முல்லைத்தீவு மாவட்ட காணிப் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்: பா.உ சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 03:01.24 PM GMT ]
முள்ளியவளை இரண்டாம் வட்டாரப் பகுதியில் மீளக்குடியேறிய தமிழ் மக்களுடைய வீடுகளுள் நான்கு தற்காலிக கொட்டில் வீடுகள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதலால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த நாசகாரச் செயலை மேற்கொண்டோரை உடனடியாகக் கைது செய்வதுடன் அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த ஆளும் அரசானது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த குழுவினர் அங்குள்ள நான்கு வீடுகளை தீயிட்டு எரித்துள்ளதுடன் சொத்துக்களையும் நாசமாக்கியுள்ளனர். மேலும், ஏனையோரது வீடுகளை எரியூட்ட முற்பட்டபோது மக்கள் விழித்துக்கொண்டதால் நாசகாரர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் காடழிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில்தான் இவ்வளவு அடாவடித்தனங்களும் இடம் பெறுவதானது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட இம்மக்களை, இலங்கையில் இடம் பெயர்வு முகாம்கள் எதுவும் இல்லையென்று சர்வதேசத்திற்குக் காட்டும் நோக்கத்தில், அரசானது அவசர அவசரமாக முல்லைத்தீவில் மீள்குடியேற்றியது.
அவ்வகையில், முள்ளியவளையில் குடியேற்றப்பட்டோருக்குக் கடந்த இரண்டு வருடங்களாக எந்தவோரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாததால் அவர்கள் தாமாகவே, தற்காலிகக் கொட்டில்களை அமைத்துக் குடியிருந்தவேளை இந்தக் காட்டுமிராண்டித்தனமான நாசகாரச்செயல் இடம்பெற்றுள்ளது.
யுத்தம் ஓய்வுக்குவந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளபோதும், காணிப் பிரச்சினையுடன் வாழ்வாதாரம், தற்காலிக வீடு, சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டுமானம் போன்ற பல்வேறுபட்ட குறைபாடுகளோடு இம்மக்கள் வாழும்போது அரசு திட்டமிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை, நாயாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி முதலான இடங்களில் காடுகளை அழித்து அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுக்கின்றது. மறுபுறம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளில் அடாத்தாகச் சிங்கள மக்களைக் குடியேற்றி அவற்றிற்குப் புதிய உறுதிகளும் வழங்கப்பட்டும் வருகின்றன.
இத்தகைய மக்கள் விரோதச் செயல் அரசாலும் குறிப்பிட்ட அமைச்சராலும் மேற்கொள்ளப்படுவதோடு. தாம் இன மத, சாதி பேதமின்றி தமது கடமைகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேறியோரின் தற்காலிகக் கொட்டில்களை எரித்தல், காடழிப்பு, அத்துமீறின குடியேற்றம் முதலான சம்பவங்கள் தமிழ்மக்களுக்கு மரத்தால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்ததுபோல் உள்ளன.
எனவே, அரசும் குறிப்பிட்ட அமைச்சரும் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை உபயோகித்து, இனங்களிடையேயும் மதங்களுக்கிடையிலும் சித்து விளையாட்டுக் காட்டாமல் தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவிகளை சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வைத்த கோத்தபாய ராஜபக்ஷ
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 03:25.14 PM GMT ]
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட இராணுவத்தின் நிகழ்வில் தமிழ் மாணவிகளுக்கு சிங்களத்தில் தேசிய கீதம் கற்பிக்கப்பட்டு இசைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஏற்பாட்டில், கனாவில் வசிக்கும் சிங்களவரான இராணுவ மேஜர் அதிகாரி ஒருவரின் சகோதரர் மற்றும் மூவரின் நிதி உதவியுடன் இராணுவத்தினர் 1500 பாடசாலை மாணவர்களுக்கும் 175 ஆசிரியர்களுக்கும் 20 இற்கும் அதிகமான அதிபர் ஆசிரியர்களுக்கும் சீருடைத் துணி வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாவற்குழி மகாவித்தியாலய மாணவிகளுக்கு சிங்களத்தில் இலங்கையின் தேசிய கீதம் கற்பிக்கப்பட்டு மாணவிகள் சிங்களத்தில் தேசிய கீதம் இசைத்தனர்.
இப்பாடசாலையில் சிங்கள ஆசிரியர் ஒருவரும் இராணுவத்தினரது, ஏற்பாட்டில் கல்வி கற்பித்து வருகின்றார்.
இதேவேளை நாவற்குழியிலேயே சிங்கள மக்கள் வலுக்கட்டாயமாக குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டில் மொழி, மதம், கலாசாரம் போன்றவற்றால் தான் அங்கு ஒருமைப்பாட்டை நிலை நாட்ட முடியும்!- கோத்தபாய ராஜபக்ச
இந்த நாட்டில் மொழி, மதம், கலாசாரம் போன்றவற்றால் தான் அங்கு ஒருமைப்பாட்டை நிலை நாட்ட முடியும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொடிகாமம் வரணிப் பகுதியில் 52 படைப்பிரிவின் ஏற்பாட்டில் தென்மாராட்சி வலயத்திற்குட்பட்ட 24 பாடசாலையைச் சேர்ந்த 1500 மாணவர்களுக்கான சீருடைகளும் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டார்.
இன்று மாலைப் பொழுதை மூன்று விடயத்தில் பெறுமதியான மாலைப் பொழுதாக அமைகின்றது. ஒன்று தென்னிலங்கையில் பிறந்த ஒருவர் வடக்கில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெறுகின்றது. இரண்டாவது எவரது உதவியும் இன்றி வெளிநாட்டில் தான் உழைத்த பணத்தினை இவ்வாறான விடயத்திற்கு பயன்படத்தியது மூன்றாவது தெற்கில் கிடைக்கும் உதவிகள் வடக்கு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்தது போன்ற விடயங்களில் முக்கியம் பெறுகின்றது என்றார்.
தென்னிலங்கையில் பல நிகழ்வுகளை நான் பார்த்திருக்கின்றேன் இன்று இங்கு பாடசாலை மாணவியர்களின் நடனம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றது பல மத வாழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
அதற்கு மேலான பல்வேறு கலாசார விழுமியங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது அத்தனையும் இங்கு அழகானதாகவே இருக்கினறது. இதனை நாங்கள் சரியாக பயன்படுத்தினால் நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்றார்.
இங்கு அதிகளவான மாணவர்கள் இருக்கின்றார்கள் அதனால் ஒரு விடயத்ததை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். வடக்கில் ஒரு விதமான கல்வி முறை தெற்கில் ஒருவிதமான கல்வி முறையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
இங்குள்ள மாணவர்களும் சிறந்த முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்றார். எங்களிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கு கடந்த காலம் ஒரு தடயைகாக இருந்திருக்கின்றது. இப்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனை நாங்கள் சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார். அத்துடன் எமது திறமைகளை வெளிப்படுத்தி நாட்டை சிறந்த ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பமாக கருதி நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten