[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 11:34.45 AM GMT ]
திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது.
பொலிஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின.
இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் பொலிஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாணவர் கூட்டமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட குழுவை சேர்ந்த சத்தியகுமாரன், பெருமாள் ஆகியோர்,
திருச்சியில் உள்ள சிங்களவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் இழுத்துப் பூட்டி இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் காலி செய்வோம்.
இதுவரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த நாங்கள் இனி மாற்று வழியில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்" என்று எச்சரித்தார்கள்.
மிஹின் லங்கா அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டது தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்துப் பேரை கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறது கண்டோன்மென்ட் பொலிஸ். இதனால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது
சிங்களத்திற்கு ஆதரவான சுப்பிரமணிய சாமியை தமிழகத்திலிருந்து அடித்து துரத்த வேண்டும்: திருச்சி வேலுச்சாமி
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 11:07.06 AM GMT ]
நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி
கேள்வி: ஐ.பி.எல்.போட்டிகளில் சிங்கள வீரர்களை அனுமதிக்க கூடாது என்கிற ஜெயலலிதா அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்கிறாரே சுப்பிரமணிய சாமி?
பதில்: சிங்களவர்களுக்கு வால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்பவர் சுப்பிரமணிய சாமி. புலிகள்... புலிகள்... என்று சொல்லி 91-ல் கருணாநிதி ஆட்சியை கலைக்க வைத்தவர் இவர். அப்போது ஜெயலலிதாவிற்காக அதைச் செய்தார். இப்போ அந்த ஜெயலலிதா அரசையே ராஜபக்சவிற்காக கலைக்கச் சொல்கிறார். ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்றால் ஜெயலலிதா என்பார் சுப்பிரமணிய சாமி. ஜெயலலிதாவா? ராஜபக்சவா? யார் முக்கியம்? என்று கேள்வி எழுந்தால் ராஜபக்ச பக்கமே கை தூக்குவார் இந்த அரசியல் தரகர்.
அப்படியிருக்க, சிங்களத்துக்கு எதிராக ஜெயலலிதா நடந்துகொண்டால் அண்ணன் சுப்பிரமணிய சாமி சும்ம இருப்பாரா?. அதனால்தான் ஒட்டுமொத்த தமிழகமும் சிங்கள வீரர்களை ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்கிற போது ராஜபக்சவுக்காக வக்காளத்து வாங்குகிறார்.
கேள்வி: தமிழீழம் பேசுவோர்கள் பொறுக்கிகள் என்கிறார் சுப்பிரமணிய சாமி. ஆனால், இதற்காக எந்த உணர்வாளர்களும் பொங்கி எழவில்லை?
பதில்: தமிழகத்தில் இருப்பவர்கள் அரசியல் கோமாளிகள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா சொன்னதற்கு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் துள்ளிக் குதித்தார்களே? இப்போ நம்மைப் பார்த்து பொறுக்கிகள் என்று சொல்கிற போது அந்த வீரமும், வேகமும், கோபமும் எங்கே போனது?
இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளை தாக்குகிறீர்கள்... சரி. காரணம், ஈழத்தமிழினத்தை அழித்த சிங்களவருக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கோபம், உணர்வு. இந்த கோபமும் உணர்வும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக திருத்தம் செய்து அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற அழுத்தம் தமிழகத்தில் வலுத்த நிலையில், கொழும்பு சென்று ராஜபக்சவை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பிய சுப்பிரமணிய சாமி, இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப் போக வைப்பேன் என்றும் இதற்காக சர்வதேச அளவில் லாபி செய்துகொண்டிருக்கிறேன் என்றும் அந்த லாபியை உருவாக்கும் முயற்சியை என்னிடம் ராஜபக்ச கொடுத்திருக்கிறார் என்றும் பகிரங்கமாக சொன்ன போது ஏன் வரவில்லை?
சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய நிலையில், சிங்களத்துக்கு பகிரங்க ஆதரவு தரும் சுப்பிரமணிய சாமியின் சட்டையைப் பிடித்து நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டாமா? அட்லீஸ்ட்... ஒரு எதிர்ப்புணர்வைக் கூட காட்டவில்லையே?
அப்போ, நமது போராட்ட உணர்வுகள் யாருக்கு எதிராக? முதலில் சிங்கள பாசத்தோடு அலைந்துகொண்டிருக்கும் துரோகிகளை அடக்காவிட்டால் நமது போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என்பதை உணர்வாளர்கள் புரிந்து கொள்வது அவசியம். தமிழீழ தாயகத்திற்காக நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து சக்திகளும் ஒரே சிந்தனையில் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழீழ கோரிக்கைக்காக எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திப்பது எவ்வளவு அவசியமாக இருக்கிறதோ அதே அவசியமும் ஆவேசமும், தமிழினத்திற்கு எதிராக சிங்களத்திற்கு ஆதரவாக செயல்படும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களை நாடுகடத்த வேண்டும் என்கிற கோரிக்கையிலும் இருக்க வேண்டும். அவர் ஒரு அரசியல் கோமாளி, அவருக்கு எதிராக போராடுவது வீண் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அந்த ஒற்றைக் கோமாளி சர்வதேச அளவில் நம்மை காயடிக்கிறாரே? நம்மால் என்ன பண்ண முடிந்தது?
கண்ணுக்குத் தெரியும் துரோகியை விட கண்ணுக்குத் தெரியாத துரோகி ரொம்ப ஆபத்தானவன் என்பார்கள். கண்ணுக்குத் தெரிகிற சுப்பிரமணிய சாமியே பயங்கரமான ஆபத்தானவராக இருக்கிற போது அவருக்குப் பின்னால் மறைந்திருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஸோ... தமிழீழத்திற்காக போராடுபவர்கள் அதற்கு இணையாக சுப்பிரமணிய சாமியை நாடு கடத்த வேண்டும் என்றும் போராட வேண்டும். கிராமத்தில் திரியும் கோயில் மாடு மாதிரி சிங்களத்திற்கு ஆதரவாக திரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்திலிருந்து அடித்து துரத்துவது தமிழர்களின் கடமை என நான் நினைக்கிறேன்.
கேள்வி: இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்களவர்கள் இந்தியா வம்சாவளியினர். 12 சதவீதம் உள்ள தமிழர்கள் கிடையாது. அதனால் தமிழர்களுக்காக கவலைப்படுவதை விட்டுவிட்டு சிங்களத்தின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா அக்கறை கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம்?
பதில்: இது இலங்கை தூதரின் கருத்தல்ல. இதன் பின்னணியில் இருப்பது சுப்பிரமணிய சாமிதான். குரல் மட்டும்தான் தூதருக்குரியது. கருத்தும் கானமும் சுப்பிரமணிய சாமியினுடையது. இவருக்கும் இலங்கை தூதருக்கும் நல்ல நட்பு உண்டு.
சிங்களத்திற்கு ஆதரவாக இந்தியாவில் கருத்து பரப்பும் விவகாரங்களில் சுப்பிரமணிய சாமியோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஒரு ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் இலங்கை தூதருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. காரியவசம் மட்டுமல்ல, இலங்கை தூதராக யார் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு இந்த இன்ஸ்ட்ரக்ஷன் பொருந்தும்.
இலங்கை தூதர் வேறு, சுப்பிரமணிய சாமி வேறு என்று நினைக்கக்கூடாது. அதனால் அந்த கருத்தின் அடிப்படையிலான சிந்தனை சுப்பிரமணிய சாமியால் உருவாக்கப்பட்டவை என்றார் அவர்.
தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடாக்கி இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம்!- மனோ கணேசன் கோரிக்கை
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 10:07.12 AM GMT ]
இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார்.
விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள்.
போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.
இந்தியா ஒன்றாக இருப்பது ஒன்றுதான் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற ஒரே பாதுகாப்பு. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த பெரும் உண்மையை உங்களுக்கு விளக்கி சொல்லுகிறதா என எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் சொல்கிறேன்.
இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு நடந்து கொள்ளுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்ற போது தமிழ், சிங்கள மொழிகளில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் சிங்கள பெளத்த அமைப்புகளை குறிப்பிட்டு மேலும் கூறியதாவது,
இந்தியாவில் இன்று மாணவர் போராட்டம் உச்சநிலை அடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் சட்டபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நேற்று அங்கு நடிகர்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள்.
இதற்கு பதிலாக சிலர் இலங்கைக்கு தமிழ் திரைப்படங்களை கொண்டு வரக்கூடாது என சொல்கிறார்கள். இலங்கை ஒரு பெரிய திரைப்பட சந்தை இல்லை. இதனால் இங்கு தமிழ்நாட்டு திரைப்படம் வராதது பற்றி எல்லாம் அவர்கள் கணக்கிலும் எடுக்க மாட்டார்கள்.
இந்தியாவில் இருந்து எந்த பொருளும் கொண்டு வர விட மாட்டோம் என இன்னும் சிலர் சொல்கிறார்கள். அங்கிருந்து எதுவும் வராவிட்டால் அது நமக்குத்தான் பெரும் கஷ்டம். இந்தியாவில் இருந்து எதுவும் வேண்டாம் என்றால் ஏன் கெளதம புத்தரை மாத்திரம் இங்கு வைத்துள்ளீர்கள்? அவரை திருப்பி அனுப்பி விடலாமே.
இந்தியாவையும், தமிழ் நாட்டையும் கரித்துகொட்டி, சாபம் இட்டு, ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் போராடும் மாணவர்களையும் கண்டபடி திட்டி தீர்த்து அங்கு தமிழ் இன உணர்வை கொழுந்து விட்டு எரிய செய்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டை தனியொரு நாடு ஆக்கி விடாதீர்கள்.
எண்பது மில்லியன் தமிழர் வாழும் தமிழ்நாடு தனிநாடு ஆகும் பட்சத்தில் அது இலங்கைக்கு பெரும் ஆபத்தில் முடியும். தனித்தமிழ்நாட்டின் முதல் நடவடிக்கை இலங்கைக்கு எதிராகத்தான் முடியும். இதை நான் விரும்பவில்லை. இரு தரப்பிலும் வாழும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் சிக்கி தவிக்க நான் விரும்பவில்லை.
ஆனால் இந்த உண்மையை, இந்தியா துண்டு துண்டாக உடைத்து போக வேண்டும் என பகிரங்கமாக பேசும் சிங்கள தீவிரவாதிகள் உணர வேண்டும். இவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள்.
இங்கே ஜெயலலிதாவை திட்டுகின்றவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழகம் சென்ற பிக்குமார்களை தாக்கியவர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. ஆனால், இங்கே பெபிலியானவில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கி, ஒருவரின் மண்டையை உடைத்த காடையர்களை கைது செய்து மன்னிப்பு வழங்கி விடுவித்து விட்டார்கள்.
கிளிநொச்சியில் சனிக்கிழமை நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் மக்கள் பிடித்து கொடுத்த காடையர்களை போலிஸ் உடனடியாக விடுவித்துவிட்டது. அதில் ஒருவர் பொலிஸ் புலனாய்வுதுறை சிஐடி அதிகாரி. இதேபோல்தான் தெல்லிப்பளையிலும் மக்கள் பிடித்து கொடுத்த குற்றவாளிகளை போலிஸ் விடுவித்தது.
இன்று காலை கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு நால்வர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது முதன் முறை அல்ல. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர் எவரும் எப்போதும் கண்டு பிடிக்கப்படுவது இல்லை.
இதுதான் இலங்கையின் கோத்தபாய ராஜபக்ச பொலிஸ். ஆனால், இந்த கோத்தபாய ராஜபக்சவின் பொலிசைவிட ஜெயலலிதாவின் தமிழ்நாடு பொலிஸ் நேர்மையாக தனது கடமையை செய்துள்ளது இன்று நிரூபணமாகியுள்ளது.
இந்திய மாணவர்கள் இலங்கை தீவில் தனி தமிழீழத்தையும், அதற்கான பொது வாக்கெடுப்பையும் கோரி போராடுகிறார்கள். அதை நினைந்து சந்தோசப்படுங்கள். ஏனென்றால் அதனால்தான் இந்திய மத்திய அரசு இந்த கோரிக்கைகளை தனது தேச நலனுக்கு எதிரான தீவிரவாத கோரிக்கைகள் என்று சொல்லி நிராகரித்துள்ளது. அதனால் இன்று இலங்கை நாடு தப்பி பிழைத்துள்ளது.
தமிழீழம், பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை விட்டுவிட்டு, அந்த மாணவர்கள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்ய கோரி போராடினார்கள் என்றால் இந்திய மத்திய அரசு மிகப்பெரும் நெருக்கடியில் விழும். 13ம் திருத்தமும், மாகாணசபையும், முக்கியமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்த சரத்துகளாகும்.
இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த அமுலாக்கல் கோரிக்கையை இந்தியாவின் மத்திய அரசு இன்று நிராகரிக்க முடியாது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் நிராகரிக்க முடியாது.போராடும் தமிழக மாணவர்களுக்கு நான் இந்த உண்மையை எடுத்து கூறுகிறேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யுமாறு உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக போராடுங்கள் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். எனவே நிலைமை மோசமாகும் முன், இந்த போராட்டங்கள் அனைத்துக்கும் மூல காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளித்து தீர்வு காணுங்கள்.
தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன்.
Geen opmerkingen:
Een reactie posten