கிளிநொச்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகம் மீது சிங்கக்கொடி தாங்கிய காடையர்களின் காட்டுமிராண்டித்தனத் தாக்குதல்கள் குறித்து வலி. வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் ச.சஜீவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்.
அமைதி வழியில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண விழையும் தமிழர்களின் நல்லெண்ணத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாத சிங்கள தேசம் மீண்டும் மீண்டும் தமிழர்களை வன்முறைப் பாதைக்கு இழுத்து விட முயற்சிப்பதன் எதிரொலியே கிளிநொச்சி கூட்டமைப்பு அலுவலகம் மீதான கல்லெறித் தாக்குதல் ஆகும்.
காலம் காலமாக தமிழர்கள் மீது சிங்கள தேசம் வன்முறையைப் பிரயோகித்தும் வன்முறையைத் திணித்தும் வந்தது. இந்தத் திணிப்புக்களின் வழி எழுந்த தாங்க முடியாத வலியின் விளைவாகப் பிறந்ததே தமிழர்களின் ஆயுதப் போராட்டம்.
ஆனால் அரசு அதற்கு பயங்கரவாத முத்திரை குத்தி சமாதானத்துக்கான போர் என்ற பெயரில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந் நிலையில் மீண்டும் அறவழியே எம் வழி என போராடி வரும் தமிழ்த் தலைமைகளையும் அவர்கள் பின்னே ஐனநாகப் பாதை மீது அக்கறை கொண்டு அரசியலில் புகுந்துள்ள இளைஞர்களையும் வலிந்து வன்முறைப் பாதைக்குள் மீண்டும் இழுத்து ஒரு வன்முறையைத் தூண்டிவிட அரசும் அரசுக்கு சார்பானவர்களும் இன்று கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தின் மீதும் தமிழ்த் தலைவர்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை கண்டு அச்சப்படும் சிங்கள தேசம் தமிழ்த் தலைவர்களை இல்லாதொழிக்கவும் அவர்கள் மீது அபாண்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தவும் பல கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விட்டும் வன்முறைகளைத் தூண்டி இளைஞர் சக்தியை வலிந்து ஆத்திரப்பட வைத்து அதன் வழி இல்லாதொழிக்கவும் எடுத்து வரும் சகல முயற்சிகளையும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களும் நன்கு அறிவார்கள்.
கிளிநொச்சியில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தில் வெடிமருந்துகளை மீட்டதாக கட்டிய கதையும் அதன் பின்னர் அவரை நாலாம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்தி மிரட்டி பணிய வைக்கவும் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட அந்த தோல்வியைப் பொறுக்க முடியாது கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் புகுந்து கற்களை வீசி தனது கயமைத்தனத்தையும் இயலாமைத்தனத்தையும் இன்னொரு தடவை நிருபித்திருக்கின்றது சிங்களப் பேரினவாதமும் தமிழ் துரோக அரசியலும்.
மக்கள் பிடித்துக் கொடுத்த குற்றவாளிகளைக் கூட கோட்டை விடும் கெட்டிக்காரத்தனம் அண்மைக்காலமாக இலங்கைக் காவல்துறையில் அதிகரித்து வருவது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பை எப்படி இத்தகைய திறமையுடைய பொலிசாரிடம் ஒப்படைப்பது என்ற சந்தேகம் நிச்சயமாக எழ வேண்டும். அப்படி இருக்கிறது பொலிசாரின் விவேகமும் வேகமும்.
மாகாண சபைத் தேர்தலை எப்படியாவது நடாத்தியே தீரவேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்துக்கு உரிய பதில் கொடுக்க வேண்டிய சிங்கள அரசு வடக்கில் தேர்தல் நடாத்தினால் ஆட்சி மறுபேச்சின்றி தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடும் என்பதை உணர்ந்து கூட்டமைப்பின் மீதான தனது காழ்ப்புணர்வை கடுமையாக காட்ட ஆரம்பித்திருக்கின்றது.
அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பில் தங்களிடம் பாடம் படிக்க வேண்டும் என வீராப்பு பேசும் சிங்களத் தலைமை, தமிழ்த் தலைமைகள் மற்றும் தமிழ்த் தேசிய வாதிகள் மீது கழிவு ஒயில்களையும் கற்களையும் வீசி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றது.
தமிழர்கள் அறவழியிலும் போராடக் கூடாது என்ற சிங்கள தேசத்தின் எதிர்பார்ப்பு தமிழர்களை வீறுகொள்ள வைக்கும். சர்வதேசம் தமிழ்மக்களின் நியாயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள பாதை வகுக்கும்.
எனவே கல்லெறிகளை கண்டனம் கூறி இடித்துரைக்க மனமின்றி தமிழ்த் தேசியத்துக்கான வலுவான பாதைகளைத் திறந்து விடும் மார்க்கங்களாகப் பார்க்கின்றோம்.
தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் தமிழ்த் தேசிய உணர்வையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாலுள்ள நம்பிக்கையையும் கல்லெறிகளும் கண்டனங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் எதுவும் செய்துவிடாது. மாறாக இன்னும் தமிழர்களை வேகம் கொள்ள வைக்கும்.
Geen opmerkingen:
Een reactie posten