ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.
இப் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்- நடிகைகளும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது. இதில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, சிம்பு, பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.
மேலும் முன்னணி நடிகைகளும் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது.
மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாலச்சந்திரன் படங்களை ஏந்தியபடி ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து வருகின்றனர். போர்க்குற்றவாளி ராஜபக்சவை கூண்டிலேற்றி தண்டிக்க கோரி வருகின்றனர்.
இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த நடிகர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
விசால்:- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
நாசர்:- இலங்கை தமிழர்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சங்கமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் எப்போதோ அமைந்து இருக்க வேண்டும். இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் கோரிக்கை நிறைவேறாதது வருத்தம் அளிக்கிறது. இந்த எழுச்சி உலகத்தின் காதுகளில் விழும். இனியாவது விடியல் ஏற்படட்டும்.
பிரகாஷ்ராஜ்:- மனிதர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இலங்கையில் நடந்துள்ளது மோசமான செயல்பாடுகள். தமிழ் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை விட்டுவிட வேண்டும். இலங்கை மக்களுக்கு விடியல் ஏற்படட்டும். இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும்.
கோவை சரளா:- இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உரிமைக்காகவே இப்போராட்டம்இ ஈழ தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும்.
பரத்:- இலங்கை தமிழர்கள் நம் உடன்பிறப்புக்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய அரசு தலையிட்டு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten