தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு உயர்ஸ்தானிகர் விடுக்கும் அறிவுறுத்தல்!


உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட அராஜகத் தாக்குதல்! மாவை கண்டன அறிக்கை
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 11:45.36 AM GMT ]
உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட அராஜகத் தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- 
இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய உணர்வினை எப்போதும் பிரதிபலிக்கும் ஊடகங்களுள் ஒன்றான “உதயன்” மீது மீண்டும் ஒருமுறை வன்முறைக் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
யாழ்.- கண்டி பிரதான வீதியில் கிளிநொச்சியில் அமைந்துள்ள “உதயன்” பிராந்திய அலுவலகத்தின் மீது விடிகாலை 5 மணியளவில் பொல்லுகள், தடிகளுடன் வந்த குண்டர் குழு ஒன்று மிகமோசமான அராஜகத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றது. “உதயன்” கிளை முகாமையாளர் உட்பட ஐவர் படுகாயமடைந்திருக்கின்றனர். வாகனங்கள், உடைமைகள் மோசமாகச் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் ஊடகங்களுக்கு எதிரான - குறிப்பாக ~உதயன்| போன்ற தமிழர்களின் உணர்வெழுச்சியை வெளிப்படுத்துகின்ற ஊடகங்களுக்கு எதிரான - தாக்குதல்கள் வரன்முறையற்று, எல்லை மீறிச் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். மோசமாகத் தாக்கப்பட்டு காயப்படுத்தப்படுகின்றார்கள். உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் அச்சுறுத்தப்படும் அபாய நிலைமை நீடிக்கின்றது. ஊடகங்கள் மீதான நேரடித் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.
ஆனால், இவ்வாறு தமிழ் ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் மட்டும் சட்டத்தின் முன் எப்போதுமே கொண்டு வரப்படுவதேயில்லை. அதை நோக்கும் போது இரண்டு சந்தேகங்கள் வெளிப்படையாக எமக்கு ஏற்படுகின்றன.
ஒன்று - இத்தகைய தாக்குதல்களை நடத்தும் குண்டர் குழுக்களுக்கு சட்ட விலக்களிப்பு அதிகாரத் தரப்பினால் எப்போதுமே வழங்கப்பட்டு வருகின்றது. மற்றது - அவ்வாறான தாக்குதல்கள் அதிகாரத் தரப்பின் ஆசீர்வாதத்துடனேயே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஊடகங்கள் மீது - குறிப்பாக “உதயன்” மீது - தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் இலங்கைத் தமிழர்களின் சுதந்திரமான கருத்துவெளிப்பாட்டுக்கு அடிக்கப்படும் சாவு மணியாகவே அமைந்திருப்பது வேதனைக்குரியது.
யுத்தம் முடிவுற்று, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு பற்றி சர்வதேசமும் மக்களும் அதிகம் வலியுறுத்தும் இந்தச் சமயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை மேலும் நசித்து அடக்கும் விதத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் மேலும் அடக்குமுறைத் தீவிரத்தை நோக்கியே இந்த இலங்கைத் தீவு செல்கின்றது என்பதையே சுட்டி நிற்கின்றன. இங்கு நல்லிணக்கமும் புரிந்துணர்வும் வெறும் வாய்ப்பேச்சுத்தான் என்பதையே இவைகாட்டுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது கருத்துக்களை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வெளிப்படுத்தி விடாமல் அடக்குமுறை மூலம் அவர்களது கருத்து வெளிப்பாட்டு ஊடகங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு நல்லிணக்கம் குறித்துப் பேசுவது அர்த்தமற்றது.
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவது குறித்து சர்வதேச சமூகம் உரத்துக் குரல் எழுப்பி வரும் சூழலிலும் இத்தகைய அராஜகங்கள் இங்கு கட்டுமட்டில்லாமல் தொடர அனுமதிக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் ஆட்சி எத்தகைய சர்வாதிகார நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு நல்ல சான்று.
ஊடகங்கள் மீதான அராஜகங்கள் புரிவோரை பேணிப் பாதுகாத்து, சட்டவிலக்களிப்பு வழங்குவதை விடுத்து இனிமேலாவது அவர்களைக் கைதுசெய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க இந்த நாட்டின் ஜனாதிபதி முன்வரவேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சர்வதேசமும் இத்தகைய ஊடக அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து வெறுமனே கண்துடைப்பு கண்டன அறிக்கைகளை விடுப்பதை விடுத்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், இத்தகைய அராஜகங்கள் புரிவோரை உரிய முறையில் தண்டிப்பதற்கான அழுத்தங்களை பயனுள்ள வழியில் மேற்கொள்ளவும் முன்வரவேண்டும் எனக் கோருகிறோம்.
அத்துடன் உதயன் நிறுவனம் உள்ளிட்ட ஊடகத்துறைக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசுத் தலைமை குறி;ப்பிட்டுள்ளது. அது நடக்குமா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் அத்தேர்தல் சுயாதீனமாக, சுதந்திரமாக நடத்தப்பட மாட்டாது என்ற எங்களது அச்சத்துக்கு - சந்தேகத்துக்கு - கட்டியம் கூறும் வகையிலேயே ஊடகங்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்ற என நாம் கருதுகிறோம்.
அதுவும் கடந்த வாரம் கிளிநொச்சியில் நடந்த எமது கட்சிக் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட அராஜகத் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை தெளிவான - விவரமான - படங்களுடன் உதயன் வெளியிட்டு சூத்திரதாரிகளை வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்திய பின்னணியிலேயே அந்தப் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.
அரசமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்ற ஒன்று கூடும் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதை நிரூபிக்கும் சம்பவங்களே இவை.
இத்தகைய தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேசமயம், இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் தமிழர்களின் உணர்வெழுச்சியை அடக்கிவிடமுடியாது என்பதையும் சம்பந்தப்பட் டோருக்கும் சுட்டிக்காட்டவும் விழைகின்றோம். - என்று உள்ளது.


இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு உயர்ஸ்தானிகர் விடுக்கும் அறிவுறுத்தல்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 11:51.09 AM GMT ]
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு வரும் போது, அந்த நாடும் மதம் மற்றும் கலாசார பண்பாடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று, பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை வந்திருந்த பிரித்தானியர் ஒருவர் புத்தரின் உருவத்தை பச்சை குத்தி இருந்தமையானது, பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்தே ஜோன் ரன்கின் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏனைய நாடுகளின் மத விழுமியங்கள் தொடர்பில் அறிந்து வைத்திருப்பதன் மூலம், அந்தந்த நாடுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் பிரயோகித்து அடிமைப்படுத்த விடமாட்டோம்: பா.உ சி.சிறீதரன்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 01:27.02 PM GMT ]
நாங்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடாது உணர்வுள்ள உண்மையான தமிழர்களாகவே வாழ வேண்டும் என்று கிளிநொச்சி மணியங்குளத்தில் மக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஸ்கந்தபுரம் மணியங்குளம், ஐயனார் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பெற்றோர்கள், மாணவர்கள், அப்பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வளப்பற்றாக் குறைகள், வசதி வாய்ப்புக்கள் அற்ற நிலையில் பல்வேறுபட்ட நெருக்கடிக்குள் வாழ்கிறோம். இந்நிலையினைப் பயன்படுத்தி சிலர் அற்பசொற்ப சலுகைகளைக் காட்டி எமது மக்களை விலை பேச நினைக்கின்றார்கள்.
ஆனாலும் எமது மக்கள் மிகவும் தெளிவாகவும் உணர்வோடும் உறுதியாகவேதான் இருக்கின்றார்கள். இந்தச் சிறார்களே நாளைய தலைவர்களாக வளர்ந்து வரவுள்ளார்கள். இவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எமது எல்லோருடைய கைகளிலேயும் தங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த நாட்டிலே நாமும் மனிதர்களாக எமக்குரிய உரிமைகள் அனைத்தையும் பெற்றே வாழ விரும்புகின்றோம். நாங்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடாது உணர்வுள்ள உண்மையான தமிழர்களாகவே வாழ வேண்டும்.
எம்மீது எவரும் அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் பிரயோகித்து அடிமைப்படுத்த முயலக்கூடாது. அதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.
மேற்படி நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களான சு.தயாபரன், கே. டெனிஸ்ராஜன் மற்றும் அக்கராயன பிரதேச அமைப்பாளர் கு. சர்வானந்தா ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.




உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தின் மீதான தாக்குதலுக்கு த.தே.மக்கள் முன்னணி கண்டனம்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 02:44.12 PM GMT ]
உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் கண்மூடித்தனமாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் இன்று அதிகாலை 5.00 மணியளவில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் விநியோகத்திற்காக பத்திரிகையினை எடுத்துச் சென்றிருந்த பணியாளர்கள் இருவரும், அலுவலகத்தில் கடமையில் இருந்த முகாமையாளரும் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதுடன், வாகனம் மற்றும் அலுவலகத்திலிருந்த கணணிகள் மற்றும் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதி உச்ச இராணுவ பிரசன்னம் மற்றும் இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகளால் முடக்கப்பட்டுள்ள கிளிநொச்சி போன்றதொரு இடத்தில் சிறீலங்கா அரசினது ஆசீர்வாதம் இல்லாது இவ்வாறான தாக்குதல் ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. அந்த வகையில் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இராணுவத்தினருடைய புலனாய்வுப் பிரிவினரே இருந்திருப்பார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியாதுள்ளது.
இந்த சம்பவம் என்பது சர்வதேச சமூகத்தினுடைய கவனம் இலங்கையில் விமர்சன ரீதியாக கூடுதலாக செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடைபெற்றுள்ளது. இது சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிநிரலை முன்nகொண்டு செல்வதில் எந்தவொரு அழுத்தத்திற்கும் சிறீலங்கா அரசு அடிபணியப் போவதில்லை என்பதனை நிரூபித்துக் காட்டுகின்றது.
தொடர்ச்சியாக தமிழ் இனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான தாக்குதல்கள் அனைத்தும், இலங்கைத் தீவில் தமிழர் தாயகப் பிரதேசம் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்தினுள் இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசிய இருப்பு என்பது எவ்வளவு பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்பதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மிக மோசமான பலவீனங்களை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இந்தப் பின்னணியில் இவ்வகையான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு கட்டங்களிலும் இவற்றை வெறுமனே கண்டிப்பதுடன் நின்றுவிடாது, இவற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவாக கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும்.
பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தரப்பினருக்கே தெரியும், அவ்வாறான பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது. இதுவே இயற்கை நியதியாகும்.
அந்த வகையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஒட்டுமொத்த தமிழ் தேசத்தின் மீதான அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு நிலைமாற்று நிர்வாகம் ஒன்றினை உருவாக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றது. இந்த உண்மையை அனைத்துத் தமிழ்த் தரப்புக்களும் உணர்ந்து வலியுறுத்த வேண்டுமெனக் கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


உண்மைகள் வெளிவருவதை தடுப்பதற்கே உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!- பா.அரியநேத்திரன்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 03:34.46 PM GMT ]
உண்மைகள் வெளிவருவதைத் தடுக்கவே கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர்ஒளி பத்திரிகையின் காரியாலயம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர்ஒளி பத்திரிகை காரியாலயம் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். தொடர்ச்சியாக பல தடவைகள் உதயன், சுடர்ஒளி நிறுவனத்தின் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் அதனை தடுக்காததோடு குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் இல்லை.
இதன் மூலம் இலங்கை அரசாங்கமே மேற்படி பத்திரிகை நிறுவனத்தின் மீதான தாக்குதலை ஊக்குவிக்கின்றது.
இன்று இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய தடவைகள் தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனம் என்றால் அது உதயன், சுடர்ஒளி நிறுவனமே ஆகும்.
கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர்ஒளி பத்திரிகை காரியாலயம் மீதான தாக்குதலானது தமிழ் மக்கள் மீது தொடரும் அடக்குமுறை சம்பந்தமான உண்மை செய்திகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
காலம் காலமாக தமிழர்களின் நியாய பூர்வமான உரிமைக் குரல்களை நசுக்குவதில் சிங்கள ஆட்சியாளர்கள் முன்நின்று செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை கொலை செய்வதன் ஊடாகவும், தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களை கொலை செய்வதன் ஊடாக தமிழர்களை அடக்கியாண்ட அரசாங்கம் இன்று சமாதானம் நிலவுகின்றது என்று கூறிக்கொண்டு, மீண்டும் தமிழ் மக்களின் குரல்களை நசுக்குவதற்காக அரசாங்கத்தை தாங்கிப்பிடிக்கும் கட்சி உறுப்பினர்களையும், இராணுவ புலனாய்வாளர்களையும் ஏவிவிட்டு இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றது.
இலங்கை அரசாங்கமானது இன்று சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், இந்தியாவிற்கு இன்னுமொரு முகத்தையும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வேறொரு முகத்தையும் காட்டிக்கொண்டு தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
என்னைப் பொருத்தமட்டில் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் மீதும், தமிழ் ஊடகங்கள் மீதும் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் தமிழர்கள் தொடர்ந்தும் உரிமைகளை பெறும் வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த தாக்குதல்களுக்கெல்லாம் காலம் ஒருநாள் பதில் சொல்லியேயாகும் என்றார்.


Geen opmerkingen:

Een reactie posten