர் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டுமென்று இந்தியாவிற்கு எழுத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள 470 வீடுகளில், அந்த 52 வீடுகள் கட்டப்பட்டுள்ள தொகுதியில் ஒரு தமிழ்க் குடும்பத்திற்காவது வீடொன்று வழங்கப்படவில்லை. நீங்கள் இதை இங்கு செய்துகொண்டு, இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறும் தன்மையையும் ஊக்குவிக்க ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக முறையிடுகிறீர்கள்.
மதிப்பிற்குரிய அமைச்சர் அந்தக் கேள்வியைக் கேட்டார்….அவர் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை மோசமாகக் குறைகூறினார். அவருடைய சகபாடி ஜெனீவாவில் இதையே செய்தார். அவர் மிகவும் ஆவேசமாக ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரைத் தாக்கிப் பேசியபோது குறைந்த பட்சம் ஒரு நாடு அச்சபையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
பெருந்தோட்டக் கைத்தொழிற்துறை அமைச்சர் மிகவும் ஆவேசப்பட்டார். பெருந்தோட்டக் கைத்தொழிற்துறை அமைச்சர் ஜெனீவாவிற்குப் போயிருக்கிறார், ஆனால் வெளிநாட்டமைச்சர் இங்கிருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் சற்று நிதானமாக இருக்கவேண்டும். அவர் தனதுரையின்போது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை “நவநீதன் பிள்ளை” என்று அடிக்கடி குறிப்பிட்டார்.
அவர் “நவநீதன் பிள்ளை” அல்ல. ஒருவரின் பெயரை உச்சரிக்கும்போது சரியாக உச்சரித்தல் வேண்டுமென்பது ஒரு அடிப்படைப் பண்பு. அவ்வாறுதான் நீங்கள் ஒருவரை மதிக்க வேண்டும். அவர் பெயர் நவநீதம்பிள்ளை, “நவநீதன் பிள்ளை” அல்ல.
அவர் தேவைக்கேற்ப இலக்குகளை மாற்றியமைப்பதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தேவைக்கேற்ப அவர் இலக்குகளை மாற்றியமைப்பதாக குற்றஞ்சாட்டியிருப்பதோடு, அவர் தனதுரையின்போது, யுத்தம் முடிவடைந்து ஏழு நாட்களுக்குள் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் சர்வதேச விசாரணையொன்றைக் கோரியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அவர் எவ்வாறு இலக்குகளை மாற்றுகிறார்? 2009 மே 26 அன்று அவர் சர்வதேச விசாரணையொன்றைக் கோரியிருந்தார். 2013 மார்ச் மாதமும் அவர் அதே சர்வதேச விசாரணையொன்றையே கோரியிருக்கிறார். அப்படியாயின் அவர் இலக்குகளை எங்கே இலக்குகளை மாற்றியமைக்கிறார்?
2009 மே 26 அன்றே அவர் சர்வதேச விசாரணையொன்றைக் கோரியிருந்தார் என்றால் அமைச்சர் இங்கே முன்வைக்க முயலும் குற்றச்சாட்டு என்ன? மேன்மை தங்கிய ஜனாதிபதியே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன், சர்வதேச சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யப்படும் என உறுதியளித்து கூட்டு அறிக்கையொன்றில் கொழும்பில் கைச்சாத்திட்டிருந்தார். ஆகவே உங்கள் ஜனாதிபதியே இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
‘சர்வதேசம்’ என்ற சொல் மிகவும் மோசமான எதிர்ப்புக்களைச் சந்தித்து வருவதால் சர்வதேச விசாரணைகள் என்பது குறித்து நான் சில கருத்துக்களை இங்கு கூற விரும்புகிறேன்.
போரில் ஈடுபட்ட இரு சாராருக்கும் எதிராக நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையது இலங்கை அரசாங்கம். இந்தக் குற்றச்சாட்டப்பட்டவர்களில் ஒருவரைக் கொண்டு இந்த விசாரணையை நடாத்த முடியுமா? அது எப்போதாவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்குமா? எந்த விசாரணையும் சுயாதீனமானதாக இருத்தல் வேண்டும், இதை யாரும் மறுக்க முடியாது. எந்த விசாரணையும் சுயாதீனமானதாக இருத்தல் வேண்டும். இந்தத் தருணத்தில் எந்தவொரு விசாரணையும் சுயாதீனமானதாக இருக்கவேண்டுமாயின் அது நிச்சயமாக சர்வதேச விசாரணையாக ஒன்றாகத்தான் இருக்க முடியும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒரு சாரார் இலங்கை அரசாங்கமாக இருக்கும் போது எவ்வாறு உள்நாட்டு விசாரணை ஒன்றை நடாத்துவது? இதனை இந்த நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதியே கூட்டறிக்கையொன்றில் 2009 மே 26 அன்று கைச்சாத்திட்டதன் மூலம் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இந்த தருணத்தில் எந்தவொரு விசாரணையும் சுயாதீனமானதாக இருக்க வேண்டுமாயின் அது சர்வதேச விசாரணையொன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
அவர் மிரட்டுவதைப் பற்றிக் பேசுகிறார், நாடுகள் மிரட்டப்படுவதைப் பற்றிக் பேசுகிறார். நாட்டுக்குள்ளேயே யார் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்? இந்த நாட்டுக்குள்ளேயே யார் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்? ஒரேயொரு நாள் யாழ்ப்பாணத்திலிருந்த மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் தனது அனுபவங்களை நினைவுகூர்ந்தார். இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மக்கள் அங்கு கொடுமைப்படுத்தப் படுகின்றனர். அங்கு ஒரு கூட்டம் வைக்க முடியாது. முஸ்லிம் பெண்கள் தமது கலாச்சார உடையில் இந்த நாட்டில் நடமாட முடியாது.
மதிப்பிற்குரிய அமைச்சரே, மன்னம்பிட்டியவில் அபயா எனும் இஸ்லாமிய உடையில் வீதியால் சென்று கொண்டிருந்த இளம் யுவதி தாக்கப்பட்டுள்ளார். அவர் இது குறித்து பொலன்னறுவ பொலிஸில் புகார் செய்துள்ளார். மத்தள விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட அன்றைய தினம் இரவு வீரகெட்டியவில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றை ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. துரதிஷ்டவசமாக சமய தலைவர்களான பெளத்த பிக்குகளால் தலைமைதாங்கப்பட்ட குழுவொன்றே அந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.
அதே நேரம் இதே மதகுருமார்கள், இரண்டு மரியாதைக்குரிய சக பௌத்த பிக்குகள் தமிழ் நாட்டில் தாக்கப்பட்டதற்காக இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நாங்கள் அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கிறோம். நாங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. தமிழ் நாட்டில் புத்தபிக்குகள் எவரும் தாக்கப்படக் கூடாது.
ஆனால், மற்றைய நாடுகளில் இடம்பெறுவனவற்றைப் பற்றிக் கதைக்கும் முன், தங்கள் நாட்டில் வீரகெட்டியவில் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதைப் பற்றி அவர்கள் ஏன் முறையிடவில்லை? முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்டதற்கு அவர்கள் ஏன் வீதியில் ஊர்வலம் செல்லவில்லை? நீங்கள் அதற்கெல்லாம் ஊர்வலம் போவதில்லை, மாறாக மற்றைய நாடுகளைப் பற்றி மட்டும் குறைகூறுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்களைப் பாருங்கள், உள்ளூரில் இடம்பெறுவதைப் பாருங்கள். உங்கள் இல்லத்தை சீர் செய்யுங்கள். உங்கள் இல்லத்தை நீங்கள் சீர்செய்தால் உங்களில் யாரும் குற்றங்காண மாட்டார்கள்.
இவை யாவற்றையும் உள்ளூரில் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினத்தை நீங்கள் அழுக்கைப் போல் இந்த நாட்டில் நடத்துகிறீர்கள். அதன் பின் நெஞ்சை அழுத்ததுடன் சர்வதேச தலையீடு ஒரு கொடுமை என்று கூறுகிறீர்கள். உங்கள் மருந்தின் சுவை கொஞ்சம் உங்கள் நாக்கில் பட்டால் உங்களுக்கு உறைக்கிறது ஆனால் இந்த நாட்டில் நாங்கள் ஒரு அழுக்கைப் போல் நடாத்தப்படுவது எப்படி என நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.
இலக்கு எல்லைகள் மாற்றப்படுவதைப் பற்றி நீங்கள் கதைக்கிறீர்கள். உங்கள் அரசாங்கம் என்ன செய்தது? எங்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கினார்கள். நீங்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தீர்கள். 2011 ஜனவரி 10, 2011 பெப்ரவரி 3, 2011 மார்ச் 18 ஆகிய மூன்று தடவையும் நாங்கள் பரிந்துரைகளை வழங்கினோம். நீங்கள் தான் அரசாங்கம், ஆனால் உங்களுக்கு சொல்வதற்க்கு ஒன்றும் இருக்கவில்லை. உங்களுக்கு கொடுப்பதற்குப் பரிந்துரைகளும் இல்லை. எங்கள் பரிந்துரைகளுக்குப் பதில் கூறவும் உங்களால் முடியவில்லை. ஐந்து மாதங்களாக 7 கூட்டங்களுக்கு வந்து வெறுமனே உட்காந்திருந்தீர்கள்.
(குறுக்கீடு)
மீள்குடியேற்றம் எனும் விடயத்தில் நீங்கள் என்ன முன்னேற்றத்தை அடைந்திருக்கிறீர்கள்? நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளின் பந்தி 9.134 குறிப்பாக “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக குடிசன நிர்வாகம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாப்பு படையினர் அகற்றப்பட வேண்டும்” என்று கூறுகிறது.
ஆனால் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. பாதுகாப்பு படையினர் இன்னமும் சிவில் நிர்வாகங்களில் இருந்து வெளியேற்றப்படவுமில்லை, மக்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படவுமில்லை.
இதனால் மக்கள் அங்கு மீள்குடியேற முடியாத நிலை தொடர்கிறது ஏனெனில் அவர்கள் மக்கள் காணிகளை இன்னமும் தம்வசம் வைத்திருக்கின்றனர். மதிப்பிற்குரிய மீள்குடியேற்ற அமைச்சர் மிகவும் தெளிவாகப் பேசினார். கெப்பாப்பிலவைப் பற்றி கதைக்குக் போது அவர் கூறினார், “எனக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் மீள்குடியமர்த்தப்படும் சமயம் வரும்போது நான் அதைச் செய்வேன்.
ஆனால் தற்போது அவர்கள் தற்காலிக இடங்களில் தங்கியிருக்கிறார்கள்”. அவர்கள் ஏன் தற்காலிக இடங்களில் தங்கியிருக்கிறார்கள்? காரணம் கெப்பாப்பிலவில் மிகப் பெரிய இராணுவ முகாம் ஒன்று கட்டப்பட்டுள்ளது, அதனால் மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதியில்லை.
முள்ளிக்குளத்தில் என்ன நடந்தது? மதிப்பிற்குரிய மன்னார் மாவட்ட அமைச்சருக்கு தெரிந்திருக்கும் முள்ளிக்குளத்தில் என்ன நடந்தது என்று. வலிகாமம் வடக்கில் என்ன நடந்தது? சம்பூரில் என்ன நடந்தது? ஏன் மக்கள் அங்கே இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் உள்ளனர்?
மேன்மைதங்கிய ஜனாதிபதி 2009, மே மாதம் 26ம் திகதி இணைந்த அரச அறிவிப்பு ஒன்றில் கைச்சாத்திட்ட போது அவர் இரண்டாவது உத்தரவாதமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் அவ்வாண்டு முடிவுக்குள் தத்தம் இடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று கூறினார். அந்த வருடம் 2009. இப்போது 2013 ஆண்டு இந்த சபைக்கு வந்து மீள்குடியேற்ற அதிகார சபையை இன்னமும் மூன்று ஆண்டுகள் நீடிக்க வேண்டுமென்று கேட்கிறீர்கள்.
மேன்மைதங்கிய ஜனாதிபதியின் காலக்கெடு முடிந்து நான்கு வருடங்களுக்கு பின்னரும்கூட நீங்கள் மீள்குடியேற்ற அதிகார சபைக்கு மேலும் மூன்று வருடங்கள் கேட்கிறீர்கள். மீள்குடியேற்ற அதிகார சபை என்ன செய்துகொண்டிருக்கிறது? ஒன்றுமேயில்லை. ஜனாதிபதியின் சிறப்புச் செயலணிதான் எல்லாவற்றையும் அங்கே கட்டுப்படுத்துகிறது. அங்கு ஒரு மீள்குடியேற்ற அதிகாரசபையும் செயற்படவில்லை. இந்த நிலையில், ஏன் மீள்குடியேற்ற அதிகார சபையை மேலும் மூன்று வருட காலத்திற்கு நீடிக்க வேண்டுமென்று மதிப்பிற்குரிய மீள்குடியேற்ற விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை
மீள்குடியேற்றம் இன்னமும் பூர்தியடையவில்லை. 200,000 மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை என அவரே ஏற்றுக்கொள்கிறார். மீள்குடியமர்த்தப்பட்டதாகச் கூறப்படும் சிலரும் அங்கே கட்டப்பட்ட பாதையையும் பாலங்களையும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். தமது உறையுள், ஜீவனோபாயம் என்பனவற்றுக்கு முன்னுரிமை கொடுக்காது, இதுபோன்ற வேறு வேலைகளைச் செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் நிறைய உள்ளது என்பதை அவர்கள் நன்கே தெரிந்துகொண்டிருக்கின்றனர்.
நன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையத்தளம் (WWW.TNAINFO.COM)

Geen opmerkingen:

Een reactie posten