தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

மீள்குடியேற்றம், காணி அபகரிப்பை எதிர்த்து குரல் கொடுத்தோரை மீளாத்துயரத்தில் தள்ள அரசு சதி: சி.பாஸ்க்கரா!!


தீர்வு காண விருப்பம்! ஆனால் துரோகிப் பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்!- ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 06:35.26 AM GMT ]
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வர முடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்.
யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்வு விடயத்தில் விருப்பம் கொண்டுள்ளார். ஆனால் அவரால் கூட பேச்சுக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி எத்தகைய இணக்கப்பாட்டிற்கு அவர் வந்தாலும், துரோகிப்பட்டமே அவருக்கு கட்டப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர் பேச்சுக்கு வருவதை தவிர்த்து வருகின்றார்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எம்.பி. அடுத்த தலைமையை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகின்றார். அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன.
கூட்டமைப்பினர் தீர்வினை இந்தியா பெற்றுத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், உள்ளனர். அது சாத்தியமற்ற விடயமாகும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினர் வருவார்களேயானால் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.
ஆனால் கூட்டமைப்பினர் ஈழம்தான் தமக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

மீள்குடியேற்றம், காணி அபகரிப்பை எதிர்த்து குரல் கொடுத்தோரை மீளாத்துயரத்தில் தள்ள அரசு சதி: சி.பாஸ்க்கரா
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 07:21.17 AM GMT ]
இலங்கையில் போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும், மக்களின் மீள்குடியேற்றம் பூச்சியத்திலே உள்ளது. அத்துடன், காணிபறிப்பு ஏறு வரிசையில் உள்ளவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மண் மீட்புப் போராட்டத்திற்கு எமது கட்சியின் ஆதாரவை தெரிவிப்பதாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்க்கரா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பல ஆண்டுகளாக தாம் பிறந்து, தவழ்ந்த மண்ணில் போர் சூழலால் புலம்பெயர்ந்த மக்கள் அம்மண்ணில் மீள்குடியேற அனுமதிகேட்க, அத்துமீறி குடியிருக்கும் இராணுவம் அடாவடித்தனமாக இருந்து கொண்டு அலட்சியமான மறுமொழி சொல்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஜனநாயக பண்புகள் உள்ளநாட்டிற்கு ஏற்புடையதற்றதாகும்.
மேலும் வடகிழக்கில் மீள்குடியேற்ற மக்களின் காணிகளை அபகரித்து வேறு இன மக்களுக்கு கொடுப்பதையும் மேலும் மேலும் இராணுவத்துக்கு என நிலங்களை அபகரிக்க முயல்வதும் இவ்அடாவடித்தனத்தை அகிம்சை வழியில் தட்டிக் கேட்ட மக்களை அடக்குவதற்காக அவர்களின் வீடுகளை துவேசம் செய்வதும் உரிமை கேட்ட மக்கள் பிரதிநிதிகளை அடக்கமுயல்வதும் உண்மை செய்தியை வெளியிட்ட ஊடகங்களை அடக்குவதும் இப்போது இலங்கையின் ஜனநாயகமாக உருவாகியுள்ளது. இந்நிகழ்வு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அதேவேளை முள்ளியவளையில் மீள்குடியேற்ற மக்களின் வீடுகள் எரித்தவர்களை கைதுசெய்து தண்டனை வழங்குவதுடன் மேலும் இவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உறுதிசெய்யப்பட வேண்டும்.
அதேவேளை இன்றையதினம் நடைபெற இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மண் மீட்பு போராட்டத்திற்கு எமது கட்சியின் ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் அரசு மீள்குடியேற்றத்தில் துரித தன்மையையும் இராணுவம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten